நேற்று கிளம்பும்போது அனைவரையும் யாருக்காவது மொட்டக் கடுதாசி எழுதச் சொல்லி ஒரு டாஸ்க் கொடுத்துவிட்டு சென்றிருந்தார் விஜய் சேதுபதி! இன்று வந்ததும் அந்த விசயத்தில் ஆரம்பித்தார். எதிர்பார்த்தது போலவே அதில் அப்படி ஒன்றும் சுவாரஸ்யமாக ஏதும் நடக்கவில்லை. மற்றபடி போட்டியாளர்களுக்கு, விஜய் சேதுபதி அறிவுரை சொல்வதற்கு ஏற்ற ஒரு நேரப்போக்கு டாஸ்க் இது.
‘பார்த்தீர்களா, நம் மனதில் இருப்பதை எப்படி வெளிப்படுத்தியிருக்கிறீர்கள் என்பதை! இதிலிருந்து என்ன தெரிகிறது? அடையாளம் இல்லாமல் மொட்டைக் கடுதாசி எழுதி, நமது எண்ணத்தை வெளிப்படுத்தும் போது இருக்கிற தைரியம் மற்ற சமயங்களிலும் வேண்டும்! அதுதான் உங்களின் ஆட்டத்தையும், உங்கள் சக போட்டியாளரின் ஆட்டத்தையும் சுவாரசியப்படுத்தும். உங்களின் நேர்மையான வெளிப்படையான தன்மையும் பார்வையாளர்களுக்குத் தெரியும், நீங்கள் யாரை விமர்சிக்கிறீர்களோ அவர்கள் தங்களைத் திருத்திக் கொள்ள ஒரு வாய்ப்பும் கிடைக்கும். அதை விடுத்து டிப்ளமேட்டிக்காக இருப்பதில், உங்களுக்கோ இந்த விளையாட்டுக்கோ எந்தப் பயனும் இல்லை!’ என்றார்.
நேரப் போக்கு டாஸ்க் 2: அடுத்து ஒரு குறும்படம் போட்டுக் காண்பித்தார்கள். அதில் பாருவின் சமையல் லீலைகள் காண்பிக்கப்பட்டன. உண்மையில் தனியாக பாரு இந்த வாரம் சமைத்துப் போட்டது பாராட்டுக்குரியது என்றாலும், அதைச் சாப்பிட்டு உயிரைக் கையில் பிடித்துக்கொண்டு ஒரு வாரத்தை ஓட்டியதற்காக மற்ற போட்டியாளர்களைத்தான் முதலில் பாராட்ட வேண்டும்! இந்தக் குறும்படத்தில் கூட காண்பிக்காத ஒரு காட்சி நினைவுக்கு வருகிறது. அதுதான் பீட்ரூட் சோறு! ’முறைமாமன்’ படத்தில், ’ஆக்கிய சோறு வெள்ளையாக இருந்து தானே பார்த்திருக்கிறாய் தம்பி, இப்படி சிவப்புக் கலரில் பார்த்திருக்கிறாயா?’ என்று கவுண்டமணி, ஜெயராமைப் பார்த்துக் கேட்பார். அப்படியொரு சிகப்பு கலரில் ஒரு சோற்றை பொங்கித் தட்டி இருந்தார் பாரு! அதைத் திங்க முடியாமல் போட்டியாளர்கள் திணறியதையும் இந்தக் குறும்படத்தில் சேர்த்திருந்திருக்கலாம்!
நேரப் போக்கு டாஸ்க் 3: இத்தனை நாட்களாகிவிட்ட நிலையில், இனி நீங்கள் யாரோடு சேர்ந்து விளையாடுவதும், யாருடைய பழக்கத்தை துண்டித்துக் கொள்வதும் உங்களுக்கு நல்லது என்று நினைக்கிறீர்கள் என்ற கேள்வியைக் கேட்டார் விஜய் சேதுபதி!
இந்த ஆட்டத்தை போட்டியாளர்கள் பெரும்பாலும் சின்சியராகவே விளையாடியதாக தோன்றியது. ரம்யா, விக்ரம் போன்றோர், பாருவுடன் நட்பை நீட்டிக்க வேண்டும் என்று சொன்னது, பாரு, அரோராவிடம் நட்பை நீடிக்க வேண்டும் என்று சொன்னது, அமித், வியானாவைத் துண்டிக்கவேண்டும் என்று சொன்னது, வியானா, சுபியைத் துண்டிக்க வேண்டும் என்று சொன்னது, சாண்ட்ரா சபரியோடு நட்பை நீட்டிக்க வேண்டும், கமரு, அரோராவுடன் நீட்டிக்கச் சொன்ன காரணம் என்று சொன்னதெல்லாம் எதிர்பாராததாகவும், சுவாரசியமாக இருந்தது.
அடுத்து விஜய் சேதுபதி, நாமினேஷனில் இருந்தவர்கள் ஒவ்வொருவருக்கும் ஒரு அறிவுரை கொடுத்து ஸேவ் செய்து கொண்டிருந்தார். இந்த சுருக்கமான அறிவுரை சிறப்பாகவே இருந்தது. முடிவில் எந்த எவிக்ஷனும் இல்லை என்று கொண்டுவந்த சீட்டைக் கிழித்துப் போட்டுவிட்டுக் கிளம்பிவிட்டார். வழக்கமாக ஐம்பதிலிருந்து, எழுபது நாட்களுக்குள் இப்படியாக ஒரு வாரத்தை எவிக்சன் இல்லாமல் ஒப்பேற்றி விடுவார்கள் என்பது நாமறிந்ததே! அதுவேதான் நடந்திருக்கிறது. இன்று வழக்கத்தை விட அதிகமான நேரப்போக்கு டாஸ்க்குகள் இருந்த போதே, இது நாம் கணித்ததுதான்!
அடுத்து, ஆதிரை மீண்டும் வீட்டுக்குள் வந்தார். ஆனால், இது தற்காலிக எண்ட்ரிதான். வைல்ட் கார்டு என்ட்ரியாக இருக்க வாய்ப்பில்லை. இதுபோல இதற்கு முன்னாலும் நடந்திருக்கிறது. இப்படியான ஆட்டக்காரர்கள் ஓரிரு வாரங்கள் தாக்குப்பிடிப்பார்கள். ஆனால், இந்தக் கிளாரிடியை வழக்கம் போல பிக்பாஸும் வெளிப்படையாக சொல்லாமல் பொத்தினாப்பலயே இருந்துகொண்டார். அதற்குள் விக்ரம், ’இது வைல்ட் கார்டு என்ட்ரியாக இருக்குமோ? அப்படியானால் ஆதிரைக்கு எவ்வளவு பெரிய பலம்? இது அன்ஃபேர் இல்லையா?’ என்பது போல அவசியமின்றி புலம்பிக் கொண்டிருந்தார். ஆதிரையின் எண்ட்ரி, எஃப்ஜேவுக்கு ஆப்பாக அமையுமா என்பது வரும் நாட்களில் தெரியவரும். பார்ப்போம்!