Vijaysethupathi on Day 28 @jiohotstar
BiggBoss 9

உள்ளே போன நாலு பேரு..! #Biggboss Day 28

'இதுக்கு மேலயும் நாம திருந்தலைன்னு வையி, அடுத்த வாரம் நமக்கு சங்கு ஊதிருவானுங்க, அதனால நாம பிரேக்கப் பண்ணிக்கலாம்' என்றார் அரோரா.

ஆதி தாமிரா

'வீட்டுத்தல' பிரவீன் எப்படி செயலாற்றினார் எனும் கேள்வியை முதலில் கேட்டார் விசே! முதலில் வாயைக் கொடுத்து ஒரு குத்து வாங்கிக்கொண்டார் பாரு. அடுத்து கமருவும் என்ன பேசுகிறோம் என்பதே தெரியாமல் பேசி ஒரு குத்து வாங்கிக்கொண்டார். வியானா பாப்பா அழகாகக் கருத்து சொல்லி பாராட்டு வாங்கிக்கொண்டார். மற்றவர்களும் ஏனோதானோவென்று ஏதேதோ சொல்லிக்கொண்டார்கள்.

இடைவேளையில் கமருவும், பாருவும் பேசிக்கொண்டார்கள்.

‘அடேய், இந்த வியானா பாப்பா மட்டும்தான் இந்த விளையாட்டை நல்லா விளையாடுது. அறிவா பேசுது. நம்மோட ஞானக்கண்ணுக்கு இது எப்படி இம்மா நாளு தெரியாம போச்சுன்னு தெரியல. எல்லோரும் ஏத்து வாங்கும் போதுகூட அவளை மட்டும் விசே பாராட்டுகிறார். மக்களிடமும் அவளுக்கு பெரிய வரவேற்பு இருக்குது. எப்படியாச்சும் அவளை நம்ம அடிமையாக்கிட்டோம்னா, அது நமக்கு நல்லது’ என்று பாரு சொன்னதற்கு அழகாக மண்டையை ஆட்டினார் கமரு. இன்னொரு பக்கம் துஷாரும், அரோராவும் பேசிக்கொண்டார்கள்.

‘இதுக்கு மேலயும் நாம திருந்தலைன்னு வையி, அடுத்த வாரம் நமக்கு சங்கு ஊதிருவானுங்க, அதனால நாம பிரேக்கப் பண்ணிக்கலாம்’ - இது அரோரா.

துஷாருக்கு நெஞ்சில் இடி விழுந்தது போல கலக்கம்! ‘என்ன சொல்ற நீ, அப்ப இவ்வளவு நாளா இருந்த நம்ம உறவு பொய்யா கோபாலி ?’ என்பது போல பார்த்தார். அவர் முகத்திலிருந்தே டயலாக்கை சரியாக ஊகித்த அரோரா, ‘அடேய், நான் இந்த வீட்டுக்குள்ள இருக்குற நிலையை சொன்னேன். நம்ப பஞ்சாயத்தை வெளியே போய்ப் பார்த்துக்கலாம்’ என்று அரோரா சொன்னதும்தான் ‘அப்பாடி!’ என்று போன உசுரு திரும்பி வந்தது துஷாருக்கு.

Kamurudin and Vj Paaru discussing

அடுத்து Wild Card நுழைவுகள்! முதல் எண்ட்ரி நீண்டகால டிவி நடிகர் பிரஜின்! பிரஜினும், விசேவும் மாமன், மச்சான் நண்பர்கள் என்பதை மறைக்காமல் மேடையிலும் அப்படியே பேசிக்கொண்டார்கள். ஆனால், பிரஜின் உள்ளே போனபிறகு அப்படி இருக்காது என்பதை வெளிப்படையாகவே சொன்னார் விசே! பிரஜின் அறிமுக விடியோவில் கொஞ்சம் தைரியசாலியாக காண்பித்திருந்தார். ஆனால், இப்படியான தைரியசாலிகள் உள்ளே போனதும் என்னவாயிருக்கிறார்கள் என்பதை நாம் பார்த்திருக்கிறோம். கையோடு அவரது மனைவி சாண்ட்ராவையும் உள்ளே அனுப்பி வைத்தார்கள். பிரஜினுக்கு போட்டியாளர்களை சமாளிப்பதா, பொண்டாட்டியை சமாளிப்பதா என்று இருவிதமான அழுத்தம் ஏற்படலாம். முதல் முறையாக கணவன் வனைவியாக உள்ளே போகும் ஜோடி இவர்கள்தான் போலிருக்கிறது. இதற்கு முன்னர் தாடி பாலாஜியின் மனைவி உள்ளே போயிருந்தாலும், அவர்கள் பிரிந்து வாழ்ந்த கேட்டகிரி. ஜோடிகளை உள்ளே அனுப்புவதில் சில சவால்கள் இருக்கின்றன. இது சிக்கலை ஏற்படுத்துமா, சுவாரசியத்தை ஏற்படுத்துமா என்பதைப் பொறுத்திருந்து பார்ப்போம்.

இருவருக்கும் உள்ளே போனதும், ஏற்கனவே இருப்பவர்களை குழப்பி விடும் வழக்கமான முதல் டாஸ்க்கை கொடுத்திருக்கிறார்கள். எல்லோரையும் வரிசையாக நிற்க வைத்து ‘எதற்காக உள்ளே வந்திருக்கிறீர்கள்’ என்ற கேள்வியைக் கேட்டு ரிவ்யூ கொடுக்கும் வேலை. அதை எழுதி வைத்துக்கொண்டு எல்லாரும் காத்திருந்தார்கள். முதலில் வந்த பாருவை மூக்கிலேயே குத்தி, அவர் எழுதி வைத்த பேப்பரைக் கிழித்துப் போட்டார்கள். நமக்கு ஒரு சின்ன மகிழ்ச்சி. கமரு, ‘எல்லாமே எங்க பாரு சொல்றபடி கேட்டு சிறப்பா நடந்துகிட்டிருக்கேன்’ என்று உளறினார். பிரஜின் ஏதோ சொல்ல, பாரு பயங்கரமாகக் கொந்தளித்தார். பாருவுக்கும், கமருவுக்கும் இடையே உள்ள உறவை முறிக்கும் போட்டுக்கொடுக்கும் நிகழ்ச்சி போலிருக்கிறது. அங்கு ஒரு எடிட் இருந்தது, அதனால் முழுதும் நமக்குப் பிடிபடவில்லை. அடுத்து தர்பூசணியை கொஞ்சம் ஜூஸ் போட்டார்கள். நமக்கு மகிழ்ச்சி! அரோராவின் பேப்பரையும் கிழித்துப் போட்டார்கள். எஃப்ஜேவுக்கும், துஷாருக்கும் ஒரு சின்னக் குத்துகள் விழுந்தது. கெமி, வியானா, கனி, வினோத், விக்ரம், ரம்யா, சுபி, சபரி ஆகியோர் சின்ன அறிவுரையுடன் தப்பித்தார்கள்.

Actor Prajin and Sandra Amy

அடுத்த வைல்டு போட்டியாளர்கள் டிவி நடிகை திவ்யா கணேஷ், அமித் பார்கவ். திவ்யாவின் பேச்சு நம்பிக்கையூட்டுகிறது. அமித்தும் மெச்சூர்டாகத் தெரிகிறார். ஆனால், இந்த வீடு, மெச்சூரிடியையெல்லாம் உடைத்தெறியக் கூடியது. எழுத்தாளர் பவா செல்லத்துரையையே உளற வைத்த வீடு இது. இவர் தாங்குவாரா என்பதைப் பொறுத்திருந்து பார்ப்போம்.

நாம் நினைத்ததைப் போலவே, பிரஜின் போட்டுவிட்டது, பாரு, கமரு பிரச்சினைதான் போலிருக்கிறது. கமருவைப் பற்றி பாரு, பூசணியிடம் புறம்பேசியதைத்தான் போட்டிருப்பார் என்று கணிக்கலாம். அது அவர்கள் இருவரிடையே பற்றிக்கொண்டது. கமரு கொந்தளித்துக் கொண்டிருந்தார். ‘இந்தப் பாரு மீது, உனக்கு கொஞ்சமாச்சும், துளியூண்டு, பாசம், நேசம், அன்பு, மரியாதை இருக்கிறதா? இவ்வளவு நாள் நாம் பழகிய பழக்கம் உண்மையென்றால், என்னை எதிர்த்துப் பேசாமல், ஒரு நிமிசம் நான் சொல்வதை உட்கார்ந்து கேட்க முடியுமா, முடியாதா?’ என்று பாரு கெஞ்சியும் பிரயோஜனமில்லை. கமரு எழுந்து தூரமாகப் போனார். வடிவேலு காமெடி போல, ‘நீயும் போனால் அது சுயநலம், இந்தப் பாருவுக்கு வேறு கதியில்லை’ என்று நிறுத்தப் பார்த்தார். அதற்கும், ‘என்னது சுயநலமா?’ என்று திரும்ப வந்து கொந்தளிப்பதற்குள் திவ்யாவும், அமித்தும் வருகை நடந்தது. ‘இன்னும் எத்தனை பேர்தான் வருவாங்க, அய்யோ முடியலயே’ என்று பாரு தலையிலடித்துக் கொண்டார்.

AMIT BHARGAV AND DIVYA GANESH

அமித் எல்லோரையும் பற்றி விமர்சனங்கள் வைத்தார். ஓரளவு சரியாக இருந்தது. ‘பாரு, உங்க சண்டை மத்தவங்களுக்காக இருந்தால் நீங்க ஹீரோ, ஆனா, அது உங்க சொந்த வயித்தெரிச்சலுக்காக மட்டுமே இருக்கிறது. அப்படின்னா ஜீரோ’ என்று சரியாகச் சொன்னார். ஊஹூம், இப்போ அமித்துக்கு என் மேல பொறாமை என்றுதான் இதையும் அவர் எடுத்துக்கொள்வார். திவ்யா, பூசணியின் நாகரீகத்தைப் பற்றிப் பேசவும் பூசணி, ‘நீ எதையும் பார்க்காமல் வந்து என்னத்தையாவது உளறுவியா? அதெல்லாம் ஏத்துக்க முடியாது’ என்று ஆரம்பித்து திவ்யாவை டென்சனாக்கினார். திவ்யாவும், அமித்தும் சேர்ந்து மோசமான பிளேயர்கள் என்று சொன்னதால், அரோரா, சுபி, பூசணி, விக்ரம் நால்வரும் வீட்டுக்கு வெளியே கார்டனில்தான் இருக்க வேண்டும் என்று பிக்பாஸ் அவர்களை வெளியே அனுப்பினார்.