பிக்பாஸ் வீட்டையே நாராசமாக்கிக் கொண்டிருந்த இரண்டு இரிடேட்டிங் குரல்களில் ஒன்று வெளியே போய்விட்டதால் இன்றைக்கு எபிசோடே பார்ப்பதற்கும், காது கொடுத்துக் கேட்பதற்கும் ஏதுவாக மாறி இருந்ததை உணர முடிந்தது. இருப்பினும், ஆங்காங்கே பாருவின் குரல் நம்மை இரிடேட் செய்யத் தவறவில்லை.
நாம் எதிர்பார்த்ததைப் போலவே, தனது ஆஸ்தான அடிமையான பூசணியை இழந்துவிட்ட பாரு வேறு யாராவது சிக்குவார்களா என்ற ஆர்வத்துடன் திரிந்தார். அப்படி ஒரு ஆள் சிக்கும் வரை தமது பாதுகாப்புக்காக பிரஜின் சான்ட்ரா குழுவுடன் இணைந்திருப்பது நல்லது என்ற முன்னெச்சரிக்கை உணர்வுடன், அங்கு போய் இணைந்து கொண்டார். பிரஜின், சான்ட்ரா, திவ்யா வன்மக்குழு இப்போதைக்கு பலமாக இருக்கிறது. அதற்கு ஒரு ஆபத்தை ஏற்படுத்த வேண்டுமானால் அது பாருவால் மட்டும்தான் முடியும். அந்தவகையில், பாரு அந்த குழுவோடு இப்போதைக்கு இணைவது நல்லதுதான்.
இந்த சீசனில் எவிக்சனை வெளியே டிஸ்கஸ் செய்து கொள்ளலாம் என்று விதிமுறையை மாற்றி விட்டார்களா என்று தெரியவில்லை. இப்படித்தான் இதற்கு முந்தைய ஏதோ ஒரு சீசனில் இந்த விதியை தளர்த்தி அதனால் ஆட்டமே நசநசத்துப் போனது ஞாபகம் வருகிறது. தொடக்கத்திலிருந்து பாரு இந்த வேலையைத்தான் தன் அடிமைகளோடு செய்து கொண்டிருந்தார் என்றாலும், இந்தக் குழுவுடனும் அதையே மிக உற்சாகமாக செய்து கொண்டிருந்தார். அவர்களது லிஸ்டில், கனி, சபரி, விக்ரம் போன்றோர் முக்கியமான டார்கெட்டாக இருந்தனர். சான்ட்ராவுக்கு கனியோடு இதுவரை எந்த வெளிப்படையான மோதலும் இல்லாவிட்டாலும், கனியின் மீது சான்ட்ரா ஒரு பெரிய வன்மத்தோடு இருக்கிறார் என்பது தெளிவாக தெரிகிறது. பாருவைப் பொருத்தவரை எல்லோருமே எதிரிகள்தான் என்றாலும், ஒவ்வொரு வாரமும் ஒவ்வொரு காரணத்துக்காக ஒவ்வொருத்தர் மீது வன்மத்தை இறக்கிக் கொண்டிருப்பார். இப்போது அவரது வன்மத்துக்கு இலக்காகி இருப்பது விக்ரம்!
பாரு, அரோராவிடம் பேசிக் கொண்டிருக்கும்போது, ’என்னதான் என் அண்ணன் பூசணி வெளியே போனதில் எனக்குப் பெரிய வருத்தம் என்றாலும், ஒரு வகையில் அது எனக்கு நல்லதுதான். பல விசயங்களில் அவரது இன்ஃப்ளுயன்ஸால் நான் தவறாக விளையாடியிருக்கிறேன், இனிமே நான் சொந்தமாக, சரியாக விளையாடுவேன்’ என்று ஒரு பிட்டை போட்டுக் கொண்டிருந்தார். யாரு? பூசணி, பாருவின் மண்டையை கழுவினாராமா? வசதியாக மண்டை கிடைத்தால் அதை கழுவுவதற்கென்றே பிறப்பெடுத்தவர் இந்தப் பாருதான்! சாத்தான் வேதம் ஓதுகிறது!
இன்னொருபுறம் கெமியும், வியானாவும் டான்ஸ் ஆடிக் கொண்டிருக்க, கனி பாட்டு பாடிக்கொண்டிருந்தார். அவர் பாடிக்கொண்டிருக்கும் அழகைப் பார்த்து, ’என்ன டாஸ்க் லெட்டர் படித்துக் கொண்டிருக்கிறீர்களா கனி?’ என்று பிக்பாஸே கலாய்த்துக் கொண்டிருந்தார். இப்படி பிக்பாஸே போட்டியாளர்களை ஜாலியாக கலாய்த்து விளையாடுவதைப் பார்த்து ரொம்பநாள் ஆயிற்று. அது பார்க்கவும் நன்றாகவே இருந்தது!
ரேங்கிங் டாஸ்கின் போது தான் பாதிக்கப்பட்டு, தனிமைப்படுத்தப்பட்டதாக உணர்ந்ததாக விக்ரம் யாரிடமோ பேசிக் கொண்டிருந்தார். அப்படிப்பட்ட ஒரு நிலை இந்த வீட்டில் இருக்கும் ஒவ்வொருவருக்குமே ஏதாவது ஒரு கட்டத்தில் ஏற்படும் என்பதுதான் அவர் சொல்ல வரும் கருத்து. அப்படி இருக்கும்போது பிரஜினும், சான்ட்ராவும் இப்படி ஒன்றாக விளையாடுவது மற்ற போட்டியாளர்களுக்கு ஒரு சமமின்மையைத்தான் தருகிறது என்று ஒரு சரியான வாதத்தை எடுத்து வைத்தார். பிரஜினும் சான்ட்ராவும் அவர் சொல்வதைப் போல, அவர்கள் உள்ளே வரும்போது சொன்னதைப் போல நடந்து கொள்ளவே இல்லை. தனித்தனி போட்டியாளர்களாக தங்களை உணராமல், ஒவ்வொரு சின்னச் சின்ன விஷயத்திலும் ஒருத்தருக்கொருத்தர் துணையாகவும், பலமாகவுமே இருக்கிறார்கள். சீக்ரெட் டாஸ்க் விஷயத்தில் சிறப்பாக விளையாடிய சான்ட்ரா அதன் பலனை பிரஜினுக்கு கொடுத்தது இதற்கு ஒரு நல்ல உதாரணம்.
அடுத்து நாமினேஷன் நடந்தது.
ஓபன் நாமினேஷன் என்பதால் ஓட்டுக்கள் பரவலாக விழுந்தன. மற்ற எல்லோரும் அவரவர் விருப்பத்திற்கு ஏற்ப ஓட்டுப் போட வன்மக்குழு மட்டும் அவர்கள் திட்டமிட்டபடி ஓட்டுகளைப் போட்டார்கள். அவர்களது தீவிர ஆலோசனை முதல் நாள் இரவு, இன்றைய காலை மட்டுமல்லாது நாமினேஷன் நடந்து கொண்டிருக்கும்போதும் தொடர்ந்தது. அதைப் பார்த்த சுபி, இது தவறு இல்லையா என்று வெளிப்படையாகவே கேட்டார். அதற்கு சான்ட்ரா ’மற்றவர்கள் குழுவாக ஆடும் போது நாங்களும் வேறு வழியில்லாமல் குழுவாக ஆடுவதற்கு தள்ளப்படுகிறோம்’ என்று வியாக்கியானம் பேசியதில் அவரது வன்மம் வெளிப்பட்டது. பாருவிடம் வன்மம் இருந்தாலும், அவர் ஒரு குறைகுடம், கூத்தாடுவதில் இருந்தே அதை நாம் தெரிந்து கொள்ளலாம். ஆனால் நிறைகுடம் போல அமைதியாகவும், அமுக்குணித்தனத்தோடும் உள்ள ஒருவர், வன்மம் கொண்டிருந்தால் அதுதான் ஆபத்தானது. அந்த வகையில் பாருவை விட சான்ட்ரா ஆபத்தானவர். இது விரைவிலேயே வெளிப்படும் என்று நம்புவோம். இந்தக் குழப்படிக்கிடையில் பெரும்பாலானோர் நாமினேசனுக்குள் வந்துவிட, இந்த வாரமும் கமரு, நாமினேசனில் சிக்காமல் தப்பிவிட்டார்.
அடுத்து, ஹாட்ஸ்டார் தொடரான ‘நடு செண்டர்’ குழு புரமோசனுக்காக உள்ளே வந்து போனது. அதில் விசேவின் பையன் சூர்யாவும் இருந்தார். இவர் ஏதோ சினிமாவில்தானே நடித்துக் கொண்டிருப்பதாக கேள்விப்பட்டோம். சரி, நடக்கட்டும்!