Amit Bhargav and Vj Paaru @Jiohotstar
BiggBoss 9

மீண்டும் தலைதூக்கிய பாருவின் ராஜ்ஜியம்! #Biggboss Day 53

"விளையாட்டு விளையாட்டா இருக்கணும். இது விளையாட்டு மாதிரி தெரியல, இது ரொம்ப சீரியஸா இருக்கு. ஒருத்தரோட பர்சனல் விஷயங்களில் விளையாடுவதை விளையாட்டா எடுத்துக்க முடியாது!"

ஆதி தாமிரா

இரண்டு வாரங்களாக அடங்கியிருந்த பாருவின் ராஜ்ஜியம், மீண்டும் தலைதூக்கியிருக்கிறது. நேற்றைப் போலவே இன்றும் சின்னச்சின்ன பஞ்சாயத்துக்கள் நடந்தன. ஆனால் அவையனைத்துமே பாருவையே மையம் கொண்டிருந்தன.

வார்டன் வசந்திக்கும், ஆசிரியர் தர்மலிங்கத்திற்கும் தொடர்பு என்று நோட்டீஸ் போர்டில் யாரோ எழுதி வைத்திருந்தார்கள். வேறு யார்? நம்ம வியானாதான்! அதற்கே, பாரு உள்ளுக்குள் கொதித்துக் கொண்டிருந்தார். இது போதாது என்று விக்ரம் ஒருபுறம், பாருவின் சேலையை மறைத்து வைத்து மெட்டல் டிடெக்டர் விளையாட்டு விளையாடலாம் என்று ஒரு திட்டம் போட்டு வைத்திருந்தார். எஃப்ஜேவியின் ஒத்துழைப்புக் குறைவாக இருந்ததால், கிச்சனில் தனி ஆவர்த்தனமாக தன் சமையல் வல்லுநர் வேலையைப் பார்த்தே பிசிக்கலாகவும், மெண்டலாகவும் டயர்டு ஆகி கொதி நிலையில் இருந்த பாருவுக்கு இந்த சேலை மேட்டர் வசதியாக மாட்டிக் கொண்டது. நேற்றைய டயலாக்கை அப்படியே எடுத்து விட்டார்.

’விளையாட்டு விளையாட்டா இருக்கணும். இது விளையாட்டு மாதிரி தெரியல, இது ரொம்ப சீரியஸா இருக்கு. ஒருத்தரோட பர்சனல் விஷயங்களில் விளையாடுவதை விளையாட்டா எடுத்துக்க முடியாது. சேலை என்பது ரொம்ப ரொம்ப பர்சனலான விஷயம். பிரஜின், பேண்டை எடுத்து ஒளித்து வைத்ததும், அவர் கைலி கட்டிக்கொண்டு வந்தார். அது போல நான் என்ன உள்பாவாடையுடனா வரமுடியும்? நான் எல்லாரையும் கூட்டி வைத்துக் கொண்டு, என் சேலையைக் கொடுங்கள் என்று கெஞ்ச வேண்டுமா? எனக்கு அது கூச்சமாக இருக்கிறது, அவமானமாக இருக்கிறது, அசிங்கமாக இருக்கிறது’

ஆண்கள் கைலியில் இருப்பதையும், பெண்கள் உள்பாவாடையோடு இருப்பதையும் ஒன்றாக ஒப்பிட்டுப்பார்க்க பாருவால் மட்டும்தான் முடியும். கொடுக்கப்பட்ட சேலை இல்லை என்றால் வேறு சேலையை எடுத்துக் கட்டிக்கொள்ளலாம் அல்லது வேறு ஆடையை உடுத்திக் கொள்ளலாம். இதில் என்ன அவமானம் என்பதோ, இதற்கு ஒப்பாரி வைக்க வேண்டிய அவசியம் என்ன என்பதோ நமக்குப் புரியவில்லை. இது பாருவுக்கு சமையலறை கொடுத்த அழுத்தம் அது என கணிக்க முடிகிறது. இத்தனை பேருக்கு சமைப்பது, கிச்சனைப் பராமரிப்பது, இவ்வளவு பாத்திரங்களை கழுவி வைப்பது போன்ற வேலைகளும், அது மட்டுமின்றி சமையல் எப்படி செய்ய வேண்டும் எதுவுமே தெரியாததால், ரெசிபிக்காக அடுத்தவர்களை எதிர்பார்த்து நிற்க வேண்டிய மன அழுத்தமும் சேர்ந்து அவரது ஈகோ அவரை இப்படி ஆக்கியிருக்கிறது. 

நல்லவர்களாக இருந்தால், ’ஓஹோ, கிச்சனை நடத்துவது என்றால் இத்தனை காரியங்கள் அதில் இருக்கிறதா, கனியையும் மற்றவர்களையும் சமைப்பது குறித்து எவ்வளவு அவதூறுகளைச் சொல்லியிருக்கிறோம். அதெல்லாம் தவறாச்சே…’ என்று சிந்திப்பார்கள். ஆனால், பாருவால் அப்படி சிந்திக்க முடியாது, பதிலாக ‘எல்லோரும் கூட்டுச் சேர்ந்து தம்மை பழிவாங்குகிறார்கள்’ என்றுதான் சிந்திப்பார்.

Classroom

அடுத்து, புகார்ப் பெட்டியிலிருந்த கடிதங்களை வாசித்தார்கள். இங்கே, ஒரு விஷயத்தை நாம் கவனிக்க வேண்டும். முதலில், ’கமரு என்ற மாணவனையும், வசந்தி மேடத்தையும் பிரித்து அவரது வாழ்க்கையில் விளையாடினார் அரோரா என்ற மாணவி’ என்று ஒரு கடிதம் வாசிக்கப்பட்ட போது அரோரா உட்பட எல்லோரும் சிரித்துக் கொண்டிருந்தார்கள். பாருவுக்கும் மகிழ்ச்சி தாங்க முடியவில்லை, சிரித்துக் கொண்டாடினார். ஆனால், அதற்கு அடுத்த கடிதத்திலேயே ’வார்டன் வசந்தி ஆசிரியர் தர்மலிங்கத்தை கைக்குள் போட்டுக் கொண்டார்’ என்று எழுதியிருந்தது. அதை வாசித்தவுடன் பார்வதியின் சிரிப்பு எங்கே போனது என்றே தெரியவில்லை. எல்லோரும் ஒருமுறை சிரித்துவிட்டு அதைக் கடந்து போய் விட்டனர். ஆனால், பாருவால் அதைக் கடந்து போக முடியவில்லை. ஒவ்வொருத்தரிடமும் ஒவ்வொரு இடமாகப் போய், இதே பிரச்சனையை மீண்டும் மீண்டும் பேசி நியாயம் கேட்டுக் கொண்டிருந்தார்.

’இந்த வார்த்தையைக் கவனித்தீர்களா? நல்லாக் கவனியுங்கள். வசப்படுத்தி! வசந்தி, தர்மலிங்கத்தை வசப்படுத்தினார், வசப்படுத்தி… அந்த வசப்படுத்தி! பாருங்க சார், இது என்னுடைய கேரக்டரையே அசாஸினேட் பண்ற மாதிரி இருக்கு. இது விளையாட்டே இல்லை சார். விளையாட்டு விளையாட்டா இருக்கணும். இது விளையாட்டு மாதிரியே தெரியல, இது ரொம்ப சீரியஸா இருக்கு. ஒருத்தரோட பர்சனல் விஷயங்களில் விளையாடுவதை விளையாட்டா எடுத்துக்க முடியாது. .’

கேரக்டர் அஸாஸினேசனைப் பற்றியெல்லாம் யாரு பேசுவது என்று பாருங்கள் நண்பர்களே! அஸாஸினேசனில் ஏதாவது படிப்பு இருந்தால், அதில் கௌரவ டாக்டர் பட்டம் தரப்பட வேண்டிய முதல் நபரே பாருதான்! 

ஆனால், இந்தப் பிரச்சினையில் ஒருவராலேயும் அவரை அமைதிப்படுத்த முடியவில்லை! பிரஜின், சபரி எல்லோரும் தெறித்து ஓடினார்கள். ஒரு கட்டத்தில், அமித் தாங்க முடியாமல் கடுப்பாகி, ‘பாரு, இங்க பாரு, அவங்களாவது ஒரு முறைதான் சொன்னாங்க, நீ அதை பத்து முறை சொல்லி, மீண்டும் மீண்டும் ரிஜிஸ்டர் பண்ணிகிட்டு இருக்கே, இது கொஞ்சம் கூட நல்லா இல்லை, எனக்கும் ஃபேமிலி இருக்கு’ என்று சொல்லிப் பார்த்தார். அதற்கு, ’சார் அவங்க அப்படி எழுதினது உங்களுக்கு தப்பா தெரியல, நான் அதைச் சொல்லிக் காண்பிக்கிறது தப்பா தெரியுதா?’ என்று அதற்கும் மல்லுக்கட்டிக் கொண்டிருந்தார்.

அதன் பிறகு இந்த பஞ்சாயத்து ஆலமரத்தடிக்கும் வந்தது. கமருதீன் இந்தப் பிரச்சினையை ஜாலியாக எடுத்துக் கொண்டதைப் பார்த்த பாரு, குழப்பமாகி அவரது அப்ரோச்சை மாற்றிக்கொண்டார். கமரு, வினோத் எல்லோரும் இதை வைத்துக் காமெடி செய்யவும் அனைவரும் சிரிக்க ஆரம்பித்து விட்டார்கள். இதை இன்னும் இழுத்துக் கொண்டு போனால் நாம் டேமேஜ் ஆகி விடுவோம் என்று வேறு வழி இல்லாமல், பாருவும் சிரிக்க ஆரம்பித்தார். ’ஏன்ங்க இந்தப் பிரச்சினையை இந்த அளவுக்குப் பெரிதாக்கினீர்கள்?’ என்று கேட்டபோது, ’ஐயோ, நான் எங்க பெரிதாக்கினேன், நீங்கள்தான் பெரிதாக்கி விட்டீர்கள், எனக்கு இது ஒரு பிரச்சனையே இல்லை’ என்று ஒரு குண்டைத் தூக்கிப்போட்டார். கந்தர்வகோட்டை சமஸ்தானமே ஆடி போனது போல அத்தனை பேரும், அதிர்ச்சியில் ஆடிப்போனார்கள்!

Prajin angry scenes

வியானாவின் பங்களிப்பு இந்த டாஸ்க்கைப் பொருத்தவரைக்கும் அளவு மீறிப் போய்க் கொண்டிருக்கிறது. 'நாம் இதுவரை எந்த விஷயத்துக்குமே கண்டிக்கப்படவில்லை, நாம் எது செய்தாலும் அது பாராட்டப்படுகிறது' என்ற எண்ணம் தரக்கூடிய தைரியம்! இந்தப் பள்ளிக்கூட டாஸ்க்கில் அவராகவே ஒரு ரௌடி மாணவி என்பது போல கற்பனை செய்து கொண்டு தேவையில்லாத வேலைகளில் ஈடுபட்டுக் கொண்டிருந்தார். அது எல்லை மீறிப் போய்க் கொண்டிருந்தது. அதன் தொடர்ச்சியாக விக்ரமுடன் ஏதோ விளையாடிக் கொண்டே, பிக்பாஸ் கொடுத்து விட்ட டாஸ்க் லெட்டரையே துண்டு துண்டாகக் கிழித்து வீசினார். விக்ரம் கொதித்தெழுந்ததும், அது பிக்பாஸ் லெட்டர் என்று நான் கவனிக்கவில்லை என்று ஒரு உருட்டு உருட்டி, கேமரா முன்னால் மன்னிப்பு கேட்டுத் தப்பித்துக் கொண்டார். இந்த வாரம் விஜய் சேதுபதியிடம் வாங்கிக்கட்டப்போவது வியானா என்று தோன்றுகிறது.

திவ்யாவையும், சான்ட்ராவையும் இந்த பள்ளிக்கூட டாஸ்க்கில் எங்கு இருக்கிறார்கள் என்றே கண்டுபிடிக்க முடியவில்லை. அந்த அளவுக்கு பதுங்குகுழி மோடுக்கு போயிருந்தார்கள். இன்னொரு பக்கம், பிரின்ஸ்பல் என்ற பெயரில் பட்டையை போட்டுக் கொண்டு, யாரிடமும் வாயைக் கொடுக்காமல் பிரஜினும் சாஃப்ட் மோடுக்குப் போயிருந்தார். சான்ட்ராவுக்கும், பிரஜினுக்கும் சென்ற வார இறுதியில் விஜய் சேதுபதி கொடுத்த ஆலோசனை வேலை செய்திருக்க வேண்டும் அல்லது ரகசிய ஆலோசனையும் சேர்த்து வழங்கப்பட்டு இருக்கலாம். அதனால்தான் இந்த மாற்றம் என்பது தெளிவாக தெரிகிறது. இப்படித் திருந்தி, பெரிய சேஞ்ச் ஓவர் காண்பித்ததால் இருவருக்கும் இந்த வார இறுதியில் விஜய் சேதுபதியிடமிருந்து பாராட்டு கிடைக்கும் என்பது நம்முடைய கணிப்பு.