School Assembly task @jiohotstar
BiggBoss 9

முக்கோணக் காதல் கதை! #Biggboss Day 51

’எவ்வளவு பிரச்சனைகள் வந்தாலும், நான் உனக்கு ஆதரவாகத்தானே இருக்கிறேன். எனக்கு உன் மீது ’அது’ இருக்கிறது என்று உனக்கே தெரியுமல்லவா? நீ அவளோடு சேர்ந்து கொண்டு இப்படி ஆட்டம் போடுவது நியாயமா?

ஆதி தாமிரா

கமருதீன், பாரு, அரோரா இந்த மூவருக்கும் இடையே இருக்கும் முக்கோணக் காதல் கதை எனும் டாபிக்கில் யாராவது ஒருத்தர் வெளியே போய்த் தொலைந்து விடுவார்கள், ஆகவே அது சீக்கிரமாகவே நமுத்து போய்விடும், என்று நாம் நினைத்து அதைப்பற்றிப் பேச வேண்டாம் என்று தள்ளிப் போட்டுக் கொண்டே வந்தாலும் அது முடிகிற கதையாய்த் தெரியவில்லை.

பாருவுக்கு, கமரு மீது ஆரம்பத்திலிருந்தே ஒரு ஈடுபாடு இருக்கிறது, அவரது வன்மக்குணத்தையும் தாண்டி அது அவ்வப்போது வெளிப்பட்டுக் கொண்டுதான் இருக்கிறது. அரோராவுக்கும், துஷார் வெளியே போனதிலிருந்து கமரு மீது இருந்த நட்பு இன்னும் அதிகமாய் விட்டது. அவர் கமருவிடம் பேசும்போது இது, ’பாய் பெஸ்டி மாதிரியான உறவுதான்’ என்று சொன்னாலும், அவருக்கும் கமரு மீது ஒரு ஆர்வம் இருப்பது போலத்தான் தெரிகிறது. ஆனால், கமருவுக்கோ இந்த இரண்டு பெண்கள் மீதுமே ஆர்வம் இருப்பது போலத் தெரியவில்லை. ’நம்ம லட்சணத்திற்கு, இப்படி ஒரே நேரத்தில் இரண்டு பெண்கள் நம் மீது ஆர்வம் காட்டுகிறார்களே’ எனும் ஆண்களுக்கே உரிய ஈகோ நிறைவு தரும் மகிழ்ச்சிதான் அதிகமாகத் தெரிகிறது. அதனால், ’காத்து வாக்குல ரெண்டு காதல்’ என்ற மோடில் இருக்கிறார். அதோடு, நாம் விளையாடும் லட்சணத்தில் எப்போது வேண்டுமானாலும் வெளியே தள்ளப்பட்டுவிடுவோம், இப்படியான காதல் முக்கோணத்தில் சிக்கிக் கொண்டால் அதன் வெளிச்சத்தில் கொஞ்ச நாள் உள்ளே இருக்கலாம் என்ற கூடுதல் திட்டமும் இருக்கலாம்.

’எவ்வளவு பிரச்சனைகள் வந்தாலும், நான் உனக்கு ஆதரவாகத்தானே இருக்கிறேன். எனக்கு உன் மீது ’அது’ இருக்கிறது என்று உனக்கே தெரியுமல்லவா? அப்படி இருந்தும் நீ அவளோடு சேர்ந்து கொண்டு இப்படி ஆட்டம் போடுவது நியாயமா? அதுவும் அவள் என்னை வெறுப்பேற்ற வேண்டும் என்றே, என் முன்னால் உன்னோடு விளையாடுவதும், கூடிக்குலாவுவதுமாக இருக்கிறாள். அப்போது என் மனசு என்ன பாடு படும்? அது தெரிந்தும், நீ அவளுக்கு ஒத்து ஊதிக் கொண்டிருக்கிறாயே? இது நியாயமா, இது அடுக்குமா?’ என்பது பாரு, கமருவிடம் வைக்கும் விவாதம். அதற்கெல்லாம் முக்கியத்துவம் கொடுக்காமல், பதிலும் சொல்லாமல் பாருவின் கன்னத்தைக் கிள்ளி புஜுக், புஜுக் என்று விளையாடிக் கொண்டிருந்தார் கமரு. பாரு அடுத்தவர்களுக்கு செய்யும் அநியாயத்தில், அவருக்கு யாராவது, ஏதாவது ஆப்பு வைக்க மாட்டார்களா என்று நாம் நினைத்துக் கொண்டிருக்கையில், அதற்கும் கூட அடுத்தவர்கள் தேவையில்லை, எனக்கு நானேதான் வைத்துக்கொள்வேன் என்பது போல இருக்கிறது இந்த நடவடிக்கை! எப்படியோ, பாருவுக்கு ஒரு கஷ்டம் வந்தால் சரிதான்!

In classroom

இன்னொரு பக்கம் அரோரா, ’நீ என்ன வேண்டுமானாலும் பண்ணித் தொலை! உனக்கு அறிவே கிடையாது, அவள் எவ்வளவு வன்மம் பிடித்தவள் என்று உனக்கே தெரியும். பப்ளிக்கில் உனது இமேஜ் பாதிக்கும்படி உன் மீதே ’கண்ட இடத்தில் தொடுகிறான்’ என்பது போல அப்யூஸிவ் ஸ்டேட்மென்ட் கொடுத்த பிறகும், கொஞ்சம் கூட மானம் ரோஷம் இல்லாமல் அவளோடு பழகிக் கொண்டிருக்கிறாய். இப்படி ஒரு மானங்கெட்டவன் எவனாச்சும் இருப்பானா என்று தெரியவில்லை. உனக்கு மானமும் கிடையாது, அறிவும் கிடையாது. ஆனால், எனக்கு அதெல்லாம் இருக்கிறது. நீ அவளோடு என்ன வேண்டுமானாலும் செய்த விட்டுப் போ. இப்போது நான் பேசுவதை கூட நீ அங்கே போய் அவளிடம் உளறுவதற்கு வாய்ப்பு இருக்கிறது என்று தெரிந்தும் இதெல்லாம் சொல்கிறேன். நீ என்னவோ செய்து தொலை, ஆனால் அவள் செய்த அட்டகாசங்களுக்கு என்னால் அவளை மன்னிக்க முடியாது’ என்று கமருவிடம் புளி போட்டு விளக்கிக் கொண்டிருந்தார். ஆனால், கமரு பாருவிடம் செய்தது போலவே, இவரிடமும் கன்னத்தைக் கிள்ளி புஜுக், புஜுக் என்று விளையாடிக் கொண்டிருந்தார்.

இன்னொரு புறம், புதிய காதலர்களான வியானா எஃப்ஜேயின் குட்டிக் காதல் ஓடிக்கொண்டிருந்தது. இது மாதிரியான நேரத்தில்தான் பொம்மை டாஸ்க் மாதிரி, ஏதாவது டெரரான டாஸ்க்கைக் கொண்டுவர வேண்டும். அப்போதுதான் இந்தக் கண்றாவி காதல் கதைகளையெல்லாம் ஒழித்துக்கட்ட முடியும். ஆனால், பிக்பாஸ் டீமில் என்னத்த இயக்குகிறார்களோ, சவசவவென்று போகும்  பள்ளிக்கூடம் டாஸ்க்கை இந்த வாரம் கொண்டு வந்தார்கள்.

பிரஜின் பிரின்சிபால், அமித் மற்றும் கனி ஆசிரியர்கள், பாரு மற்றும் எஃப்ஜே வார்டன்ஸ்!  மற்ற அனைவரும் மாணவர்கள்!  எல்லா சீசனிலும் நடப்பது போலவே மாணவர்கள் சேட்டை பண்ணுவது, வளவளவென்று பேசுவது என்று ஆரம்பத்திருக்கிறார்கள். மாணவர் கெட்டப்புக்காக கிளீன் ஷேவ் செய்துகொண்டு வந்த கமருவைப் பார்த்து பாரு வெட்கப்பட்டார். எல்லாம் நம் நேரம்! கிளாசுக்குப் போகாமல் ஓபி அடிக்கும் மாணவர் போல நடித்து, சீக்ரெட் டாஸ்க்கில் செய்தது போல ஸ்கோர் பண்ணலாம் எனும் நினைப்பில் சுற்றிக்கொண்டிருந்தார் சாண்ட்ரா. அதே ஃப்ளோவில் வார்டன் பாருவைப் பார்த்து ‘வார்டன் ஆண்ட்டி’ என்று கூப்பிடவும் பாரு கடுப்பாகி, கெட்டப்பிலிருந்து வெளியே வந்து, மல்லுக்கு நின்றார். இரண்டு வாரங்களாக சான்ட்ரா, திவ்யாவோடு ஆட்டோக்கார மாணிக்கம் போலப் பழகிய பாரு, அவர்களைப் பற்றி எல்லாம் தெரிந்து கொண்டபின், இனி நாம் பழைய பாட்ஷாவாக ஆகிவிட வேண்டியதுதான் என்பது மாதிரியான நினைப்பில் இருப்பது போலத் தெரிகிறது. வரும் வாரங்களில், வன்மக்குழு பாருவால், இரண்டாக உடையும் என்று தோன்றுகிறது. ஒருவழியாக பக்கத்திலிருந்தவர்கள் சமாதானம் செய்துவைத்தார்கள். பிக்பாஸாகப் பார்த்து, நாளைக்கு ஏதாவது இந்த டாஸ்க்கில் ஒரு குண்டைத் தூக்கி போட்டால்தான் சுவாரசியமாக வேறு ஏதாவது நடக்கும், பார்ப்போம்!

அடுத்து, ரிவால்வர் ரீட்டா படத்துக்கான பிரமோஷனுக்காக கீர்த்தி சுரேஷ் உள்ளே வந்து போனார்.