பிரஜின், சான்ட்ரா, திவ்யா ஆகிய வன்மக்குழுவின் முக்கிய உறுப்பினர்கள் வாசலில் அமர்ந்து சாப்பிட்டுக் கொண்டிருந்தார்கள். சாம்பாரிலோ, பொரியலிலோ காரம் அதிகமாக இருந்திருக்கும் போலிருக்கிறது. வினோத் வந்து ’காரம் ரொம்ப அதிகம்க்கா, ஆனாலும் எனக்கு பிடித்திருந்தது’ என்று சொல்லிவிட்டு போனார். அதைக் கேட்ட திவ்யா, ’நாளை, இதை சரி பண்ணி விடலாம்க்கா’ என்று சான்ட்ராவைப் பார்த்து சொன்னார். அதற்கு சாண்ட்ராவிடமிருந்து வந்த பதில்:
’நாம ஒன்னும் இங்க எல்லோருக்கும் பக்குவமா சமைச்சு போட வரல, அத மனசுல வச்சுக்கோ’
அவர் சொன்ன வார்த்தைகளின் உள்ளர்த்தம் இதுதான்: ’உப்பு, காரம் குறைவாக இருந்தால் என்ன? அதிகமாக இருந்தால் என்ன? அது முக்கியமில்லை. நம் கவனம் முழுவதும் கனியை ஒழித்துக் கட்டுவதில்தான் இருக்க வேண்டும்’
இதே காரக்குழம்பு பிரச்சனையைத்தான் உள்ளே கெமியும், கமருவும் பேசிக் கொண்டிருந்தார்கள். சற்று நேரத்தில் குழம்பில் இருந்த காரத்தை மறந்து விட்டு ஒருவரை ஒருவர் மட்டமாக பேசிக்கொள்ள ஆரம்பித்துவிட்டார்கள். இன்னொருபுறம் கொஞ்ச நாட்களாக நம்முடைய மதிப்பு, மரியாதை எல்லாம் குறைந்து கொண்டு வருவது போல் இருக்கிறதே என்று எஃப்ஜேவிடம், ஏதாவது ஒரு காதல் ட்ராக் உருவாக்கி ஓட்ட முடியுமா என்ற முயற்சியில் இருந்தார் வியானா.
வெளியே, ‘உனக்கு எத்தனை புருஷன்’ என்று காமெடி செய்த கமருவைப் பற்றி ரம்யாவிடம் புலம்பிக் கொண்டிருந்தார் பாரு. ‘அவங்க ரெண்டு பேரும் என்னை வெறுப்பேற்றுவதற்கு என்று இது மாதிரியான வேலைகள் எல்லாம் திட்டமிட்டுசெய்து கொண்டிருக்கிறார்கள்’ என்றார். அதாவது, பாருவின் முன்னாள் க்ரஷ்ஷான கமருவை, அரோரா ஹைஜாக் பண்ணிக் கொண்டுபோனது மட்டுமல்லாமல், அதை வைத்தே அரோரா பாருவைச் சீண்டிக் கொண்டிருக்கிறார். அது மட்டும்தான் அவரது வேலை என்பது பாருவின் கருத்து. ஏற்கனவே கொஞ்ச நாட்களாக, இங்கே என்னதான் நடக்கிறது என்று ஒன்றும் புரியாமல் விட்டேத்தியாக ஒரு ஞான நிலையில் திரிந்து கொண்டிருக்கும் ரம்யாவுக்கு, இதற்கு என்ன பதில் சொல்வது என்று தெரியாமல், ’இன்றைக்கு உனக்கு வேறு ஆளே கிடைக்கவில்லையா தாயே’ என்பது போல பார்த்துக் கொண்டிருந்தார்.
நேற்றுதான் காமெடிக்கும், பாருவுக்கும் பல கிலோமீட்டர் தூரங்கள் என்று சொல்லியிருந்தோம். இன்று பாருவும், வியானாவும் சேர்ந்து கொண்டு தங்களை கிராமத்து அக்கா, தங்கை கேரக்டர்களாக உருவகித்துக்கொண்டு பேசிக் கொண்டிருந்தார்கள். அதில் காமெடியைத்தான் தேட வேண்டியதாக இருந்தது.
டாஸ்க் ஆரம்பித்து ஒரு நாள்தான் ஆகிறது. அதற்குள் பெஸ்ட், ஒர்ஸ்ட் ஆட்களை தேர்ந்தெடுக்க சொல்லி ஒரு குட்டி டாஸ்க் வந்தது. இரண்டு குழுக்களின் கேப்டன்கள் இணைந்து, மூன்றாவது குழுவிலிருந்து ஒரு பெஸ்டையும், ஒரு ஒர்ஸ்ட்டையும் தேர்ந்தெடுக்க வேண்டுமாம். அப்படியே செய்தார்கள். மூன்று கேப்டன்களுக்கும் ஒருவரை ஒருவர் பிடிக்கவில்லை என்பது கண்ணாடி போல நமக்குத் தெரிந்தது. இவர்களுக்குள் டிஸ்கஷன் செய்தால் அது என்ன லட்சணத்தில் இருக்கும்? மூன்று கேப்டன்களுமே ஒர்ஸ்ட் ஆட்களாக தேர்ந்தெடுக்கப்பட்டனர். பெஸ்ட் ஆக டீமுக்கு ஒருவர் சொல்லப்பட்டார்கள். இங்கும், சான்ட்ராவின் இன்ஃப்ளூயன்ஸ் வேலை செய்தது. அதனால் பெஸ்ட்டில் ஒருவராக, பிரஜினும் இருந்தார்.
தன்னை வொர்ஸ்ட் என்று சொன்னதை பொறுக்க முடியாமல் ரம்யா, ’இதற்கு மேல் என்னால் முடியவில்லை, நான் வீட்டுக்கு போகிறேன்’ என்று கொந்தளித்துக் கொண்டிருந்தார். இந்த வீட்டில் என்னென்னவோ நடந்து கொண்டிருக்கிறது, என்னென்னவோ சொல்கிறார்கள், வொர்ஸ்ட் என்று சொன்னதா ஒரு பெரிய பிரச்சனை? இப்போ என்ன நடக்கும்? இவரைச் சுற்றி உட்கார்ந்து இதைக்கேட்டுக் கொண்டிருக்கும் இதே ஆட்கள், ‘ரம்யாவுக்கு இங்கு இருக்க பிடிக்கவில்லையாம், வீட்டுக்கு போகிறேன் என்று சொல்கிறார். அனுப்பிவிட்டுவிடுங்கள்’ என்று இதே காரணத்தைச் சொல்லி எவிக்ஷனுக்கு ஓட்டு போடுவார்கள்.
நாங்கள் சமைப்பதுதான் மெனு என்று சொன்ன சான்ட்ராவுக்கு, ஆப்படிப்பதற்காக மற்றவர்கள் கேட்பதுதான் மெனு, அதைத்தான் சமையல் குழு செய்துகொடுக்க வேண்டும் என்று பிக்பாஸ் ஒரு லெட்டரை அனுப்பி வைத்தார்.
காலையில் குழம்பு காரமாக இருக்கிறது என்று முதலில் பிரச்சினையை கிளப்பியவர் கெமி. அதை மனதில் வைத்துக் கொண்டு இப்போது வினோத்துக்காக செய்த காரக்கத்தரிக்காயை கெமிக்கு கொடுக்குமுன்பாக, ’உனக்கு காரம் பிடிக்காதல்லவா, உனக்கு வேண்டாம்’ என்று சொல்லி முதலில் மறுத்த திவ்யா, அவரைக் கெஞ்சவிட்டு பின்னர் கொடுத்தார். அதில் மிகவும் மனமுடைந்து போய் தனியே உட்கார்ந்து அழ ஆரம்பித்தார் கெமி. ’இது காரமாக இருக்கிறது, உனக்கு வேண்டுமானால் கவனமாக சாப்பிடு’ என்று சொல்லிவிட்டுக் கொடுப்பதுதான் அக்கறை. ஆனால், வேண்டுமென்றே ’காரம் உனக்கு பிடிக்காது என்று சொன்னாய் அல்லவா? அதனால் தரமாட்டேன்’ என்று சொல்லிக் கெஞ்சவிட்டது வன்மம்.
அதன் பின்னர், ’அவருக்கு காரம் பிடிக்காது. அவருடைய நன்மைக்காகத்தான் யோசித்து சாப்பிடுங்கள் என்று முதலில் சொன்னேன். அதன் பின் அவர் கேட்டதும் கொடுத்து விட்டேனே’ என்று பச்சையாக நாடகம் ஆடிக் கொண்டிருந்தார் திவ்யா.
அடுத்து ஒரு டெய்லி டாஸ்க் நடந்தது. ஒலிக்கப்படும் பாடலுக்கேற்றப் பொருளை எடுக்க வேண்டுமாம். இந்த சீசனில் முதல் முறையாக சண்டைகிண்டை ஏதும் போடாமல், பார்ப்பதற்கே அழகாக இருந்த முதல் டாஸ்க் இதுதான். பலரும் தன்னியல்பில் உற்சாகமாக டான்ஸ் ஆடியது பார்க்க நன்றாக இருந்தது. நம்மைப் போலவே பிக்பாஸுக்கும் தோன்றியிருக்கும் போலிருக்கிறது. மனம் திறந்து பாராட்டினார். பாராட்டி முடிக்கவில்லை. அதற்குள், வினோத், கனியைத் தள்ளிவிட்டு ஒரு பஞ்சாயத்தைக் கூட்டிவிட்டார். கச்சாமுச்சாவென்று ஆகிவிட்டது சூழ்நிலை!