முதலில் பூசணியின் பஞ்சாயத்து. ‘ஒரு மேனேஜரா விக்ரம் Swap பண்ணச் சொன்னப்ப மண்டையை ஆட்டிட்டு, வியானா முடியாதுனு சொன்னதும், நீயும் முடியாதுங்குறியே... உனக்கு சொந்தமா மூளை இருக்கா இல்லையா? எதையாச்சும் கேட்டா, நாங்க டிவியில பார்த்ததையே திரும்பத் திரும்பச் சொல்ற… உன்னைய டாஸ்க் ஆட வைக்கிறதே எங்களுக்கு பெரிய டாஸ்க்கா இருக்குய்யா யோவ்!’ என்று பூசணியை வறுத்தார் விசே. எல்கேஜி குழந்தை மாதிரி கையைக் குறுக்கக் கட்டிகிட்டு, தலையைத் தொங்கப்போட்டுக் கொண்டு, ’நம்ம அறிவு இங்க யாருக்கும் இல்ல போலிருக்கு, எதைச் சொன்னாலும் இந்தாளு நாக்கப்புடுங்குற மாதிரி கேட்குறான், பேசாம சைலண்ட் மோடுக்கு போயிட வேண்டியதுதான்’ என கப்புசிப்புனு நின்றுகொண்டிருந்தார் பூசணி.
அடுத்து கக்கூஸ் டீம் என்ன செய்தது என்பதான ஒரு சவசவ பஞ்சாயத்தை நடத்தினார் விசே. முதலில், ’கேப்டன் அமித் மற்றவர்களின் கிரெடிட்டை எடுத்துக்கொண்டார், நான்தான் கார்னிவல் ஐடியா கொடுத்தேன்’ என்ற எஃப்ஜே, சற்று நேரத்தில், ’நானே எனக்காக ஒரு காரெக்டர் உருவாக்கிக்கிட்டேன், அதன் மூலமா கெஸ்டுகளுக்கு முன்னால் மற்ற யாரையும் போகவிடாமல் நானே எல்லா வேலையையும் செய்தேன், என்னோட கிரியேட்டிவிடியைப் பாராட்டுங்க’ என்றும் சொன்னார். ’அடேய், பிக்பாஸ் சொல்லாமலேயே உன்னை யாரு, எக்ஸ்ட்ரா நம்பர் போடச் சொன்னது? அமித்தை சொல்றியே, இது நீ மத்தவங்க கிரெடிட்டை எடுத்துக்குறதா ஆகாதா?’ என்று விசே கேட்டதும் வாயை மூடிக்கொண்டார். ’எஃப்ஜேவின் பீட்பாக்ஸ் திறமையைக் கொஞ்சம் அடக்கி வைங்க அமித், முடியல’ என்று தீபக்தான் சொல்லியிருக்கிறார். ஆனால், அமித், எஃப்ஜேவை திறமையைக் காண்பிக்கவிடாமல் செய்துவிட்டார் என்று பழிபோட்டபோது, விசே அதைச் சரியாக விசாரிக்காமல், அமித்தையே மொக்கை போட்டது தவறு.
அடுத்து சாண்ட்ராவின் இரகசிய டாஸ்க் பற்றிய விளக்கம் குறும்படம் மூலமாக காண்பிக்கப்பட்டது. குறும்படமெல்லாம் ஒரு சிக்கலை விளக்கவோ, ஒரு கேரக்டரை அம்பலப்படுத்தவோதான் போடுவார்கள். மக்களுக்குத் தெரிந்த ரகசிய டாஸ்க்கை, போட்டியாளர்களுக்குக் காண்பிப்பது இதற்கு முன்னும் நடந்திருக்கிறது. ஆனால் இந்தக் குறும்படம் சான்ட்ராவை நாயகி ரேஞ்சுக்கு பில்டப் செய்து எடிட் செய்யப்பட்டிருந்தது. அவரும் டாஸ்கை அப்படி முடித்திருந்தார் என்பதால் அதற்குத் தகுதியானவர்தான். எடிட்டரை விசேவும் பாராட்டினார்.
அதைப் பார்த்துவிட்டு ஒரு பக்கம் எல்லோரும், ஆச்சரியம் மற்றும் அதிர்ச்சியில் சாண்ட்ராவை பாராட்டிக்கொண்டிருக்க, இன்னொரு பக்கம் விக்ரம் இதை பர்சனலாக எடுத்துக்கொண்டு அழுதுகொண்டிருந்தார். ‘ஒரு பச்சப்புள்ளயை கதறிவிட்டு வேடிக்கை பாத்துருக்கீங்க, இது நியாயமா சாண்ட்ரா? இது ரகசிய டாஸ்க்குனு ஒரு வார்த்தை சொல்லியிருக்கக்கூடாதா?’ என்று புலம்பினார். எல்லோர்கிட்டயும் சொல்லிவிட்டால் அப்புறம் அதில் என்ன ரகசியம் இருக்கிறது? வீட்டில் என்ன நினைப்பாங்க? நண்பர்கள் என்ன நினைப்பாங்க? மானமே போச்சே! என்ற குழப்பத்தில் முதலில் விக்ரம் உளறினாலும், சற்று நேரத்தில் தெளிந்தார்.
’கடமையே என்று உள்ளிருப்பது யார்’ என்று அடுத்தொரு பஞ்சாயத்தைக் கிளப்பிவிட்டார் விசே! ஒரு சிலர் பூசணியைச் சொல்ல, மற்ற பெரும்பாலானோர் கூட்டமாக அரோராவைச் சொன்னார்கள். இதில் கூட பூசணி எழுந்து அவரது பர்சனல் டார்கெட்டான வினோத்தையும், கனியையும் சொல்லி, ‘பயங்கரமா, திட்டமிட்டு, டார்கெட் வைச்சு, ரொம்ப சிறப்பா விளையாடுறாங்க சார்’ என்றார். ’யோவ் வெண்ண! நல்லா விளையாடாதவங்க யார்னு கேட்டா, உனக்குப் பிடிக்காதவங்களைச் சொல்லிகிட்டிருக்க. அதுவும் காரணமாச்சும் சரியா சொல்றியா? நல்லா விளையாடுறாங்கன்னு வேற சொல்லிகிட்டிருக்க, கேள்வியைக் காது கொடுத்து கேளுய்யா’ என்று சொல்லி அமரவைத்தார். பின்னர், எல்லோருடனும் விசேவும் சேர்ந்து கொண்டு அரோராவைப் போட்டுத்தாக்கி அழ வைத்து வேடிக்கைப் பார்த்தனர். அவர் வெளிநாடு படிக்கப் போவதற்கு பணம் சேர்க்க இங்கு வந்தார் என்று ஒரு காரணம் சொல்லப்பட்டது. சிறப்பான காரணம்தான், அதில் என்ன தவறு இருக்கிறதோ தெரியவில்லை. அதைக் குற்றம் சொல்வது போல, ‘எவ்வளவு காசு சேர்த்தாலும், பிரச்சினைகளும் கூடவே இருக்கும்’ என்று அவசியமே இல்லாமல் அரோராவுக்கு தத்துவம் சொல்லிக் கொண்டிருந்தார் விசே.
அடுத்து பிரவீனை எவிக்ட் செய்து வெளியே அனுப்பினர். எஃப்ஜே, கமரு, கெமி, ரம்யா, சுபி என்று நிறைய வேஸ்ட் டிக்கெட்டுகளை ஒப்பிடும் போது பிரவீன் எத்தனையோ பரவாயில்லை. ஆனால், மற்றவர்களைப் போல அதை எளிதாக எடுத்துக்கொள்ள முடியாமல் அழுது புரண்டு, மிகவும் உணர்ச்சி வசப்பட்டுப் போனார் பிரவீன். அதனால், பிக்பாஸுமே ‘நீ அப்படி, நீ இப்படி’ என்று சமாதானம் செய்து அனுப்பிவைக்க வேண்டியதாயிற்று.
விசே போனதும், பாரு, சுபியைப் பிடித்துவைத்துக்கொண்டு, ‘ஏன் எனக்கு மட்டுமே 12 ஓட்டு போட்டு ஓட்டை வேஸ்ட்டாக்குறீங்க என்று விஜய் சேதுபதி கேட்டாருல்ல, பதில் சொல்லு. நீயும் எனக்குதான ஓட்டு போட்ட? எனக்கு போடுற ஒவ்வொரு ஓட்டும் வேஸ்டுதான். உன் ஓட்டை வேஸ்ட்டாக்குறியே, அறிவில்லியா உனக்கு? விஜய் சேதுபதியே எனக்கு யாரும் ஓட்டுப் போடக்கூடாதுனு சொன்னப் பிறகாவது திருந்துவீர்களா? அடுத்த வாரம் சொல்ல வைக்கிறேன்’ என்று மிரட்டிக்கொண்டிருந்தார். விசே சொன்னாலும் சொல்லுவார்!