இதை நாம் கொஞ்சமும் எதிர்பார்க்கவில்லை. சாண்ட்ரா ரகசிய டாஸ்க்கைச் சொதப்புவார் என்று நாம் எதிர்பார்த்ததைப்போல அல்லாமல், பட்டையைக் கிளப்பிவிட்டார் என்றுதான் சொல்லவேண்டும்.
முதலில், ‘பூசணி, ஒரு வேலையும் செய்ய மாட்டேன்கிறான், அவனை என் டீமிலிருந்து மாற்றிவிடு’ என்று மேனேஜர் விக்ரமிடம் மெதுவாக, ரொம்ப சாஃப்டாகத்தான் ஆரம்பித்தார். அதற்கு முதலில் மண்டையை ஆட்டிய விக்ரம், அதன் பிறகு பூசணி முடியாது என்று சொன்னதும், அவர் செவுளில் ரெண்டு போட்டு அனுப்பியிருந்தால் கதை முடிந்திருக்கும். அப்படிச் செய்யாமல் பூசணியிடம் கெஞ்சிப் பார்த்து அவர் மறுத்ததும், சாண்ட்ராவுக்கு எதிராகத் திரும்பியது சுவாரசியம்.
சாண்ட்ராவும் ஒன்றன்பின் ஒன்றாக அவரது ஒவ்வொரு ஆயுதமாக இறக்கிக்கொண்டே இருந்தார். முதலாவதாக வேலையை ரிசைன் செய்தார். வைல்டு கார்டு எண்ட்ரிகளுக்கு எதிரான மனநிலையில் மொத்த வீடும் இருந்ததில், அதற்கு விக்ரமும் தப்பவில்லை. ’சாண்ட்ரா வேலையை ரிசைன் செய்தால் என்ன, சமைக்க நான் இருக்கிறேன் விக்ரம், கவலை வேண்டாம்’ என ஜெனிபாப்பா வியானா முன்வந்தார். ஆனால், நிஜத்தில் பாப்பா வெந்நீர் வைப்பது, மாவு பிசைவது, பருப்பு வேகப்போடுவது போன்ற அரிய வேலைகளை மட்டுமே செய்து கொண்டிருக்கிறார். ஆனால், அவற்றையே அக்கார்டு ஓட்டல் செஃப் போல கிச்சனில் பிசியாக செய்துகொண்டிருக்கிறார் எனும் ரகசியம் நமக்கு மட்டும்தான் தெரியும். உண்மையில் முன்னர் கிச்சனைக் காத்தது கனி, அடுத்து வந்தது சாண்ட்ரா. அவர்கள் சமைக்கும் சமையலைத்தான் பாப்பா, தூக்கிக் கொண்டு வந்து ‘கிக்கிப்பிக்கி’ என்று இளித்தபடி பரிமாறி பெயரை வாங்கிக்கொண்டிருந்தார். இது புரியாத விக்ரம், ’ஆகா, கையில் இந்தோ, சீன, ஈரோப்பிய க்யுஸின்களைக் கரைத்துக் குடித்த அதிரடி செஃப் வியானா இருக்கையில் நமக்கென்ன கவலை’ என்று, ‘சாண்ட்ராவே மூக்கில் விரலை வைக்கும்படி, நாளைய சமையல் 12 மடங்கு சூப்பராக இருக்க வேண்டும்’ என்று சூளுரைத்ததெல்லாம் செம காமெடி!
சாண்ட்ரா அடுத்த ஆயுதமாக, அவரது உடமைகளைத் திருப்பித் தராமல் ஸ்ட்ரைக் செய்தார். அதற்கு ரொம்ப நியாயம் பேசுவது போல வந்த பாரு, ‘திருப்பித் தரவில்லை எனில் சம்பளம் தரமாட்டோம்’ என்று சொல்ல, ‘தரலைன்னா மூடிகிட்டுப் போ’ என்று அவர் பாணியிலேயே வாயில் ரெண்டு போட்டு அனுப்பி வைத்தது செம! கெஸ்ட்டுகள் குழப்பத்திலும், கோபத்திலும் இருக்க, அதை மேலும் அதிகரிக்கும் வண்ணம் அடுத்த இரண்டு குண்டுகளைத் தூக்கிப் போட்டார். ‘ஏற்கனவே எனக்கு சளிபிடிச்சிருக்கு, என் டவலை எடுத்து பிரியங்காவுக்குக் கொடுத்துருக்கானுங்க, அதை முதலில் வாங்கிக்கொடுங்க’ என்று சொல்ல பிரியங்காவுக்கு டாஸ்க்கை மீறிய அதிர்ச்சி. அடுத்து, ’இவனுக சமைக்கிற லட்சணத்தைக் கவனீச்சீங்களா கெஸ்ட், சட்னியில் கிடந்த முடியைத் தூக்கிப் போட்டுட்டுதான் உங்களுக்கு சாப்பிடக்குடுக்குறானுக’ என்று போட்டுவிட்டார்.
அடுத்து, மற்றவர்கள் கெஸ்டுகள் கையில் காலில் விழுந்து சமாதானப்படுத்தி சாப்பிட வைத்துக்கொண்டிருந்தனர். சாண்ட்ரா அவர்கள் பக்கத்தில் போய், தும்மி வைத்து அந்த இடத்தையே ரணகளப் படுத்தினார். சாண்ட்ராவின் அட்டகாசம் பொறுக்கமுடியாமல் போக, ரொம்பத் தெளிவு என்று நாம் நினைத்துக் கொண்டிருந்த அமித் வந்து, சாண்ட்ராவை தனியறையில் அடைத்து வைக்க வேண்டும், அவரது பொருட்களை வெளியே எடுத்து வீச வேண்டும் என்றெல்லாம் ராங் ரூட் எடுத்துப் போய்க்கொண்டிருந்தார்.
அழாத குறையாக விக்ரம் வந்து, ‘இப்ப என்னதான் வேணும் சாண்ட்ரா?’ என்று கேட்க, ‘அந்தத் தடிப்பூசணிப்பயலை என் டீம்லருந்து தூக்கிப் போடு, நான் மீண்டும் வேலைக்கு வர்றேன். எல்லாம் சரியாயிடும்’, என்று அவர் ஆரம்பித்த இடத்திற்கே சரியாகக் கொண்டு வந்து நிறுத்தினார். மீண்டும் விக்ரம் பூசணியைக் கெஞ்ச அந்தாள் முடியாது என்று பிடித்த பிடியிலேயே நின்றார். அதற்கு மேல் முடியாமல், கதறியழுதபடி மேனேஜர் வேலையை ரிசைன் செய்து பிக்பாஸிடம் மண்டியிட்டார் விக்ரம்! இதைப் பார்த்த திவ்யாவுக்கு மனநிறைவு. ஆனால், அதில் வன்மமில்லை, பதிலாக, ‘நேற்று என்னை என்ன பாடு படுத்தினீங்கடா டேய், எவனாச்சும் நான் சொன்னதைக் காதில் வாங்கினீங்களா? இப்பத் தெரியுதா மேனேஜர் போஸ்ட்னா என்னான்னு?’ எனும் ஆசுவாசம்தான் இருந்தது.
விக்ரமின் இந்த முடிவை பிக்பாஸே எதிர்பார்க்காததால், ‘சட்டுபுட்டுனு அடுத்த மேனேஜரை தேர்ந்தெடுங்க’ என்று சொன்னார். கூட்டமாக, சபரியை அடுத்த பலியாடாகத் தேர்ந்தெடுத்தனர். இந்த இடைப்பட்ட கேப்பில், ஆஜானுபாகுவான அமித் தனியே போய் அழுது கொண்டிருந்தார், என்ன காரணம் என்பது சரியாகத் தெரியவில்லை. இன்னொரு புறம் மூன்று கெஸ்டுகளும் அறைக்குள் உட்கார்ந்து புலம்பிக்கொண்டிருந்தனர். அதில் தீபக் கண்ணீர் விட்டு அழுது கொண்டிருந்தார். ஒரு தும்மல் போட்டதுக்கா இந்தப் பாடு என்று நமக்கு ஆச்சரியமாக இருந்த்து. இந்த அழகில் தீபக் முன்னாள் போட்டியாளராக இருந்தவர், அமித், பிக்பாஸின் குரலாகவே கன்னட பிக்பாஸில் பங்களித்தவர் என்று ஒரு செய்தி ஓடுகிறது. இவர்கள் இருவராலும் கூட இப்படியான நீண்ட டாஸ்க்கில் ரகசிய திட்டங்கள் இருக்கலாம் என்பதை கணிக்க முடியவில்லை.
புது மேனேஜராக தேர்ந்தெடுக்கப்பட்ட சபரி, திகிலோடு சம்மதித்தபடி, முதலில் இந்த பூசணியின் வாயை அடைத்தால் எல்லாம் சரியாகிவிடும் என்று முடிவெடுத்து ‘பேசக்கூடாத’ சிலை கேரக்டரை அவருக்குக் கொடுத்தார். பூசணி அதை மறுக்க, பாருவும், வியானாவும் பூசணிக்கு ஆதரவாக அணி திரள எல்லாவற்றையும் மீறி பூசணி தலையில் சிலை கேரக்டரைக் கட்டினார்கள். வியானா பாப்பாவின் ஆர்மியைக் கலைக்க வேண்டிய நேரம் வந்துவிட்டது போலிருக்கிறது. நாமும் பூசணி வாயை மூடிக்கொண்டிருக்கும் அந்தக் கண்கொள்ளாக் காட்சியைக் காண ஆவலாக இருந்தோம். ஆனால், அந்தாள் அந்தக் கேரக்டரை ஏற்றுக்கொள்ளும் முன்பாக கடைசியாக ரீல்ஸ் செய்துகொள்கிறேன் என்று, நாம் கதறக்கதற 5 படங்களின் காட்சிகளை பொறுமையாக நடித்து முடித்துவிட்டுத்தான் பதவியேற்றார். ஆனால், இந்தாள் அமைதியாக இருப்பதை எஞ்சாய் செய்யவிடாமல் மொத்த டாஸ்க்குமே கொஞ்ச நேரத்தில் முடிந்துபோனது தனி சோகக்கதை!
அதன்பின்னர், சாண்ட்ராவும், திவ்யாவும் தனியே உட்கார்ந்து புறணி பேசிக்கொண்டிருந்தார்கள். தான் உள்ளே வந்து நிலைநிறுத்துவேன் என்று சொன்ன டிக்னிடி, டெகோரம் எல்லாவற்றையும் காற்றில் பறக்கவிட்டுவிட்டு, பாடி ஷேமிங், கேலி, சிரிப்பு என இயல்பு நிலைக்குத் திரும்பியிருக்கிறார் திவ்யா. இந்த வீட்டின் மகிமை அப்படிப்பட்டது. கூட அரட்டையடிக்க ரம்யாவையும் அவர்கள் கூப்பிட, ‘இந்தப் பேயி, குட்டிச்சாத்தான் கண்ணுல படாம, மேனேஜர்கிட்ட பர்மிசன் வாங்கிட்டு வர்றேன், இருங்க’ என்று தன்னியல்பில், பாருவைத் திட்டியபடி வந்தது நம் வீட்டுப் பெண்கள் பேசுவதைப் போலிருந்தது. அதைக் கேட்டு திவ்யா அடக்கமுடியாமல் சிரித்த போது அழகாக இருந்தார். புறணி பேசிச் சிரிக்கும் போதுதான் பெண்கள் மிக அழகாக இருக்கிறார்கள்.
இந்த மொத்த எபிஸோடிலும் பாரு, தான் ஒரு உண்மையான ரவுடி அல்ல, ஒரு டம்மி பாவா என்பதை நிரூபிக்கும் வண்ணம் பம்மியபடி, இருக்கும் இடம் தெரியாமல் இருந்ததுதான் ஹைலைட்டே!