விஜய் சேதுபதி வரும்போதே செம காண்டாக வந்தார். காட்டுக்கத்தலாகக் கத்தி நிகழ்ச்சியை பார்க்க விடாமலும், எரிச்சலூட்டும் விதமாகவும் போட்டியாளர்கள் நடந்துகொள்வதாக மக்களிடம் குறைபட்டுக்கொண்டார். ஏதோ இந்த வாரத்தில்தான் இவர்கள் இப்படி நடந்து கொள்கிறார்கள் என்பது போல சொன்னார். இப்போதுதான் உங்களுக்குத் தெரிகிறதா ஐயா என்பது நாம் கேட்கும் கேள்வி.
இதனால் வெள்ளிக்கிழமை எபிசோடைக்கூட ஃபார்மாலிடிக்கு ஓரிரு நிமிடங்கள் காண்பித்துவிட்டு பஞ்சாயத்துக்கு வந்துவிட்டார். அந்த ஓரிரு நிமிடங்களில் கூட நம் கண்ணுக்கு பாருவும், கமருவும் பேட்சப் ஆகிக் கொண்டிருக்கும் காட்சிதான் தெரிந்தது. நமது கண் ஏதாவது நொள்ளையாகி விட்டதா என்று மருத்துவரிடம் காண்பித்துப் பார்த்துக்கொள்ள வேண்டும்!
விசேவைப் பார்த்ததும், உற்சாகமாக வணக்கம் சொல்ல எழுந்தவர்களை உட்காரச் சொல்லிவிட்டு, கையோடு கொண்டு வந்த மெகா போனில் அவர்களைப் போலவே ஓரிழவும் புரியாதபடி கத்திக் காண்பித்தார். இன்றைக்கு ஏதோ சம்பவம் இருக்கிறது என்பதை உணர்ந்த எல்லோரும் கப்சிப்பென்று உட்கார்ந்தார்கள். முதலில், முதலாவதாக உட்கார்ந்திருந்த பூசணி நாயகனை எழுப்பினார்.
‘யோவ், நீ ரீல்ஸ் பண்ணு. ஆனா அதை மட்டுமேதான் பண்ணுவேன்னா உள்ள ஏதுக்குய்யா வந்த? அதை ஊட்டுல உக்காந்து போன்ல பண்ண வேண்டியதுதானே, வேணா அனுப்பி வைக்கட்டுமா?’ என்றதும், அச்சச்சோ, நம்ம அடிமை பூசணிக்கே இந்த பூஜைன்னா, நமக்கு என்னாகப் போகுதோ என்று பாருவுக்கு அல்லு இல்லை! இது வழக்கமான பஞ்சாயத்து என நினைத்துக் கொண்ட பூசணி வாயைத் திறந்தார்:
‘சார் அது வந்து, என்னை நீ நான்னு மரியாதை இல்லாம…’
‘யோவ் நிறுத்துய்யா முதல்ல, நீ எல்லாருக்கும் மரியாதை குடுக்குறியா அங்க? வாயைத் தொறந்தன்னா அவ்வளவுதான் சொல்லிப்புட்டேன். நீ ஒருத்தனுக்கும் மரியாதை கொடுக்குறதில்ல, ஒருத்தன் சொல்றதையும் கேட்கிறதில்ல, காதுன்னு ஒண்ணு என்னத்துக்கு இருக்குன்னே உனக்கு தெரியல, வாயி மட்டும்தான் இருக்குன்னு நினைச்சிகிட்டிருக்க. இந்த லட்சணத்துல எதுக்கெடுத்தாலும், வீக்கெண்டுல விசேகிட்ட சொல்லிடுவேன், விசேகிட்ட சொல்லிடுவேன்னு பில்டப்பு வேற, நான் என்ன உனக்கு பஞ்சாயத்து பண்றதுக்குதான் இங்க வந்துட்டுப் போறேனா?’ என்றார் விசே. பின்ன வேற எதுக்கு வர்றாரு என்று பூசணி மனதுக்குள் நினைத்தது கண்ணாடி போல வெளியே தெரிந்தது.
‘நீங்க பண்ற கூத்துகளுக்கெல்லாம் மக்கள்தான் பஞ்சாயத்து பண்ணுவாங்க, அவங்க நீங்க பண்றதையெல்லாம் பாத்துகிட்டு இருக்காங்க. அவங்க தீர்ப்பு கொடுப்பாங்க. என்கிட்ட வீக்கெண்டுல வந்து சொல்றதுனால எந்தப் பயனும் இல்லை. உங்க தகுதியை, உங்க நடத்தையில், பேச்சில் காண்பிங்க! இங்க வந்து ஒண்ணும் சொல்லத் தேவையில்லை. அதென்ன எதுக்கெடுத்தாலும் என் தராதரம் தெரியாம பேசறாங்கன்னு சொல்றீங்க. அதென்ன தராதரம், எதுவும் மீட்டர் வைச்சிருக்கீங்களா? அடுத்தவங்க தராதரத்தைப் பத்திப் பேச நீங்க யாரு முதல்ல? ஆமா, பிக்பாஸ் கூப்பிட்டாக்கூட, இன்னும் பத்து நிமிசம் ரீல்ஸ் பண்ணிட்டுத்தான் வருவேன்னு சொன்னியாமே, அப்ப, யாரு சொல்றதைத்தான் கேப்ப நீ? யோவ் நீ இருக்கிறதே, அந்தாளு வீட்டுல, அடிச்சிப் பத்தி விட்டுருவான், புரியுதா இல்லியா?’
என்று விளாசியபடி புளி போட்டு விளக்கினார். ஊஹூம், அவர் மண்டையில் இதுவும் ஏறப்போவதில்லை.
இரண்டாவதாக எஃப்ஜேவை எழுப்பி,
‘நீ என்ன பெரிய ரவுடியா? நாக் அவுட் பண்ணிட்டு வெளிய போயிடுவியா? ஏன், இப்பவே அனுப்பறேன், போறியா? ’வெட்டிருவேன்’னு சொன்னதுக்கு ஏற்கனவே ஒரு தடவை எச்சரிச்சேன், இது இரண்டாவது தடவை?’ என்று பொரிந்தார் விசே.
அவரை எச்சரித்துவிட்டு, அடுத்து கலையை எழுப்பினார்,
‘உன்னையெல்லாம் எங்கேருந்துய்யா கூட்டிகினு வந்தாங்க. நீ பேசறப்ப பீப் சவுண்டு போடுறதுக்கே ஒரு எடிட்டர் தனியா வேலை பாக்குறான்யா’ என்றதும், கலை சிரித்தார்.
கடுப்பான விசே, ‘இதுக்கு நீங்க வெக்கப்படணும் செண்ட்ராயன்… குழந்தை குட்டியா பாக்குற நிகழ்ச்சியில கெட்ட வார்த்தை பேசிட்டு, சிரிக்க வேற செய்யுறியா, வெக்கமால்ல’ என்று ஒரு ஏத்து ஏத்தினார்.
’கத்தறதுல அவார்டே குடுக்கலாம் உங்க ரெண்டு பேருக்கும், அதுல என்னய்யா டேலண்டு?’ என்று சபரிக்கும், ரம்யாவுக்கும் கூட போற போக்கில் ஆளுக்கொரு குட்டு விழுந்தது. சபரி, கனி, எஃப்ஜே அன்புக்குழுவையும் ஒரு உரி உரித்தார்! கனிக்கும் கூட சரமாரியாக தாக்குதல் நடந்தது.
இடைவேளையில், ‘அவங்க கத்தும்போது, நாம அமைதியா எப்படி பாரு கேட்க முடியும்?’ என்று பூசணி ஆச்சரியமாகக் கேட்க, பாருவும், ‘அதானே, நல்ல கதையா இருக்கே இது’ என்று சொல்லிக் கொண்டார்.
கடைசியில், அரோராவையும், துஷாரையும் எழுப்பி, ’ஏஸி எல்லாம் நல்லா வேலை செய்யுதா? வேற ஏதும் உங்களுக்கு உதவி தேவையா? ஏதாவது வசதிக்குறைவுன்னா சொல்லுங்க, பாக்கச் சொல்றேன்’ என்றார். இருவரும், ‘சரி’ என்பது போல தலையாட்டியதுதான் ஹைலைட்! ‘ஸாரி’ சொன்னாலும் திட்டு விழுது, பதில் பேச வாயைத் திறந்தாலும் வாயிலேயே குத்துறாரு, அடுத்தவனை திட்டும்போது சிரிச்சாலும் நமக்கு ஏத்து விழுதுனு இன்னிக்கு எல்லோரும், எதற்கு எப்படி ரியாக்ட் செய்வது என்ற குழப்பத்தில் இருந்ததை உணரமுடிந்தது. ஆனாலும், கமருவையும், பாருவையும் சரியாகக் கவனிக்காமல் விட்டுவிட்டாரோ எனும் சின்ன குறை நமக்கு இருக்கிறது. இவ்வளவு கூத்துகளுக்கும் இடையே வியானா பாப்பாவுக்கு மட்டும் விசேவிடமிருந்து பாராட்டு கிடைத்தது. பாப்பாவும் ஹேப்பி, நாமும் ஹேப்பி!
அன்பு செஞ்சு க்ரூப்பிசம் செய்யறீங்க என்று சபரி, கனி, எஃப் ஜேவைத் திட்டியவர், எல்லார் முன்னாலும் வெளிப்படுத்தியவர், பாருவை ஏன் எக்ஸ்போஸ் செய்யவில்லை என்று தெரியவில்லை. பாரு, தர்பூசணி நாயகனிடம் 'நீ நானும் ஒண்ணு. என் அண்ணன் உனக்கொண்ணுன்னா நானும் எனக்கு நீயும் இருப்போம்' என்று சொன்னாரே? கமருதீனிடமும் 'நாம ஒருத்தருத்துக்கொருத்தரா இருப்போம் வீட்ல' என்று சொல்லவில்லையா? அதெல்லாம் மட்டும் சரியா? என்னமோ போங்க!
நாளை நான்கு புதிய நபர்கள் வைல்டு கார்டு எண்ட்ரியில் உள்ளே வரப்போவதால், இன்றைக்கே எவிக்சன் வேலையை முடித்துவிடலாம் என்று கிரிஞ்சு கலையரசனை வெளியே தள்ளினார்கள். கமரு ஜஸ்ட்டுல மிஸ்!