’மக்கள் எல்லோருக்கும் பிடித்த, குறிப்பா பெண்கள் எல்லோரும் விரும்பிக் கேட்கிற என்னோட அழகான சிரிப்பு, சிக்னேச்சர் ஸ்டெப்பை இப்போ பண்ணிக் காண்பிக்கிறேன்’ என்று தர்பூசணி நாயகன் கேமிராக்கு முன்னால் ஈஈஈ என்று இளித்துக்கொண்டிருந்தார். குடித்துக்கொண்டிருந்த கஞ்சியை கொப்பளிக்கும் அளவுக்கு சிரிப்பு வந்தது பக்கத்திலிருந்து பார்த்துக்கொண்டிருந்த அரோராவுக்கு. நமக்குதான் இதையெல்லாம் பார்க்குமளவுக்கு தெம்பில்லை!
அடுத்து கமருவும், பாருவும் முட்டிக்கொண்டார்கள். நாம் யூகித்ததைப் போலவே பாரு, கமருவைக் கழற்றிவிட்டுவிட்டு, பூசணியை மீண்டும் சேர்த்துக் கொண்டிருக்கிறார்.எல்கேஜி பிள்ளைகள்தான் சண்டையிட்டுக் கொள்ளும் போது சொன்னதையே மீண்டும் மீண்டும் சொல்லியபடி, ‘நீதான் முட்டாள்’ – ’நீதான் பெரிய முட்டாள்’ – ‘நீதான் பெரிய பெரிய முட்டாள்’ – ‘நீதான் பெரிய பெரிய பெரிய முட்டாள்’ என்று போய்க்கொண்டே இருப்பார்கள். ஆனால், இந்தத் வயதில் இவர்களும் இப்படி சொன்னதையே திரும்பத் திரும்பச் சொல்வதைக் காது கொடுத்துக் கேட்கமுடியவில்லை. என்ன மாதிரியான அரைவேக்காட்டுத்தனம் இது!
அடுத்து வந்த டெய்லி டாஸ்க்குக்கு யார் போவது என்ற கலந்தாலோசனை நடந்தது. கலந்தாலோசனை என்று வந்துவிட்ட பிறகு தகராறு இல்லாமல் எப்படி? பூசணிக்கு வாயில் கிரகம் சரியில்லை. எல்லாவற்றிலும் மூக்கை நுழைத்துக் கொண்டு, ஏதாவது ஒன்றில் சேர்த்துக் கொள்ளவில்லை என்றாலும், ‘பழிவாங்குறாங்க, நீதி, நியாயம், நேர்மை இல்லை, அநியாயம் நடக்குது’ என்று மைக்கில் அலறுகிறார். போற போக்கில், ‘சோத்துலயும் அநியாயம் பண்றாங்க’ என்று வார்த்தையைவிட, ‘எல்லாவற்றையும் தின்னுப்புட்டு இதை வேற சொல்றானா’ என்று சரியான சபரியே முதல் தடவையாக கொந்தளித்தபடி பூசணியை அடிக்கப் போய்விட்டார். இப்போது, பூசணி பேசியது அமுக்கிப் போய்விடும்! இப்படித்தான் இந்தாள் எல்லா பிரச்சினையிலும் மண்டை உடையாமல் தப்பிப் போய்க்கொண்டிருக்கிறார்.
‘அத்தான், செத்தான்’ என்று டாஸ்க் பெயராம். இந்த மாதிரி டாஸ்குக்கெல்லாம் பிக்பாஸ் டீமில் யார் பெயர் வைக்கிறார்கள்என்று தெரியவில்லை. தெரிந்தால் தனியாக அவரைக் கவனிக்க வேண்டும். இந்தப் போட்டியில் பிக்பாஸ் சாதாவாசிகள் வென்றனர்.
ரொம்ப நாளேச்சே என்று அடுத்தொரு போட்டுக் கொடுக்கிற டாஸ்க் வைத்தார் பிக்பாஸ்! ‘மேல்மாடி காலி’, ‘காக்கா கூட்டம்’, ‘வேலை செய்ற மாதிரி பாவ்லா செய்பவர்’, ‘நடிப்பவர்’, ‘குழாயடி சண்டை’ என எல்லா பட்டங்களும் பெரும்பாலும் பாரு மற்றும் திவாகர் இருவருக்கும் கிடைத்தன. இங்கேயும் எதிர்பார்த்தபடியே பெரிய அடிதடி, கூச்சல், குழப்பம் ஏற்பட்டது. பாருவும், பூசணியும் கொதித்தார்கள். ஆனால், அவர்களுக்கு மருந்து போடுவது போல ஜெனிபாப்பா வந்து அவர்களைச் சொல்லாமல், கனி, சபரி, எஃப்ஜே என அன்புக்குழுவுக்கு ‘ஜெயிக்கிற குதிரையோடு ஒட்டிக்கொள்பவர்’ பட்டத்தைக் கொடுத்தார். நமக்கு பத்து பட்டங்கள் வந்தாலும் பரவாயில்லை,கனிக்கு ஒரு பட்டமாவது போச்சே என்று பந்தா பாருவுக்கு ஒரே சந்தோஷம். எழுந்து குத்துடான்ஸ் ஆடி மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார். இதிலேயே இன்றைய பொழுதை ஓட்டிவிட்டார்கள்.