டீலக்ஸ் ஆட்கள் எழுந்த பிறகுதான் Wakeup Song என்று சொல்லி, இத்தனை நாள்களாக அலாரம் வைத்து சாதா அறை ஆட்களை எழுப்பிக்கொண்டிருந்த பிக்பாஸ், அதனால் ஒரு மண்ணும் பிரயோஜனமில்லை என்ன நினைத்தாரோ தெரியவில்லை இன்று டீலக்ஸ் ஆட்கள் எழுந்திருக்கும் முன்னமே வேக்கப் ஸாங் போட்டுவிட்டார்.
காலை எழுந்ததும் திருப்பள்ளியெழுச்சி என்பது போல பந்தா பாரு, தர்பூசணி, கலை குழு ரகசிய ஆலோசனையில் ஈடுபட்டுக் கொண்டிருந்தது.
பிறகு, எஃப்ஜேவும், ஆதிரையும் சொன்ன வேலையைச் செய்யாமல் ஜெனி பாப்பா வியானாவும், பந்தா பாருவும் ஸ்ட்ரைக் செய்தபடி, ஆடல் பாடல் என குஜாலாக இருந்தனர். எஃப்ஜே தல கனியிடம் முறையிட்டு, ‘அவர்களுக்கு சாப்பாடு கொடுக்கக்கூடாது’ என கொந்தளித்தார். இந்தாள் எப்போது பார்த்தாலும் சோற்றிலேயே குறியாக இருக்கிறார். மீண்டும், கெமி, பரவீன் என அனைவரும் பிரச்சினைக்குள் வந்து அந்த இடத்துக்கு சந்தைக்கடை இரைச்சலைக் கொண்டு வந்து பார்ப்பவர்களை இரிடேட் செய்துகொண்டிருந்தனர்.
இறுதியாக, பாரு கனி கொடுத்த தண்டனையை ஏற்றுக்கொண்டு தோப்புக்கரணம் போட்டார். பாருவின், ஈகோ உச்சத்திலிருக்கிறது. தோப்புக்கரணத்தைக்கூட அலட்சியமாக டான்ஸ் ஆடியபடி, சிரித்தபடி போட்டார். அது, நான் இதை ஈஸியாக எடுத்துக் கொள்கிறேன் என்று அனைவரிடமும் காண்பித்துக் கொள்வதற்காகத்தானே தவிர, அவரது ஈகோ உள்ளுக்குள் பலமாக அடிவாங்குவதை உணரமுடிந்தது.
தோப்புக்கரணம் போட்டுவிட்டு அவர் வீடு பெருக்கப் போய்விட்டாலும், அவர் கிளப்பி விட்ட பிரச்சினையால், கெமியும், பிரவீனும் பாரு மன்னிப்புக் கேக்காமல் சமையல் செய்ய மாட்டோம் என கனிவான கனியை டென்ஷனேற்றியபடி ஸ்ட்ரைக் செய்தார்கள். எஃப்ஜேவைக் கூட்டிவைத்து, சரியான படி விக்கல்ஸ் அறிவுரை சொன்னார். ஆனால், அது அவர் மண்டையில் ஏறப்போவதில்லை என்பது நமக்குத் தெரியும், விக்ரமுக்குத் தெரியாது. அதே நேரம் கெமியை, ‘உனக்கு யாரோடு பர்சனல் பிரச்சினைகள் இருந்தாலும் பின்னரோ, சரியான சந்தர்ப்பம் அமையும் போதே சரி செய்துகொள்ளலாம், ஆனால், பொது வேலைகள் பாதிக்கப்பட்டால் அது உனக்கே எதிராகத் திரும்பிவிடும், அது நல்லதல்ல’ என்று சரியானபடி சமாதானம் செய்து சமைக்க அனுப்பினார் சபரி!
ஜூஸ் டாஸ்க்கை நேற்று சவசவவென்று தொடங்கினார்கள் என்று பார்த்தோமல்லவா, அது பிக்பாஸுக்கும் உரைத்திருக்கிறது. க்யூசி கிறுக்குகளுக்கு கூடுதல் பவரைக் கொடுத்து, ஜூஸ் தயாரிப்பவர்கள், பாட்டில்கள் ரிஜக்ட் ஆனால் தேமேவென்று போகாமல் சண்டை போடுங்கள் என்றும் அறிவுரை சொல்லி இன்றைய ஆட்டத்துக்கு அனுப்பி வைத்தார். இதற்கு பிக்பாஸுக்கு கைமேல் பலன் கிடைத்தது இன்று! வீடே அல்லோலகல்லோலமாகிப் போனது!
முதலில் பாரு, எஃப்ஜேவிடம் போய் முன்னர் நடந்த பிரச்சினையை மனதில் வைத்துக்கொண்டு உரண்டை இழுத்தார். அதோடு, கனி, சுபி போன்ற நபர்கள், இந்த விளையாட்டுக்குச் சம்பந்தமில்லாமல், வீட்டுக்குள்ளிருந்து நீங்கள் கேட்டதைச் சமைத்துக் கொடுக்கிறேன், எங்களுக்கு ஃபேவரைட்டாக நடந்துகொள்ளுங்கள் என்று மற்றவர்களிடம் பேரம் பேசத் தொடங்கினார்கள். பட், இந்த டீலிங் பாருவுக்கும், பூசணிக்கும் மிகவும் பிடித்திருந்தது. அந்த விசயம் பேச்சோடு நிற்காமல், பாருவையும், பூசணியையும் தூக்கிக் கொண்டுபோய், கைகால் பிடித்துவிட்டு, முட்டை போண்டா, நூடுல்ஸ் என தயாரித்துக் கொண்டு வந்து வாயில் ஊட்டிக் கொண்டிருந்தார்கள். இதைப் பாருவும் என்ஜாய் செய்துகொண்டிருந்தார். இப்போதெல்லாம் மற்றவர்களின் ஈகோவைப் பற்றி எந்தக் கவலையும் அவருக்குக் கிடையாது. அது விளையாட்டு! அவருக்கு வரும் போது மட்டும் அது விளையாட்டு அல்ல, பர்சனலாகிவிடுகிறது!
கூடுதலாக, ஜூஸ் தயாரிப்பாளர்களின் பானையில் இவரே கூடுதலாக எஸன்ஸை விட்டு சொதப்பும் வேலையிலும் ஈடுபட்டார். ஏற்கெனவே வீட்டுக்குள் சமையில் மேடையில் பாரு உட்கார்ந்ததை எஃப் ஜே கண்டித்தார் அல்லவா, அதற்கு பழி வாங்கும் விதமாக - இப்போதான் பவர் இருக்கிறதே - எஃப் ஜேவின் ஜூஸ் கடை மேடையில் போய் உட்கார்ந்தார். தகுதியில்லாதவருக்கு அதிகாரம் கிடைத்தால் இப்படித்தான் ஆகும் என்பது போல இருந்தது அவர் செயல்பாடு. எந்த தரக்கட்டுப்பாட்டு அதிகாரி கடையில் போய் டேபிள்மேலெல்லாம் உட்காருவார்கள்? எஃப் ஜே அதைக் கண்டித்தும் பாரு கண்டுகொள்ளாமல் தன் இஷ்டத்துக்கு நடந்து கொண்டார்.
பாரு இந்த அட்டகாசம் செய்துகொண்டிருந்த நேரத்தில், பூசணி பாருவுக்காக யாரோ கொண்டு வந்த நூடுல்ஸையும் சேர்த்து விழுங்கிவிட, நட்பு என்றும் பாராமல் ’அடுத்தவங்க சாப்பாடையும் சேர்த்து சாப்பிடுறியே, உனக்கு வெட்கமாக இல்லையா? அறிவு இல்லையா.. சூடு சொரணை இல்லையா’ பூசணியைப் போட்டு புரட்டி எடுத்தார் பாரு. அவருக்கு அதெல்லாம் இருந்தால் ஏன் இவரைச் சுற்றிக்கொண்டிருக்கப் போகிறார்?
ஒரு கட்டத்தில் பாரு தன்னைக் கவனித்த சுபிக்கு ஆதரவாக தீர்ப்புத் தரச்சொல்ல, பூசணி, அவரைக் கவனித்த எஃப்ஜேவுக்கு ஆதரவாக தீர்ப்பை மாற்றி எழுத, இருவருக்கும் முட்டிக் கொண்டது. பாருவை, ‘ஒவ்வொரு வாட்டியும் உனக்கு சொல்லிக் கொடுத்துக்கிட்டே இருக்கணுமா, உனக்கு நான் என்னெல்லாம் பண்ணிகிட்டிருக்கேன், நான் சொல்றதைக் காது கொடுத்துக் கேட்கமாட்டியா? சிந்திக்கவே மாட்டியா? இந்த பிக்பாஸ் வீடே எனக்கு எதிரா சூழ்ச்சி பண்ணிகிட்டிருக்கும் போது நீ எனக்காக நிற்க மாட்டியா?’ என்று கதறவிட்டார் பூசணி. இந்தாளுக்கு இத்தனை நாளாக நாம் சகித்துக்கொண்டதற்கு இன்றைக்குதான் சரியான சம்பவம் செய்துவிட்டார். முட்டாள்களும், முரடர்களும் அவர்களுக்குள் குழு சேர்ந்துகொண்டால், எதிரி வெளியிலிருந்து வரத் தேவையில்லை எனும் அரசியல் பாடத்தையே இதிலிருந்து நாம் கற்றுக்கொள்ள முடிந்தது.
ஒரே பானையிலிருந்து ஊற்றிக்கொண்டு வந்த ஜூஸில் ஒரு பாட்டிலில் மணமில்லை, ஒரு பாட்டிலில் சுவையில்லை, ஒரு பாட்டிலில் நிறமில்லை என ரிஜக்ட் செய்து, ஆதிரையைப் பைத்தியம் பிடிக்க வைத்தார் பந்தா பாரு. கடுப்பில் அத்தனையையும் கொட்டிக் கவிழ்த்துவிட்டுப் போனார் ஆதிரை! கலை மேஜையைக் கலைத்துப் போட அந்த இடமே களேபரமானது. கடுப்பில், ‘பிரேக்’ சொல்லிவிட்டு பூசணி எழுந்து போகவும், அவர் கையைப் பிடித்து இழுத்து ‘ரெஸ்ட் விட்டாலும் பரவாயில்லை, என் பக்கத்திலேயே உக்காரு, எழுந்து போனா உன் மண்டையைக் கழுவிருவானுங்க, நான் திரும்ப உன் மண்டையைக் கழுவ நேரமிருக்காது’ என்று பாரு உட்கார வைத்த பின்பும் பிரச்சினை ஓயவில்லை. கமருதீன், வினோத் எல்லோரும் உள்ளே புகுந்து குட்டையைக் குழப்பிவிட, பூசணி பாருவுக்கு எதிராகப் பேச, பாரு உச்சக்கட்ட கோபத்தில், ‘இந்த ஆட்டமே வேண்டாம்’ என்று பேட்ஜைத் தூக்கிப் போட்டுவிட்டு ஓடிப்போனார். பாரு கோபத்தில் பூசணிமேல் குஷன் பில்லோவை வீசி எல்லாம் எறிந்து அவமானப்படுத்தினார். பூசணி சொரணையே இல்லாமல் பின்னால் நடந்து கொண்டிருந்தார். அவரும் லேசுப்பட்டவரல்ல... என்றைக்கேனும் இதற்கு பாருவைப் பழி வாங்குவார் என்பது உறுதி.
‘அய்யய்யோ, வீக்கெண்டுல நம்ம மண்டையை உருட்டுவானுங்களே’ என்று பயந்த கனிவான கனி, பாரு பின்னாடியே போய் அவரை சமாதானப்படுத்த முயல, அவரையும் அவமானப்படுத்தி கண்ணீரும், கம்பலையுமாக பெட்ரூமில் அடைக்கலமானார் பாரு!