‘எப்போதடா இந்தப் பள்ளிக்கூடம் டாஸ்க் முடியும்’ என்ற வெறுப்பில் இருந்தாலும், பாரு தன் கடமையில் கண்ணாய் இருந்து கிச்சனைப் பார்த்துக்கொண்டிருந்தார். முந்தின நாள் இரவு கிச்சனைச் சரியாக கிளீன் செய்து வைத்திருப்பார் போலிருக்கிறது. இதை வைத்து விக்ரம், அமித்துடன் இணைந்து ஒரு விளையாட்டைத் திட்டமிட்டார். அதாவது ’சேலையை ஒளித்து வைத்ததற்கே அத்தனைக் கடுமையாக ரியாக்ட் செய்த பாரு, அவர் செய்த வேலைக்கான பாராட்டை நாம் எடுத்துக் கொண்டால் எப்படி ரியாக்ட் செய்கிறார் என்று பார்க்கலாம், ஏதாவது சுவாரசியமாக நடக்க வாய்ப்பிருக்கிறது’ என்பது அவர்களது திட்டம்.
திட்டப்படி ஒரு சிலர் பாருவின் கிச்சன் பணியை பாராட்டவும், ’பாருவை வேலை வாங்கியதே நான்தான், என்னால்தான் இந்த வேலைகள் இவ்வளவு சிறப்பாக நடந்திருக்கின்றன’ என்று சொல்லி பாருவை கடுப்பேற்ற முயற்சி செய்தார் விக்ரம். ஆனால், எதிர்பார்த்தது போல எதுவும் நடக்காமல், ஜென் மோடிலிருந்த பாரு, ’ஆமாம், விக்ரம் சொல்லித்தான் செய்தேன். அதனாலென்ன? பால் வேண்டுமா பிள்ளைகளா?’’ என்பது போல பதிலளித்து கதாபாத்திரத்துடன் ஒன்றிவிட்டார். நாமும் கூட இதை எதிர்பார்க்கவில்லை. இதனால், விக்ரமின் திட்டம் நசநசத்துப் போனது.
தொடர்ச்சியாக மூன்றாவது நாளாகவும், வியனாவின் கிரைம் ரேட் கூடிக் கொண்டே இருந்தது. கனியிடம் பேசிக் கொண்டிருந்த விக்ரம் மீது தண்ணீரை ஊற்றி விளையாடினார். எரிச்சலடைந்த விக்ரம், பதிலுக்கு அவரைப் பிடித்து முகத்தில் அரை டம்ளர் தண்ணீரை அடித்தார். இதற்கு எங்கிருந்தோ வந்த எஃப்ஜே, ’இதென்ன தண்ணீர் ஊற்றி விளையாட்டு? இதெல்லாம் கொஞ்சம் கூட நல்லா இல்லை விக்ரம்’ என்று வியானாவுக்கு சப்போர்ட் செய்து கொண்டு வந்தார். எஃப்ஜே, இந்த வாரம் ஒரு நல்ல கேப்டனாகவும் நடந்து கொள்ளவில்லை, பள்ளிக்கூடம் டாஸ்கிலும் ஒழுங்காக விளையாடவில்லை. வியானா பின்னாலேயே சுற்றிக்கொண்டிருந்தது மட்டும்தான் இந்தாள் செய்த ஒரே வேலை! ஒருவேளை வியானா பண்ணின கூத்துகளுக்கு அவர் ஒர்ஸ்ட் பெர்ஃபார்மராக தேர்ந்தெடுக்கப்பட்டு ஜெயிலுக்கு போவது நிச்சயம். அப்படி நடந்துவிட்டால், அவருக்குக் கம்பெனி கொடுக்க, நாமும் கூடவே போய்விட வேண்டியதுதான் என்று திட்டமிட்டு இதைச் செய்வது போலிருந்தது.
அடுத்து மாணவர்கள் அனைவரையும் ஆசிரியர்கள் ஒரு எஸ்கர்ஷன், அதாவது பிக்பாஸ் மியூசியத்துக்குக் கூட்டி செல்ல வேண்டும் என்றொரு டாஸ்க் நடந்தது. அந்த மியூசியத்தில் இதற்கு முந்தின சீசன்களில் நடந்த சில போட்டோக்களை வைத்து வைத்திருந்தார்கள். அதை மாணவர்களுக்கு ஆசிரியர்கள் விளக்கிச் சொல்ல வேண்டும் என்பது டாஸ்க்! ஏற்பாடு என்னவோ எல்லாம் பலமாகத்தான் இருந்தது. ஆனால், இதென்ன வளவளவென்று… சுவாரஸ்யமாக ஒன்றுமே நடப்பதாகத் தெரியவில்லையே என்று நாம் நினைத்தால், அதுவேதான் அவர்களுக்கும் தோன்றியிருக்கும் போலிருக்கிறது. நான்கு போட்டோ பற்றிப் பேசியதை மட்டும் காண்பித்துவிட்டு மற்றதை எடிட்டில் தூக்கிப் போட்டுவிட்டார்கள்.
அடுத்து, பாரு தலைமையிலான வார்டன் டீம் சிறப்பாக செயல்பட்டதா, அல்லது பிரஜின் தலைமையிலான பள்ளிக்கூடம் சிறப்பாக செயல்பட்டதா என்ற கேள்விக்கு மாணவர்கள் பதில் அளித்தார்கள். அத்தனை பேரும் சந்தேகத்துக்கிடமின்றி பள்ளிக்கூடத்துக்கு ஓட்டு போட்டார்கள். அடுத்து மாணவர்களுக்கான பெஸ்ட் பெர்ஃபார்மன்ஸ் தேர்வு நடந்தது. ரம்யாவுக்கும், விக்ரமுக்கும் சம ஓட்டுகள் கிடைத்த நிலையில், கடைசியாக ஓட்டுப் போட வந்த பாரு, விக்ரம் மீது இருந்த தனது பர்சனல் வெஞ்சன்ஸ் காரணமாக ரம்யாவுக்கு ஓட்டு போட்டு ரம்யாவை பெஸ்ட் பெர்ஃபார்மராக தேர்ந்தெடுத்தார்.
அடுத்து, சிறந்த ஆசிரியருக்கான பெர்ஃபார்மர் தேர்வு! இதில், அனைவருக்குமே ஓட்டுகள் மாறி மாறிக் கிடைத்தாலும், சான்ட்ராவும், திவ்யாவும் பிரஜினுக்கு ஓட்டுப் போட்டதால் பிரஜின் தேர்வு செய்யப்பட்டார். என்னதான் இந்த வன்மக்குழு இந்த வாரம் பதுங்குகுழியில் இருந்தாலும், இந்த இடத்தில் தன் வேலையைக் காட்டிவிட்டது. அடுத்து வந்த ஒர்ஸ்ட் பெர்ஃபாமர் தேர்வில் எஃப்ஜே, தேர்ந்தெடுக்கப்பட்டதால் அவரும் தல போட்டியில் இருந்து தகுதி நீக்கம் செய்யப்பட்டார். இதனால், தல போட்டியில் பிரஜினுக்கு எதிராக ரம்யா மட்டுமே இருக்கிறார். இந்தப் பிரஜினை எப்படியாவது அடுத்த வாரம் ’தல’ ஆக்கிவிட வேண்டும் என்பது சான்ட்ராவின் விருப்பம் மட்டுமல்ல, பிக்பாஸின் விருப்பமாகவும் இருக்கும் போலத் தெரிகிறது. எல்லா நகர்வுகளும் பிரஜினுக்கு சாதகமாகவே நடந்து கொண்டிருக்கின்றன.
ஆசிரியர்கள் பக்கம் ஒர்ஸ்ட் பெர்ஃபார்மராக சந்தேகத்துக்கிடமின்றி எஃப்ஜே தேர்ந்தெடுக்கப்பட்டதும், மாணவர்கள் பக்கம் ஒர்ஸ்ட் பெர்ஃபார்மர் தேர்வு நடந்தது. வியானா தேர்ந்தெடுக்கப்படுவார் என்று நாம் நினைத்துக்கொண்டிருந்தபோது, ஆசிரியர்களின் எண்ணிக்கைக் குறைவு சிக்கலை ஏற்படுத்திவிட்டது. கனி, எதையும் திட்டமிடாமல் வினோத்தைச் சொல்ல, பாரு அவரது ரிவெஞ்ச் கேமுக்காக திவ்யாவைச் சொல்லிவிட ஆட்டம் திசை மாறிவிட்டது. டிசைடிங் ஓட்டு எஃப்ஜேவிடம் சிக்க, அவர் வியானாவை எளிதாக தப்பவிட்டுவிட்டு, வினோத்தை மாட்டிவிட்டுவிட்டார்.
வினோத்தும், எஃப்ஜேவும் சிறைக்குச் சென்றார்கள். சிறைக்குப் போவதில் யாருக்கும் எந்த பிரச்சினையும் இல்லை, விட்டால் ஆர்வமாக விரும்பிக் கேட்டுச்செல்வார்கள் எனும் சூழல் நிலவியதால், நிஜ சிறையில் கல்லுடைக்கும் வேலை தருவதைப்போல, ஒரு மாலைக்கு 50 மணிகள் வீதம் 200 மாலைகள் செய்ய வேண்டும் என்றொரு சிறைவேலை தரப்பட்டது. அதன்பின் இந்தப் பள்ளிக்கூடம் டாஸ்க் முடித்துவைக்கப்பட்டது. எல்லோருமாகச் சேர்ந்து பிரஜினை தல போட்டியில் ஜெயிக்க வைக்க எல்லா ஏற்பாடுகளையும் செய்து வைத்திருக்கிறார்கள். அந்தாள், அதில் என்னக்கூத்து பண்ணப்போகிறார் என்று நாளைதான் தெரியும்!