லானில் ஒருவரையொருவர் குப்புற படுக்கப்போட்டு முதுகில் ஏறி உட்கார்ந்து குற்றால சீசன் களேபரம் மாதிரி, ஒருவருக்கொருவர் எண்ணெய் தேய்த்துவிட்டுக் கொண்டு தீபாவளி கொண்டாட்டத்துக்கு தயாராகிக் கொண்டிருந்தனர்.
நேற்றுதான் விசேவிடம் அவ்வளவு ஏத்து வாங்கிய துஷார், அதைப் பற்றிய எந்தக் கவலையுமில்லாமல், ஆதிரையுடன் ஓடிப்பிடித்து விளையாடிக்கொண்டிருந்தார். அந்தம்மா ஒரு செட் பிராப்பர்டியை தள்ளி உடைத்துவிட்டார். அடுத்து, அரோராவைக் கூப்பிட்டு, ‘நேத்து விசே சொன்னது புரிஞ்சுதா, நாம பேசறதைத்தான் சாடைமாடையாக எச்சரித்தார். அதனால் நாம இனி கவனமா நடந்துக்கணும்’ என்று சொன்னார். அடேய் அது சாடைமாடையாக இல்லை, இதை விட நேரடியாக யாராலும் சொல்லமுடியாது என்று நாம் நினைத்துக்கொண்டிருக்கும் போதே, அரோரா என்னவோ அவர்களது காதலையே விசே பிரேக்கப் பண்ணிக்கச் சொல்லிவிட்டார் என்பது போல குப்பென்று கண்ணீரும் கம்பலையுமாக நகர்ந்தார். அவரை சமாதானப்படுத்த பின்னாலேயே ஓடினார் துஷார். ‘இவங்க இன்னும் திருந்தல மாமா’!.
பந்தா பாருவும் அவரது டாக்சிக் கேங்கின் புது மெம்பர் கமருவும் 'டிரெஸ் அழகாக இருக்கிறதா' என்று விசாரித்துக்கொண்டு தங்களைத் தாங்களே புகழ்ந்து கொண்டிருந்தனர்.
டீலக்ஸ் அறைக்குள் ஜெனி பாப்பா வியானா, ஒரு சீன் சொல்லி, தர்பூசணியை நடிக்கச் சொன்னார். ’உனக்கு சீனே சொல்லத் தெரியல’ என்று அவர் சொல்ல, பாப்பா கோவித்துக்கொண்டு அழ ஆரம்பித்தது. ஊடே புகுந்த வினோத், ‘யோவ், பூசணி, நடிப்பு அரக்கன்னு சொல்லிகிட்டு ஊரை ஏமாத்திகிட்டிருக்கே, ஒரு சீன் சொன்னா நடிக்கத் தெரியல உனக்கு. தேவையில்லாம பாப்பாவை அழ வைச்சிகிட்டிருக்கே. நடிக்கத் தெரியலன்னா, நடிக்க தெரியலன்னு சொல்லிட்டுப்போ’ என்று கலாய்க்க, ‘என்னைப் பார்த்தா நடிக்கத் தெரியலன்னு சொன்ன, நான் தமிழ்நாட்டோட நடிப்பு அரக்கன்யா’ என்று பூசணி கொதித்தார். தொடர்ந்து வினோத்தும் அவரை ஏச, 'நீ பேசாத.. நீயெல்லாம் ஒரு ஆளா' என்று பூசணி கொந்தளிக்க.. மெய்யழகன் Duo, அடித்துக்கொண்டது.
தீபாவளி என்பதால் மதிய உணவை பிக்பாஸ் அனுப்பிவைத்தார். ஆரவாரமாக கத்தினாலும், எதுவும் சண்டை சல்லி இல்லாமல், வட்டமாக உட்கார்ந்து ஒழுங்காக சாப்பிட்டு முடித்தனர்.
அடுத்து ரூம் ஸ்வாப்பிங் டாஸ்க்குக்காக எஃப்ஜேவுக்கும், சபரிக்கும் ஒரு விளையாட்டு. அதில் ஜெயித்து, இருவரும் டீலக்ஸுக்கு வந்தார்கள், பதிலாக பாருவையும், வியானாவையும் சாதா அறைக்கு அனுப்பினார்கள். இருவரையும் அந்த விளையாட்டுக்குத் தேர்ந்தெடுத்ததே பாருதான். ஆனால், அவர்களிருவரும் பாருவையே சாதாவுக்கு அனுப்பிவைத்ததை ஏற்கமுடியாமல் பாரு அதிர்ச்சியடைந்தாலும், அதை வெளிக்காட்டிக் கொள்ளாமல் உற்சாகமாக இருப்பதாகக் காட்டிக்கொண்டார்.
அடுத்து நாமினேஷன். எஃப்ஜேவுக்கும், பூசணிக்கும் டீலக்ஸ் நாமினேஷன் ஃப்ரீ கிடைத்தது. ஓட்டுகள் பரவலாக விழுந்தன. ஆனால், ஒருத்தர் கூட கமருவை நாமினேட் செய்யாதது ஆச்சரியமான அநியாயமாக இருந்தது. இறுதியில் ஆதிரை, துஷார், கலை, பிரவீன், சுபி, ரம்யா, வியானா, அரோரா ஆகியோர் நாமினேட் செய்யப்பட்டனர். பூசணியும், பாருவும் கூட நாமினேட் ஆகவில்லை என்பது பாருவுக்கு இன்ப அதிர்ச்சியாக இருந்திருக்க வேண்டும். உற்சாகத்தை அவரால் அடக்க முடியவில்லை, துள்ளிக்குதித்தார். இந்த வாரம் முழுதும் பாருவின் அட்டகாசங்கள் உக்கிரமாக இருக்கும் என்று எதிர்பார்க்கலாம்.
இறுதியில் புரமோஷனுக்காக பைசன் படக்குழுவினர் உள்ளே வந்தனர். சின்னதாகப் பேசினாலும், துருவ் அழகாகப் பேசினார். மத்தாப்பு கொளுத்தி வாழ்த்து சொல்லிவிட்டு கிளம்பியது படக்குழு!