Morning dance @jiohotstar
BiggBoss 9

பிக்பாஸையே ஓடவிட்ட போட்டியாளர்கள்! #Biggboss Day 38

அடுத்து கொடியை ஒளித்து வைத்து ஒரு டாஸ்க் விளையாடினார்கள். அதல் தர்பீஸ் அரசு வென்றது. அதில் வியானா, அவர்கள் ஒளித்து வைத்த எதிரிநாட்டுக் கொடியையே கண்டுபிடித்து எடுத்ததெல்லாம் வேற லெவல் ஆட்டம்!

ஆதி தாமிரா

’அடிச்சிப் புடிச்சி முண்டியடித்து உள்ளே போகலாமா? அல்லது முதலில் வருபவருக்கு முன்னுரிமை கொடுக்கலாமா’ எனும் தீவிர ஆலோசனை ஒன்றை சபரி முன்னிலையில் கனி, வியானா, கெமி போன்றோர் நடத்திக் கொண்டிருந்தார்கள். எதற்காக என்கிறீர்களா? எப்படி கக்கூஸுக்குள் போகலாம் என்பதான ஆலோசனைதான் அது.

அடேய் பிக்பாஸ், மற்ற விஷயங்களில்தான் இவர்களைக் கோர்த்துவிட்டு நாறடிக்கிறீர்கள். இந்தக் கக்கூஸையாவது இரண்டு அதிகமாக கட்டித் தொலையக்கூடாதா ஐயா! இந்த அழகில், கக்கூஸ் போவது பற்றி ஒரு புதிய விதிமுறையை சபரி உருவாக்கி, கெமியிடம் சொல்லச்சொல்லி, அரோராவிடம் சொல்லியிருக்கிறார். என்ன இதெல்லாம்? இது அனைவருக்குமான விசயம். எத்தனையோ தடவைகள் பிளாஸ்மா முன்னால் கூடுகிறார்கள், அதில் வைத்து இதை மொத்தமாகச் சொல்லிவிடாமல் இதென்ன தூதுப்புறா முறையோ தெரியவில்லை. அரோரா, அதை கெமியிடம் சொல்லாமல் விட்டுவிட அவர்களிருவருக்கிடையே முட்டிக்கொண்டது.

பெட்ரூமில் வழக்கம் போல வினோத், பூசணியைக் கலாய்த்துக் கொண்டிருந்தார். கலாய்க்கக்கூட தகுதியற்ற இந்தப் பூசணியைக் கலாய்ப்பதை இந்த வினோத் எப்போதுதான் நிறுத்திக்கொள்ளப் போகிறார் என்று தெரியவில்லை. பாரு, கமரு, பூசணி குழு எப்படி விசே பேச்சைக் கேட்காத டாக்சிக் குழுவாக இருக்கிறதோ, இந்த விசயத்தில் வினோத்தும் அப்படித்தான் இருக்கிறார். தவறான ஆளிடம் வெளிப்படுவதால் வினோத்தின் நகைச்சுவையுணர்ச்சியே வேஸ்ட்டாகத்தான் போகிறது.

New King Appointed

இதனால், பூசணிக்கும், வினோத்துக்கும் அநாகரீகமான வார்த்தைப் பிரயோகம், தள்ளுமுள்ளு என ஒரு தகராறு நடந்தது.

சண்டை போட்டு கிச்சனுக்குள் போன பாருவால், அங்கேயும் ஒரு பஞ்சாயத்து நடந்துகொண்டிருந்தது. கனியும் எஃப்ஜேவும் சாப்பிட்டுக் கொண்டிருக்கும்போது, சாம்பாரைக்கொண்டு போய் சிங்கில் போட்டுவிட்டுப் போனார் பாரு. ’திங்கிறதுக்கே இங்க சாம்பார் இல்ல, இவ இருக்குற சாம்பாரைக் கொண்டு போய் சிங்கில் போட்டுவிட்டார்’ என எஃப்ஜே கொந்தளித்தார். நமக்குக் கூட ’அடப்பாவி பாரு, சாப்பாடு விசயத்தில் இப்படியா பண்ணுவே?’ என்று கோபம் வந்தது. ஆனால், கேமரா திரும்பிய பின்னர்தான் தெரிந்தது, பாரு போட்ட கிண்ணத்தில் ரெண்டு ஸ்பூன் சாம்பார்தான் இருந்தது என்று. ’அடப்பாவி எஃப்ஜே இதுக்காடா கொந்தளிச்சே’ என்று நாம் நம் கோபத்தை எஃப்ஜே மீது திருப்பினால், ‘இங்கே ஒரு பருக்கைச் சோறு, ஒரு சொட்டுக் குழம்பே கிடைக்காதான்னு அலைஞ்சுகிட்டிருக்கோம், இவ்வளவு சாம்பாரை எப்படி வீணாக்கலாம்?’ என்று சொன்னபோது, அதிலும் நியாயம் இருக்கத்தான் செய்கிறது என்று நமக்கு உறைத்த்து.

அடுத்து, மன்னர் டாஸ்க்கில், ’நீங்க கிழிச்சது போதும்’ என்று சொல்லி மன்னர்களை ஸ்வாப் செய்துவிட்டார் பிக்பாஸ். வினோத்துக்குப் பதிலாக விக்ரம். பூசணிக்குப் பதிலாக பாரு.

அய்யோடா சாமி, ஏற்கனவே இவர்கள் பேசும் தமிழ் நம் காது கிழியும், இந்த அழகில் சுத்தத்தமிழ் பேசுகிறேன் பேர்வழி என்று இவர்கள் பேசும் தமிழை, நம்மால் காதுகொண்டு கேட்கமுடியவில்லை.

 
பாரு: நம்மர் ராஜ்ஜியத்தைப் பற்றி நீங்கர் எதிர் நாற்று மன்னர் காதிர் கேர்க்கும்படி பேசுகீர் ஆக!


அரோரா: அமைதியாக இருங்கர் என்று கூரியதர்க்கு வாயை மூடு என்று கற்றினார், அவர் என்கிட்டை மன்ப்பு கேர்க்க வேண்டும்.

பக்கத்திலிருக்கும் ஈயப்பட்டறைக்குச் சென்று காதில் ரெண்டு சொட்டு ஈயத்தைக் காய்ச்சி ஊற்றச்சொல்லலாமா எனுமளவுக்கு கடுப்பாகிப்போனது நமக்கு.

இன்றைய மன்னர் டாஸ்க்கும் நாறி நசநசத்துப் போய்விட்டது. வினோத் உருவகேலி செய்கிறார், உருவகேலி செய்கிறார் என்று வாய்க்கு வாய் சொல்லும் பூசணியும் கொஞ்ச நஞ்ச பேச்சா பேசுகிறார்? வினோத்தை, ‘தீஞ்ச கரிச்சட்டி வாயன்’ என்று நிறத்தை வைத்து உருவகேலி செய்தார், என்னவோ இவர் தர்பூசணிச் சிவப்பு நிறத்திலிருப்பவரைப் போல. இது போதாதென்று பிக்பாஸ் எடிட்டர் இதில் ‘பீப்’ சவுண்டைப் போட்டுவிட, அதில் ’தீன்…’ மட்டுமே ஒலித்ததால், அதை ‘தீண்டத்தகாதவன்’ என்று தவறாகப் புரிந்துகொண்ட சிலர் சமூகவலைத் தளங்களில் கொதித்துக் கொண்டிருக்கிறார்கள்.  

Daily Task

கடைசியில், பூசணி, எதிரி ஆட்களோடு பேசிக்கொண்டிருக்கையில் குறுக்கே வந்த அரோராவை, ‘நீ போம்மா அந்தாண்ட’ என்று சொல்லியிருப்பார் போலிருக்கிறது. அரோரா, ராணி பாருவிடம் வந்து சொல்ல, ‘எதிரிகள் முன்னிலையில், நம் இளவரசியை அவமதித்தது தவறு, மன்னிப்புக் கேளுங்கள் அமைச்சரே’ என்று சொல்ல, அந்தாள் டென்சனாகி, ’நான் மன்னிப்பும் கேட்க முடியாது, ஒரு டேஷும் கேட்கமுடியாது’ என்று சொல்லிவிட்டு, பிராப்பர்ட்டீஸை தூக்கி வீசிவிட்டு, சட்டையைக் கழற்றிப்போட்டு, ‘இந்த கேமுக்கே நான் வரல’ என்று போய்விட்டார். சற்று நேரத்தில், பாரு போய், பசு மாட்டை தாஜா செய்வது போல, ‘என் கண்ணுல்ல, ராஜால்ல’ என்று சமாளித்து கூப்பிட்டு வந்ததை எல்லாம் பார்ப்பதற்குள் நாக்கு தள்ளிவிட்டது நமக்கு.

அடுத்து கொடியை ஒளித்து வைத்து ஒரு டாஸ்க் விளையாடினார்கள். அதல் தர்பீஸ் அரசு வென்றது. அதில் வியானா, அவர்கள் ஒளித்து வைத்த எதிரிநாட்டுக் கொடியையே கண்டுபிடித்து எடுத்ததெல்லாம் வேற லெவல் ஆட்டம்!

போன வாரம்தான் விசே, ‘உங்க கத்தல் சகிக்கமுடியல, அவனவன் டிவியை ஆஃப் பண்ணிட்டு ஓடுகிறான்’ என்று எச்சரித்திருந்தார். ஆனால், அது இன்னும் மோசமாகத்தான் ஆகியிருக்கிறது. ஒவ்வொரு சீசனும் வரும்போது முந்தின சீசனே பரவாயில்லை என்பது போல தோன்றுவது சகஜம்தான் என்று நாமும் நினைத்தோம். ஆனால், இன்றை 24x7 எபிஸோடில், பிக்பாஸே, ‘டாஸ்க் வைச்சா கத்துறீங்க, சண்டை போட்டா கத்துறீங்க, உங்களை வைச்சி என்ன பண்றதுன்னே தெரியல’ என்று கதறியதெல்லாம் பார்க்கும் போது இந்த சீசன் போட்டியாளர்கள், பார்வையாளர்களை மட்டுமில்லாது, பிக்பாஸ் டீமையும் சேர்த்து சித்திரவதை செய்துகொண்டிருக்கிறார்கள் என்பதை உணரமுடிகிறது.