Biggboss Diwali Special - Vijaysethupathi Entry @Jiohotstar
BiggBoss 9

ஜெனி பாப்பாவின் ஆவேசம்! #Biggboss Day 14

குறட்டை, ஜோஸியம், தலை அமுக்கிவிடுதல், பெயரை மாற்றிச் சொல்லுதல் உட்பட பல விசயங்களை முன்னிட்டு வினோத் தர்பூசணியை கலாய்த்தார்.

ஆதி தாமிரா

தீபாவளி மூடில் இருப்பதால், இன்று இவர்களிடம் நல்லது ஏதாவது இருந்தால் தேடிக் கண்டுபிடித்து பாராட்டிவிட்டு அப்புறமாக பஞ்சாயத்துக்குப் போவோம் என்று ஆரம்பித்தார் விசே! அப்படி ஏதாவது இருந்தால்தானே?!

முதல் விசயமாக, கானா வினோத், தர்பீஸ் க்யூட் மோதல்களுக்கு வந்தார். இவர்களிருவரிடையே நடக்கும் கூத்துகள் விஜய் டிவி தின எபிஸோடில் பெரும்பாலும் வருவதில்லை. 24x7 ல் வருவதை பிக்பாஸ் ஆர்வலர்கள் ரீல்ஸாக எடிட் செய்து போடும்போதுதான் தெரியவருகிறது. கூடவே மறுநாள் மறுஒளிபரப்பு எபிஸோடையும் ரீகட் செய்வதாக கேள்விப்படுகிறோம். ஸ்டார் இந்தியா, ஜியோவுக்குக் கைமாறியதால், இந்த ஆண்டிலிருந்து கலர்ஸ் டிவியில் இதே நிகழ்ச்சியின் இன்னொரு எடிட்டட் வெர்ஷன் வேறு வருகிறது. இப்படியாக ஒருவர் பார்த்தது இன்னொருவர் பாராததாக இருக்கலாம் என்பதாக இந்த ஆண்டு அத்தனை வெர்ஷன்கள் கிடைக்கின்றன. யார் யாருக்கு எது வசதிப்படுகிறதோ அதில் பார்த்து என்ஜாய் செய்யுங்கள். பார்ப்பது சரி, என்ஜாய் செய்கிற அளவுக்கு இருக்கிறதா என்று நீங்கள் கேட்டால், எங்களிடம் பதிலில்லை!

Rat comedy skit done by - Praveen , Vikram and Sabari

குறட்டை, ஜோஸியம், தலை அமுக்கிவிடுதல், பெயரை மாற்றிச் சொல்லுதல் உட்பட பல விசயங்களை முன்னிட்டு வினோத் தர்பூசணியை கலாய்த்தார். வினோத்தின் கலாய்த்தல், காயப்படுத்தாத வகையில் ரசனையாக இருக்கிறது. விசேவும் அதைக்குறிப்பிட்டார்.

விசேவின் வேண்டுகோளின் படி எலி காமடி ஒன்றை விக்ரம், பிரவீன், சபரி மூவரும் நடித்துக் காண்பித்தார்கள். ப்ரவீணும், சபரியும் எலிபோல வாயை வைத்துக்கொண்டு நடிக்க, விக்கல்ஸ் விக்ரம் டயலாக்கில் சமாளித்தார். நடிப்பு ஓகே, ஸ்கிரிப்ட், டக்கென்று கேட்டதால் அவ்வளவுதான் முடியும் என்று காட்டிவிட்டார்கள்.

அடுத்து, ’யாரார் ஒழுங்காக வேலை செய்தது?’ என்றொரு கேள்வியை விசே எழுப்ப, டிஸ்மிஸ்டு தல துஷார், கிளீனிங், கிச்சன், பாத்திரம் என ஒழுக்கமாக ஒவ்வொரு பெயரை சொல்லிவிட்டு அமர்ந்தார். வாண்டடாக வண்டியில் ஏறி தன் அடிப்பொடி கிரிஞ்சு கலைக்கு சப்போர்ட்டாக, ‘அவன் சமையலில் அற்புதங்கள் செய்து கொண்டிருக்கிறான், ஆனால் யாரும் அவனுக்குத் தேவையான அங்கீகாரத்தை தரமறுக்கிறார்கள்’ என்று கிளப்பிவிட்டார் பந்தா பாரு. கலையை எழுப்பி, ‘யோவ், உன் உரிமைக்காக நீ போராடுய்யா, இல்லைன்னா பாரு, இப்படி பாரு வந்து உனக்காகப் போராடுறதையெல்லாம் நாம பார்க்க வேண்டியிருக்கும்’ என்று சொன்னார் விசே.

Kani and Viyana discussing about salt issue

அடுத்து உப்புக்கஞ்சி பஞ்சாயத்து மேடைக்கு வந்தது. ஜெனிபாப்பாவே ஆவேசமாகவும், சரியாகவும் பாயிண்டுகளை எடுத்துவைத்தார் என்றால் பார்த்துக் கொள்ளுங்களேன். கனிவான கனி, உப்புப் போட்டதற்கு சரியான விளக்கம் சொல்லமுடியாமல் ஒப்பேற்றி வைத்தார்.

‘ஒரு சேஃபான சூழ்நிலையில், இத்தனை பேரை, அதுவும் வயதிலும், அனுபவத்திலும் தன்னை விட மூத்த ஆட்களை வழிநடத்துவது எத்தனை அழகான வாய்ப்பு, அதிலிருந்து நாம் எவ்வளவு கற்க முடியும்? எந்த அளவுக்கு தன் ஆளுமையை வெளிக்காட்டிக் கொள்ள, வளர்த்துக்கொள்ள முடியும்! நீங்க என்னடான்னா டைவர்ஷன்ல சிக்கிக்கிட்டு, ஒரு காரியத்தையும் ஒழுங்கா செய்யல’ என்று துஷாரைப் பார்த்து வெளிப்படையாகவேக் கேட்டார் விசே. துஷாரிடமும் அதற்கு எந்தப் பதிலும் இல்லை.

இடைவேளையில், தற்காலிக வெற்றியில் திளைத்தது, பாரு, கலை, தர்பூசணிக் குழு. கம்மி கமரு, துஷாரிடம், ‘இங்க உள்ளே இருக்குற எல்லோருமே கண்டெஸ்டண்ட்டுடா, எல்லாரும் கண்டஸ்ட்டுதான். நல்லா தெரிஞ்சிக்க’ என்று தான் கண்டுபிடித்த அரிய தத்துவத்தைச் சொன்னார். முதலில் அவர்தான் அதைத் தெரிந்துகொள்ள வேண்டும். கண் முன்னால் இருந்த கண்ணாடி டம்ளரை கைதவறி தள்ளி விட்டு உடைத்துவிட்டு, ‘யார்ரா இங்க டம்ளரை வைச்சது?’ என்று அனிச்சையாகக் கேட்டார் தர்பூசணி. இதுதான் ஒருத்தரின் நிஜமான முதிர்ச்சி வெளிப்படும் இடம்!

Housemates sending off Apsara Cj after eviction

ஆதிரை, அரோராவிடம், கமருவைப் பற்றி, அவரின் வெளிவாழ்க்கையைப் பற்றி ஏதோ சொல்லியிருக்கிறார்! சொன்னது எந்த அளவுக்குத் தவறானது, அல்லது சொன்ன விசயத்தை பூதாகரமாக இவர் எந்த அளவுக்குக் கற்பனை செய்துகொண்டிருக்கிறாரோ தெரியவில்லை. கூடவே, விசேவிடம் வாங்கிய திட்டுகளெல்லாம் சேர்ந்து ஒரு இன்செக்யூரிடியை கமருவிடம் ஏற்படுத்தியிருக்கிறது. ஆதிரையிடம் மிக அநாகரிகமான வார்த்தைப் பிரயோகங்களோடு சண்டைக்குப் போனார். இடைவேளை முடிந்து வந்த விசே இதைக் கண்டிப்பார் என்று நினைத்தால் தாண்டிப்போனார்! கமரு வெளியே போகும் நாள் வெகுதொலைவில் இல்லை!


அடுத்து எவிக்‌ஷன். அப்சராவை வெளியேற்றினார்கள். பாரு, தர்பூசணி, ரம்யா போன்ற முதிர்ச்சியற்ற, சூழ்நிலையைப் புரிந்துகொள்ளாத, தவறுகளைச் செய்கிற போட்டியாளர்கள்தான் இந்த நிகழ்ச்சிக்குத் தேவை. அப்போதுதான் அதைச் சுட்டிக்காட்டி இப்படி இப்படி நடந்துகொள்ளுங்கள், இப்படி இப்படி நடந்துகொள்ளாதீர்கள் என அறிவுரை சொல்ல முடியும். நாமும் உச்சுக்கொட்டிக் கொண்டு பார்த்துக்கொண்டிருக்கலாம்.  அப்சராவை போல சண்டை சச்சரவுகளில் விருப்பமில்லாத, மனிதர்களைப் புரிந்துகொள்ளக்கூடிய, முதிர்ந்த போட்டியாளார்கள் இந்த நிகழ்ச்சிக்கு பொருத்தமானவர்களாக இருக்க மாட்டார்கள்தான். அழகாகப் பேசிவிட்டு விடை பெற்றார் அப்சரா! அழகான, மென்மையான, தன்மையான குரல் அவருக்கு!

தீபாவளி வாழ்த்துகள் சொல்லிவிட்டுக் கிளம்பினார் விசே. உங்களுக்கும் நமது இனிய தீபாவளி வாழ்த்துகள்!