V J Parvati Jio Hotstar
BiggBoss 9

'சுற்றுலாவுக்கா வந்திருக்கானுக?' #BiggBoss Day 22

கனி 'ஸாரி' வேண்டும் என்று பிடிவாதம் பிடிக்க, பாரு இந்தப் பிரச்சினையில் தண்டனை என்ற பெயரில் நம்மை ஒதுக்கி வைக்கமாட்டானுங்களா, அப்படியாவது வேலை ஏதும் செய்யாமல் ஓபி அடித்துவிடலாம் எனும் நினைப்பில்...

ஆதி தாமிரா

இந்த வார ’தல’க்கான போட்டி. கனி, பிரவீன், விக்ரம் மூவரும் இணைந்து ஒரு ஸ்கீ போர்டில் நடக்கும் போட்டி. கடைசி வரை போர்டில் இருப்பவர் வெற்றியாளராம். ஓர் நிமிடம் கூட விளையாட்டை நடக்கவிடாமல், விக்ரமையும், கனியையும் தள்ளிவிட்டு சொதப்பலான வெற்றியைப் பெற்றார் மொரட்டு பிரவீன்! கனியும் லேசுப்பட்டவரில்லை, முதலில் பிரவீனைத் தள்ளிவிட முயற்சி பண்ணியவர் அவர்தான்.

பதவியேற்றதும் பிரவீன், ஏதோ மிலிட்டரி கேம்ப் போல எல்லோரையும் அதட்டி உருட்டி டீம் பிரித்தார். தவறு செய்பவர்களுக்கு தண்டனை கொடுப்பேன் என்றார். எல்லோரும் அமைதியாகக் கேட்டுக்கொண்டிருந்தார்கள். பந்தா பாரு தலையிட்டு,
‘அதென்ன தண்டனை? அது எப்படி இருக்கும்? ஷேம் கார்னர்னா என்ன? என்ன தப்பு பண்ணினா தண்டனை கிடைக்கும்? அத யாரு கொடுப்பா? நீங்க கொடுப்பீங்களா? தப்பு செய்றவங்க உங்களுக்கு குடுப்பாங்களா? தப்பு செய்ய வைச்சவங்களுக்கு தண்டனை உண்டா? அந்த தண்டனை பிக்பாஸுக்கு உண்டா? பிக்பாஸ் தண்டனை கொடுப்பாரா? விசே அதில் தலையிட உரிமை உண்டா? தண்டனைக்குப் பரிகாரம் உண்டா? அதைக் கொடுக்க உங்களுக்கு என்ன உரிமை இருக்கிறது? நீங்க தப்பு பண்ணினா யாரு தண்டனை கொடுப்பா? தண்டனைன்னா என்ன? ஐபிசி செக்சன்ல அதுக்கான வழிகாட்டுதல் இருக்கா? விடுதலை எப்போது கிடைக்கும்? இதெல்லாம் நான் எனக்காக கேட்கல, இங்கிருக்கும் எல்லோருக்காகவும் கேட்கிறேன்" என்றெல்லாம் நீண்ட நெடிய விளக்கம் கேட்டு தலைவலியைக் கொடுக்க ஆரம்பித்தார்.

பிரவீனுக்கு அடுத்த ஒரு வாரம் நடக்கப்போகும் நிகழ்ச்சிகள் கண்முன்னால் வந்து போய், லேசாக பீதியாக உணர்ந்தார். 

Kani and Parvathi

தல ஆனதால், டீலக்ஸ் அறைக்கான தகுதியை இழந்தார் பிரவீன். அவருக்குப் பதிலாக கனியை டீலக்ஸ் அறைவாசி ஆளாக்கினார். அதோடு நாமினேஷன் ப்ரீ பாஸும் கனிக்கு கிடைத்தது. கனி நான்காவது வாரமாக தொடர்ச்சியாக நாமினேஷன் ஃப்ரீ ஸோனுக்குள் போனதற்காக, ‘எனது மனமார்ந்த வாழ்த்துகள்க்கா’ என்று அவரைக்கூப்பிட்டு தனது வாழ்த்துகளைத் வம்படியாகத் தெரிவித்தார் பாரு. அதில் மனமார்ந்த வயித்தெரிச்சல்தான் தெரிந்தது.  

அடுத்து, ஸ்வாப்பிங்கிற்காக டீலக்ஸுக்கும், சாதா அணிக்குமிடையே கலைஞனும், கலையும் எனும் போட்டி நடந்தது. சாதா அணி ஜெயித்து, சுபி சாதா அணிக்கும், கலை டீலக்ஸ் அணிக்கும் இடமாற்றப்பட்டனர். டீலக்ஸ் அணிக்குப் போகும் ஆசையை கஷ்டப்பட்டு அடக்கிக்கொண்டார் பந்தா பாரு. முதல் வேலையாக கனி, பாருவை அவரது துணியை எடுத்துக்கொண்டு வந்து கொடுக்கச்சொல்ல, முதுகு வளைய ஒப்பாத பாரு வேறு வழியில்லாமல் துணியை எடுத்துக்கொண்டு போய், கனியின் கையில் கொடுக்காமல் விசிறியடித்துவிட்டுப் போக, தல பிரவீனுக்கு முதல் பஞ்சாயத்து வந்தது.

கனி ஸாரி சொல்லப்பட வேண்டும் என்று பிடிவாதம் பிடிக்க, பாரு இந்தப் பிரச்சினையில் தண்டனை என்ற பெயரில் நம்மை ஒதுக்கி வைக்கமாட்டானுங்களா, அப்படியாவது வேலை ஏதும் செய்யாமல் ஓபி அடித்துவிடலாம் எனும் நினைப்பில் ஸாரி கேட்க முடியாது என்று வம்படியாக கனியோடும், பிரவீனோடும் மல்லுக்கு நின்றார். பிரவீன் பதில் சொல்ல முயலும் போது கூட, ‘அய்யய்யோ இவன் ஒரு பொண்ணுன்னு பாக்காம ரேஜ் பண்ணிகிட்டு பக்கத்துல வந்து பேசறான்’ என்று கூப்பாடு போட்டுக் கொண்டிருந்தார். இறுதியில் எல்லோரும் நெருக்கியதும், வேறு வழியில்லாமல் கனியை மாக்கிங் செய்தபடியே நக்கலாக ‘ஸாரி’ கேட்டார் பாரு.

Bigg Boss 9

‘அவகிட்டயெல்லாம் மனுசன் பேச முடியுமா? அவளை செவுட்டுல ரெண்டு போட்டு அடக்கி வைக்காம, இவன் என்ன எல்லாத்தியும் கூடி வைச்சிகிட்டு பஞ்சாயத்து பண்ணிகிட்டிருக்கான்? என்ன தல இவன்?’ என்று உள்ளே சுபியும், வியானாவும் பதவியேற்ற சில நிமிடங்களிலேயே தல பிரவீனின் மிலிட்டரி ஒழுக்கத்தைக் காமெடி ஆக்கிக் கொண்டிருந்தார்கள்.

நடுவில், பிரவீனிடம் வந்த ஜெனிபாப்பா, ‘தல, முதல்ல வந்து புரவிசனை எடுத்துக்கொடுத்தா, நாங்க சோறு பொங்க ஆரம்பிப்போம். இவ இழவுல நின்னுகிட்டிருந்தீங்கன்னா இது இன்னிக்குள்ள முடியாது, ஒருத்தன்னும் சாப்பிட முடியாது, பாத்துக்குங்க.’ என்று எச்சரித்து விட்டுப் போனது அழகு. 

அடுத்து நாமினேஷன் நிகழ்ச்சி! கூடிப்பேசி டீலக்ஸ் ரூமில் சபரி மற்றும் எஃப்ஜேவுக்கு நாமினேஷன் ஃப்ரீ தந்தார்கள். மொத்தத்தில் சபரி, எஃப்ஜே, கனி, சுபி, பிரவீன் ஆகியோருடன் சுபியின் ஸ்பெஷல் பவரை வைத்து அவர் வியானாவைக் காப்பாற்றியதால், நாமினேஷனிலிருந்து இவர்கள் அனைவரும் ஒவ்வொரு காரணங்களுக்காக தப்பித்தனர். மற்றபடி போன வாரம் தப்பித்த பாருவும், கமருவும் இந்த வாரம் ஏகோபித்த ஆதரவையும், பலத்த ஓட்டுகளையும் வாங்கி நாமினேஷனில் இடம் பெற்றனர். கூடவே வினோத், அரோரா, கலை ஆகியோர் நாமினேஷனுக்குள் வந்தனர். கமரு அல்லது கலைக்கு அடுத்த வாரம் வழியனுப்பு விழா நடக்கும் என்பதை இப்போதே கணிக்க முடிகிறது. பார்ப்போம்!

கமருவை எங்கும் போக விடாமல் பிடித்து வைத்துக்கொண்டு யாரார் நமக்கு ஓட்டுப் போட்டிருப்பார்கள் என்ற ஆராய்ச்சியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தார் பந்தா பாரு. உலகமே அவருக்கு எதிராக இயங்கிக்கொண்டிருப்பதாக அப்படி ஓர் உறுதியான எண்ணம் அவருக்கு!

அடுத்து உள்ளாடைகள் தவிர, உடைகள், செருப்பு, அலங்காரப் பொருட்கள் என ஒன்று விடாமல் எல்லாவற்றையும் எடுத்து வெளியே வையுங்கள், இனி நான் தருவதுதான் உங்களுக்கான உடைகள் மற்றும் பொருட்கள் என்று சொன்னார் பிக்பாஸ்! எல்லா பெண்களும் ஆச்சரிய அதிர்ச்சிக்கு ஆளானார்கள். உண்மையான அதிர்ச்சி பாருவுக்குதான் இருந்திருக்க வேண்டும், ஆனால் அவர் உற்சாகமாக கத்திக் கொண்டிருந்தார், அனுபவிக்கும் போதுதான் அவருக்கு இது உறைக்கும்!

இன்றைய சுவாரசியம்:

வியானா பாப்பா, என்னத்தையோ சமைத்துக்கொண்டிருக்க, சரியான சபரி, ’உப்புப் பாக்குறேன், கொடு’ என்று கையை நீட்டினார். ‘அன்னா ஸூடு இர்க்குதுன்னா’ என்று பாப்பா எச்சரித்த பிறகும், ‘நான் பார்க்காத சூடா, நீ போடும்மா’ என்றார். பாப்பா கரண்டியால் கொஞ்சம் எடுத்து கையில் வைத்துவிட்டதும், கையை உதறிக்கொண்டு சபரி அலறிக்கொண்டு ஓடியதும் அழகு. சூடாக இருக்கிறது என்று பாப்பா மெனக்கெட்டு சொன்னதுக்கப்புறம் கையை நீட்டினா என்ன அர்த்தம் சபரி?

இன்றைய அதிசயம்:

நாமினேஷனின்போது கனி பார்வதியைக் குறிப்பிட்டு, 'அவங்களால இந்த வீட்ல உள்ள எல்லாரோட அமைதியும் பாதிக்கப்படுது' என்றார். பிக்பாஸ் யாரை, யார் சொன்னது என்று சொல்லாமல் காரணங்களைக் குறிப்பிடும்போது 'peace பாதிக்கப்படுது' என்று சொன்னார். நாமினேஷன் முடிந்து பாரு 'வீட்டோடPeace போகுதுனா, இவனுக சுற்றுலாவுக்கா வந்திருக்கானுக?' என்று தனியாகப் புலம்பிக்கொண்டிருந்தார். ஆக, அது தன்னைப் பற்றி யாரோ அடித்த கமெண்ட்தான் என்று தெரிகிறது பாருவுக்கு. அப்ப எல்லாம் வேணும்னே பண்றதுதான்!