Vijaysethupathi entry @jiohotstar
BiggBoss 9

மரியாதையை இழந்து கொண்டிருக்கிறாரா விஜய் சேதுபதி? #Biggboss Day 55

விஜய் சேதுபதி வந்ததும், முதல் கேள்வி எஃப்ஜேவின் ’வீட்டுத்தல’ பங்களிப்பைப் பற்றி இருந்தது. முதலில் எழுந்த அரோரா, ’பள்ளிக்கூடம் டாஸ்கில் ஒரு உதவி வார்டனாகவும் அவன் ஒன்றும் செய்யவில்லை.

ஆதி தாமிரா

வெள்ளிக்கிழமை எபிசோடில் வியானா, எஃப்ஜே ஆகியோரின் காதல் காட்சி காண்பிக்கப்பட்டது. இந்த பிக்பாஸ் வீட்டுக்குள் என்னவெல்லாம் நடக்கிறது என்பதை இத்தனை நாட்கள் உள்ளே இருந்தும் இவர்கள் புரிந்துகொள்கிறார்களா? அல்லது இவர்கள் தங்கள் மூளையை நல்ல விலைக்கு அடகு வைத்துவிட்டு வந்துவிடுகிறார்களா என்று நமக்கு புரியவில்லை. ஒருபுறம் எல்லோரும் தங்களுக்கு வெளியே ’ஆள்’ இருக்கிறது என்றும் சொல்லிக் கொள்கிறார்கள். ஆனால், உள்ளேயும் தங்கள் ரொமாண்டிக் குதிரைகளைப் வானில் சிறகடித்துப் பறக்க விடுகிறார்கள். அது கூட பரவாயில்லை, கொஞ்ச நாட்களுக்கு முன்பாகத்தான் ஆதிரை என்ற பெண்ணுடன் லவ் கன்டென்ட் செய்து அவரை எஃப்ஜே வெளியேற்றியதைப் பார்த்த பின்னும் இந்த வியானா, வேறு ஆள் கிடைக்காமல் அவருடனேயே தனது ஃபீலிங்ஸை காட்டிக் கொண்டிருந்ததை என்னவென்று சொல்வது? ’நீ என்னைத் தொடுகையில், எனக்கு வயிற்றில் பட்டாம்பூச்சி பறக்கிறது, இதயத்துடிப்பு அதிகரிக்கிறது. ஆனால் இதெல்லாம் எனக்கு வேண்டாம்’ என்று மணிரத்னம் பட நாயகி போல காதல் டயலாக் பேசிக் கொண்டிருக்கிறார். இந்த வீட்டுக்குள் அடைந்து கிடப்பதால், இவர்கள் புத்திபேதலித்துவிட்டார்களா அல்லது பார்த்துக்கொண்டிருக்கும் நம்மை புத்திபேதலிக்க வைக்கிறார்களா என்பதே புரியவில்லை.

இதே எண்ணம் நமக்கு மட்டுமில்லாமல் வீட்டுக்குள் இருக்கும் பிற போட்டியாளர்களுக்கும் இருந்திருக்கிறது. அதற்கு சான்றாக கனி வந்து இந்த விஷயத்தை எஃப்ஜேவிடம், ’ஏதாவது தப்பாகப் போய்விடப் போகிறதுடா, வளர்ற பையன்’ எனும் அக்கறையோடு விசாரித்துக் கொண்டிருந்தார். அதற்கு, 'நீ இப்படிப் பூசும்போது நான் அப்படி பூசுகிறேன், நீ அப்படிப் பூசும்போது நான் இப்படிப் பூசுகிறேன்' என்பது போல எஃப்ஜே பதில் சொல்லிக் கொண்டிருந்தார். கடைசியில் கடுப்பான கனி, 

’நீங்க ரெண்டு பேரும் பண்ணக்கூடிய கன்டென்ட் தப்பா போகாது என்று உனக்கு நம்பிக்கை இருக்கிறதா? அப்படியே தப்பாப் போனாலும் அதன் பின்விளைவுகளை நீ சந்தித்துக் கொள்வாயா?’ என்று தெளிவான ஒரு பதிலைக் கேள்வியாகக் கேட்டபோது, அதற்கு ’ஆமாக்கா, ஆமாக்கா’ என்பது போல பலமாக மண்டையை ஆட்டினார் எஃப்ஜே!

விஜய் சேதுபதி வந்ததும், முதல் கேள்வி எஃப்ஜேவின் ’வீட்டுத்தல’ பங்களிப்பைப் பற்றி இருந்தது. முதலில் எழுந்த அரோரா, ’பள்ளிக்கூடம் டாஸ்கில் ஒரு உதவி வார்டனாகவும் அவன் ஒன்றும் செய்யவில்லை. பிரச்சினைகள் நடந்த போது வீட்டு தலையாகவும் அவன் ஒன்றும் செய்யவில்லை’ என்று தெளிவாக தன் கருத்தை எடுத்து வைத்தார். சில வாரங்களுக்கு முன்புதான் நாமே கூட அரோராவின் விளையாட்டு சரியில்லை, விரைவில் வெளியேறக்கூடும் என்று கணித்தோம். ஆனால், இப்போது அரோராவின் பங்களிப்பு சிறப்பாக மாறியிருக்கிறது. குறிப்பாக, இந்த வீட்டில் தமிழையும், ஆங்கிலத்தையும் அழகாகவும், தெளிவாகவும் பேசக்கூடிய ஒரே நபராக இருக்கிறார். உச்சரிப்பும் நன்றாக இருக்கிறது. சரியான பட வாய்ப்புகள் அமைந்தால், ஒரு நல்ல ஹீரோயினாக வலம் வரவும் கூட வாய்ப்பிருக்கிறது.

Vikkals Vikram

வியானா, அவரது கருத்தைச் சொன்னபோது ஒரு சிறிய வார்த்தை விளையாட்டு ஆகிப்போனது. வியானா,

‘போன வாரம் எஃப்ஜே, வீட்டுத்தலையாக சிறப்பாக பெர்ஃபார்ம் பண்ணினார். இந்த வாரம், பிக்பாஸ் இந்த டாஸ்கை 24 மணி நேர டாஸ்க்காக அறிவித்துவிட்டதால், ஏதாவது பெரிய பிரச்சனை ஏற்பட்டால்தான் வீட்டுத்தலை உள்ளே வர வேண்டி இருக்கும். ஆனால், அப்படி எந்த ஒரு பிரச்சினையும் இந்த வாரம் நடக்கவில்லை என்பதால், அவர் உதவி வார்டனாக மட்டுமே அவரது வேலையை செய்து கொண்டிருந்திருந்து விட்டார். டாஸ்க்குக்குள் இருவர் பேசிக்கொண்டிருக்கும் போது அதற்குள் தலயாக அவர் உள்ளே வந்தால் கேம் பாதிக்கும்…’

என்று சொல்லிக் கொண்டிருக்கும்போது விஜய் சேதுபதி குறுக்கிட்டு, ’உங்கள் பார்வையில், ஒன்று அவர் சரியாக விளையாடினார் என்று சொல்லுங்கள், அல்லது சரியாக விளையாடவில்லை என்று சொல்லுங்கள்! அதை விட்டுவிட்டு எஃப்ஜேவுக்கு வக்கீல் போல ஏன் பேசிக் கொண்டிருக்கிறீர்கள்? அதற்கான அவசியம் என்ன?’  என்று மடக்கினார். அதாவது வியானா செய்யும் லவ் கண்டெண்டை இந்த இடத்தில் எக்ஸ்போஸ் செய்ய சரியான வாய்ப்பு என்று அவர் கருதியிருக்கலாம். எல்லோரும் ஆரவாரித்தார்கள். ஆனால், வியானா, கழுவுகிற மீனில் நழுவுகிற மீன் போல, ’நான் இன்னும் முடிக்கவில்லை, ப்ளீஸ் சார்’ என்று ரிக்வஸ்ட் செய்து,

‘இதையெல்லாம் தாண்டி நிறைய பேர் தூங்கிக் கொண்டிருக்கும் போது, அவர் எழுப்பிவிடவே இல்லை, அவரும் தூங்கிக் கொண்டிருந்தார். அதோடு, இரண்டாவது முறையாக தலை ஆகிவிட்டோம் என்ற கர்வத்தில், ரொம்பவும் அலட்சியமாக நடந்துகொண்டார் என்று தோன்றியது’ என்று ஒரு அந்தர் பல்டி அடித்தார்! ஸ்பாண்டேனியஸாக அவர் இதைச் செய்திருந்தால் உண்மையில் திறமைசாலிதான்.  விஜய் சேதுபதி கூட சற்று ஆச்சரியமாக, ’என்ன இருந்தாலும் நீங்கள் எஃப்ஜேவுக்கு ஆதரவாக பதில் சொல்லியது போலத்தான் இருந்தது, உட்காருங்க’ என்று முடித்துக் கொண்டார்.

அடுத்து எழுந்த அத்தனை பேரும், சொல்லி வைத்ததைப் போல அரோராவைப் போலவே எஃப்ஜேவைக் கழுவி ஊற்றினார்கள். விசே, எஃப்ஜேவை எழுப்பி அதற்கு பதில் சொல்லச்சொன்னார். அதற்கு என்ன பதில் சொல்லமுடியும்? எஃப்ஜே,

Viyana and Fj sitting together

’எனக்கு புரியல ண்ணா, எனக்கு தெரியல ண்ணா, சாரி ண்ணா, கன்ஃப்யூஸ் ஆயிட்டன் ண்ணா, நானா ஒரு கேரக்டர் பண்ணேன் ண்ணா, கொழம்பிட்டன் ண்ணா, சரி ண்ணா, சாரி ண்ணா, தெரியல ண்ணா, புரியல ண்ணா’

என்று நமக்கே கடுப்பாகும் படியான, ஒரு மோசமான குரல் மற்றும் பாடி லேங்குவேஜில் பதில் சொல்லிக் கொண்டிருந்தார். கடுப்பான விஜய் சேதுபதி,

‘உங்க பிரண்டுகிட்ட பேசற மாதிரி, இந்த மாதிரி என்கிட்ட பேசக்கூடாது எஃப்ஜே, நீங்க பேசிக்கிழிச்சது போதும், உக்காருங்க!’

என்று கண்டித்தார். அதற்கும் எஃப்ஜே வேகமாக மண்டையை ஆட்டியபடி, ‘சரிங்க ண்ணா’ என்றதும் கடுப்பின் உச்சத்துக்கே போய்விட்டார். ’நான் விஜய் சேதுபதி மட்டுமே அல்ல, முதலாவதாக இந்த நிகழ்ச்சியின் ஹோஸ்ட்! ஒரு ஹோஸ்ட்டிடம் மரியாதை இல்லாமல் பேசினால், ரெட் கார்ட் கொடுத்து வெளியே தூக்கிப் போட்டு விடுவேன், ஜாக்கிரதை!’ என்று சிம்பிளாக சொல்லியிருந்தால் அது அவருக்கு மட்டுமல்ல, அனைவருக்கும் புரிந்திருக்கும்! அதை விட்டுவிட்டு கதாகாலட்சேபம் செய்து கொண்டிருந்தார் விஜய் சேதுபதி! இதேதான் இதற்கு முன்னால் பிரஜின் விஷயத்திலும் நடந்தது. முதலில், விஜய் சேதுபதி இந்த நிகழ்ச்சியிலிருந்து இன்னும் நிறைய கற்றுக்கொள்ள வேண்டியது இருக்கிறது என்று தோன்றுகிறது!