Vj Paaru ,Praveen,Vinoth and Kamurudin  @Jiohotstar
BiggBoss 9

பாருவின் புதிய அடிமை! #Biggboss Day 19

‘ஆமா, இவன் கிழிச்சான்! நம்மகிட்டயும் மண்டையை ஆட்டிட்டு அந்தப் பக்கமும் போய் மண்டையை ஆட்டிருவான் இவன், மண்குதிரையை நம்பி ஆத்துல கூட இறங்கலாம், இந்த மானங்கெட்ட ஜென்மத்தை நம்பி தெருவுல கூட இறங்க முடியாது

ஆதி தாமிரா

கமரு, வினோத், பூசணி முன்னிலையில் பாரு கதறிக் கொண்டிருந்தார்! ‘போச்சே, போச்சே, ஃப்ரீ பாஸ் போச்சே, தலையில அடிச்சி சொன்னேனே, கால்ல விழுந்து கதறினேனே, எல்லாம் இந்தப் படுபாவி பூசணிப்பய காதுல வாங்காம கழுத்தறுத்துட்டானே, ரம்யாவுக்கு ஓகே பண்ணுன்னு சொன்னேனே, இப்படி சுபி என்னங்கன்னு கூப்பிட்டாங்கிற ஒரே காரணத்துக்காக உடைஞ்ச பாட்டில பூரா ஓகே பண்ணிட்டானே இந்தாளு’ என்று நிஜமாகவே கண்ணீர் வழிய, உதடு துடிக்க ஒப்பாரி வைத்துக்கொண்டிருந்தார்.

‘நீ கவலைப்படாதக்கா, இனி என்ன பிரச்சினைன்னாலும், பூசணியும் நானும் உன் கூட இருப்போம்’ என்று கமரு வாக்களித்தார்.

‘ஆமா, இவன் கிழிச்சான்! நம்மகிட்டயும் மண்டையை ஆட்டிட்டு அந்தப் பக்கமும் போய் மண்டையை ஆட்டிருவான் இவன், மண்குதிரையை நம்பி ஆத்துல கூட இறங்கலாம், இந்த மானங்கெட்ட ஜென்மத்தை நம்பி தெருவுல கூட இறங்க முடியாது’ என்று பூசணியை வெளுத்துக் கொண்டிருந்தார். பூசணியும், நாமெல்லாம் வீட்டில் பொண்டாட்டி திட்டும் போது தேமேயென்று உட்கார்ந்திருப்போமே அப்படியே எந்த ரியாக்ஷனும் காண்பிக்காமல் உட்கார்ந்து கொண்டிருந்தார்.

விக்கல்ஸ் விக்ரம், பாரு அழுத அழுகையைப் பார்த்து, சுபியிடம் போய் ’ஃப்ரீ பாஸ் எனக்கு வேண்டாம், வியானாவுக்கு தருவதைக்கூட மறுபரிசீலனை செய்து பாருவுக்குத் தர வழியிருக்கிறதான்னு பாரு’ என்று சொல்லுமளவுக்கு கல்மனசும் கரையும்படி, பார்ப்போர் மனத்தைக் கலக்கியது பாருவின் பர்ஃபாமன்ஸ்! ஆனால், அது நமக்கு ஜாலியாகத்தான் இருந்தது!

நாம் எதிர்பார்த்தது போலவே ஒரு கட்டத்தில், பிரச்சினை பெரிதானது. ’இவன் ஒரு கேவலமான ஆளு, இவனை நம்பினதுக்கு உனக்கு நல்லா வேணும்’ என்று கமரு, பாருவை ஆறுதல் படுத்துவதற்காக பூசணியைத் தாக்க, அவர் பொறுத்தது போதும் பொங்கியெழு என்பது போல பதிலடியில் இறங்கிவிட்டார். விவாதம் பண்ணத் தெரியாத கமருவும் அவரை அடிக்கப்போக, அடிதடி ஆகும் போலிருந்தது. ’மரத்துக்கு சேலை கட்டியிருந்தாக்கூட பின்னாலயே போயிடுவான் இந்தாளு’ என்று வினோத் நடுவில் புகுந்து அவருக்கான ஜாலி மீட்டரைப் போடவும் பிரச்சினை இன்னும் பெரிதானது.

Kamurudin and Vj Paaru in Jail

வினோத்தின் நோக்கம், பாரு, பூசணி ஜோடியை அறுத்து விடுவதுதான் என்பதாக இருக்குமோ? ஆனால், வினோத், ’மரத்துக்கு சேலை கட்டினால்’ என்று சொன்னதை, பூசணி வீட்டுக்குள் போய், ‘சுபிக்கு சேலை கட்டினால்’ என்று மாற்றிப் போட்டுவிட்டதில் வீடே கொஞ்ச நேரத்துக்குப் பற்றியெரிந்தது.

மறுநாள், எதுவுமே நடக்காதது போலவும், தான் கூலாகிவிட்டது போலவும் காண்பித்துக்கொள்ள வழக்கம் போல எஃப்ஜேவிடம் உரண்டை இழுக்க ஆரம்பித்தார் பாரு. எஃப்ஜேவும், பாருவும் பேசிக்கொள்வதை, அடேய் பிக்பாஸ் எடிட்டர்களா, கொஞ்சம் எடிட் பண்ணித் தூக்கிப் போட்டுடக்கூடாதா, நமக்குப் பார்க்க சகிக்கவில்லை!

அடுத்து பெஸ்ட், ஒர்ஸ்ட் பெர்ஃபார்மர்ஸ் தேர்ந்தெடுக்கும் நிகழ்ச்சி! ஒர்ஸ்ட்டாக எல்லோரும் பாருவை ஒருமனதாகக் குத்தித் தள்ளினார்கள். இன்னொருவராக பூசணியை விட அதிக ஓட்டுகள் வாங்கி கமர் தேர்வானார். ஒவ்வொருவரும் தங்கள் பெயரைச் சொல்லும் போது கமருவும், பாருவும் அதை முகபாவனைகளில் கிண்டல் செய்துகொண்டிருந்தார்கள். பாருவுக்கு உடனுக்குடன் ரியாக்ட் செய்யதாக வேண்டும் போலிருக்கிறது, கலை தன் பெயரைச் சொன்னதற்காக அவரது எதிரி எஃப்ஜேவின் பெயரைச் சொன்னதைக்கூட வாபஸ் வாங்கிவிட்டு கலையைச் சொல்லியிருக்கலாமே எனுமளவுக்கு பேசிக்கொண்டிருந்தார். ஒரு கட்டத்தில் பாருவின் பழைய அடியாட்கள் பூசணியும், கிரிஞ்சுக் கலையும் பதவி விலகிக்கொள்ள, புதிய அடியாளாக கமரு பதவியேற்றுக்கொண்டார். பெஸ்ட் பெர்ஃபார்மர்ஸாக பெரும்பாலானோர் ஓட்டுக்களைப் பெற்று விக்கல்ஸ் விக்ரமும், மொரட்டு பிரவீனும் தேர்வானார்கள்.

Tushaar and Viyana performing in fashion show task

கமரும் பாருவும் ஜெயிலுக்குள் போயும் திருந்தவில்லை. சொல்லப்போனால், பாரு வருவதால் கமருவும், கமரு வருவதால் பாருவும் அதை ஜாலியாகவே ஏற்றுக்கொண்டனர். இருந்தாலும் நடிப்பாக 'ஏன் பிக்பாஸ் டார்ச்சர் பண்றீங்க' என்று என்னத்தையோ பண்ணினார் பாரு. ‘நீதான் பாம்புன்னு தெரியாம, பூசணியையும் கலையும் வளர்த்துவிட்டே, பாரு இப்ப என்னாச்சுன்னு. எதிரியைக்கூட மன்னிக்கலாம், துரோகியை மன்னிக்கக்கூடாது’ என்று கமரு சொல்ல, ‘அட ஆமப்பா’ என்பது போல மண்டையை ஆட்டினார் பாரு. கமரு ஜாலியாகப் படுத்துக்கிடக்க, உள்ளே மற்றவர்கள் என்ன செய்கிறார்கள், பேசுகிறார்கள் என்பது தெரியாமல் பாருவின் மண்டை சூடாகிக் கொண்டிருப்பதை நம்மால் உணர முடிந்தது.

உள்ளே எஃப்ஜே, ஆதிரை காதல் பஞ்சாயத்து நடந்துகொண்டிருந்தது! ‘ஒரு நாள் நல்லா பேசறான், ஒரு நாள் மூஞ்சியைத் தூக்குறான், புரியலையே எனக்கு?’ என்பது ஆதிரையின் வழக்கு. ‘ஆமா, அப்படித்தான் இருப்பேன், இஷ்டமிருந்தா லவ் பண்ணு, இல்லைன்னா போய்த் தொலை. இதுல புரியறதுக்கு என்ன இருக்கு?’ என்பது எஃப்ஜேவின் பதில்! நாட்டாமையாக ’சரியான’ சபரியை கூப்பிட்டு நடுவில் உட்கார வைத்து பஞ்சாயத்து பேசச் சொன்னார்கள். அவரும் ’எவ்வளவோ பண்றோம், இதைப் பண்ணமாட்டோமா எழவு’ என்பது போலவே வந்து சுமுகமாகப் பஞ்சாயத்துப் பண்ணிவிட்டார்.