கட்டிப்பிடிப்பது, மடியில் தலை வைத்துப் படுப்பது, காலைத் தூக்கி அவர் மேலே போட்டுக்கொண்டு பேசுவது என எல்லாவற்றையும் தானே செய்துவிட்டு, தன்னுடன் ஒன்றாக சுற்றுகிற கமருவைப் பற்றியே முதுகுக்குப் பின்னால் ’அவன் என்னை தப்பாகத் தொடுகிறான்’ என்று நேற்று இழிவாகப் பேசினார் பாரு. இன்று கமருவைக் கூப்பிட்டு வைத்துக்கொண்டு, ’நாம் ஒருவருக்கொருவர் உதவியாக இருக்க வேண்டும், ஆனா, உனக்கு வேறு மாதிரி ஏதாச்சும் செகண்ட் தாட் இருந்தால் அதை மறந்துடு. நான் அழகாப் பிறந்தது என் தப்பா?’ என்று அறிவுரை சொன்னார். கமருவும் வழக்கம் போல மண்டையை ஆட்டினார்.
‘ரீல்ஸ் பண்ணும்போது பின்னால் வந்து மாக் பண்ணலாமா?’ என்று ஒரு பஞ்சாயத்து தர்பூசணிக்கும், வினோத்துக்கும் இடையே நடந்தது. விக்கல்ஸ் விக்ரம் நொந்து போய், ‘யோவ், ரெண்டு பேரும் என்ன வேணா பண்ணிக்குங்கையா, உங்களுக்குல்லாம் பஞ்சாயத்து பண்ற தெம்பு எனக்கு இல்ல, என்னால முடியல. வீக்கெண்டுல விசே வந்து கேட்டார்னா நீங்களே பேசிக்குங்க’ என்று புலம்பினார். விக்ரம் மாதிரி வீட்டுத் தல விட்டுவிட முடியாது, வீக்கெண்டுல ஆப்படிப்பார்கள் என்பதால், வேறு வழியில்லாமல் பிரவீன் இருவருக்குமிடையே மூச்சைத் தொலைத்துக் கொண்டிருந்தார்.
சட்டையைக் கழற்றிவிட்டுதான் வசூல்ராஜா கமல் போல, ‘சகலகலா டாக்டர் டாக்டர்’ சீனை ரீல்ஸ் பண்ணுவேன் என்று பிடிவாதம் பிடித்தார் திவாகர். ‘யோவ், சட்டையைப் போட்டுக் கொண்டு என்ன கருமத்தை வேண்டுமானாலும் பண்ணுய்யா’ என்று பிரவீனும், கனியும் பார்வையாளர்களான நம்மைக் காப்பாற்ற பெரும் பிரயத்தனம் பண்ணிப் பார்த்தார்கள். தள்ளுமுள்ளு ஆகிப்போனது, ஆனாலும் அந்தாள் அடங்கவே இல்லை! பதினாறு வயதினிலே கமல் மாதிரி கோவணம் கட்டிக்கிட்டுதான் ரீல்ஸ் போடுவேன்னு சொல்ல முடியுமா திவாகர் என்று கனி கேட்டுப் பார்த்தார். போச்சு! அந்தாள் இந்த ஐடியாவை பிக்கப் பண்ணி நாளைக்கு கோவணம் கட்டிகிட்டு வரப்போறார்!!
கூடவே கனி, ‘சட்டையில்லாம இருக்கிறது அநாகரீகமா இருக்கிறது’ என்று சொன்னதற்குப் பதிலாக, ‘நீங்க எஃப்ஜேவைக் கட்டிப்பிடிச்சுப் பேசறது கூடத்தான் அநாகரீகமாக இருக்கு’ என்று பூசணி அநாகரீகமா ஒரு குண்டைத்தூக்கிப் போட கனி நொந்து போய் விலகிப்போனார். எஃப்ஜே உள்ளே வந்து கத்த, சரியான சபரி கூட டென்ஷனாகி, ‘யோவ், எதை எதோடுய்யா ஒப்பிட்டுப் பேசற’ கத்தத் தொடங்கினார். இந்த சமயத்தில் கூட கனி மீது காண்டாக இருக்கும் பாரு, கனி சொன்னார் என்பதற்காகவே, ‘நான் இல்லாதப்ப என்னைப் பற்றி நீங்க எல்லோரும் குரூப்பா புறணி பேசறது நாகரீகம்னா, ஒருத்தர் சட்டையில்லாம ரீல்ஸ் பண்றதுல என்ன அநாகரீகம் இருக்கிறது?’ என்று பூசணிக்கு வக்காலத்து வாங்குகிற மாதிரி பஞ்சாயத்தையே அவர் பிரச்சினைக்குத் திருப்பினார். ஆனால், உண்மையில் இவரைப் பற்றி யாருமே புறணி பேசவில்லை, இவர்தான் எல்லோரையும் பற்றி முதுகுக்குப் பின்னால் புறணி பேசிக்கொண்டு திரிகிறார் என்பதுதான் இதிலிருக்கும் காமெடி! கொடுமைடா சாமி!
‘உன்னைப் பத்தி யாரு பேசினது? இப்ப யாரு பஞ்சாயத்து நடக்கிறது?’ என்று ஒன்றும் புரியாமல் பிரவீனும், சபரியும் மண்டை காய்ந்தனர்.
கூட்டம் கலைந்ததும், விக்ரம் பூசணியைக் கூப்பிட்டு, ‘கனியைப் பற்றி நீ சொன்னது தப்பு, எனக்கு ரத்தம் கொதிக்குது… ஆனா..’ என்று நியாயம் பேச ஆரம்பிக்கவும், ‘என் நடிப்பைப் பற்றி சொன்னா எனக்கு ரத்தம் தரதரன்னு கொதிக்குது’ என்று விக்ரம் சொல்ல வருவதைக் கூட கவனிக்காமல் விக்ரமின் ரத்தத்தை மேலும் கொதிக்கவிட்டார் பூசணி.
அடுத்து தினசரி டாஸ்க் என்ற பெயரில் ஒரு மல்யுத்தப் போட்டி நடந்தது. தனிநபர் மோதலில் வினோத், துஷார் மோதி அதில் வினோத் ஜெயித்தார். ஜோடி மோதலில் கமரு, கெமி ஒரு ஜோடியாகவும், எஃப்ஜே, ரம்யா ஒரு ஜோடியாகவும் மோதி கமரு, கெமி வென்றனர். அடுத்து குழு மோதல், சாதா குழு விக்ரம், பிரவீன், சுபி! டீலக்ஸ் குழு பூசணி, கனி, சபரி! இதில் சாதா அணி வெல்ல மொத்தத்தில் சாதா அணி வெற்றி பெற்றது. லாக்கருக்குள் போய் பாயிண்டுகளுக்கேற்ப உணவுப் பொருட்கள் எடுத்துக்கொண்டனர்.
அடுத்து, ‘ஆண் பாவம் பொல்லாதது’ எனும் பட புரமோஷனுக்காக, பழைய போட்டியாளர் ரியோ குழு உள்ளே வந்து போனது.