Housemates getting ready for Task @jiohotstar
BiggBoss 9

காதலில் விழுந்தோம்! #Biggboss Day 10

'அதெப்படி திமிங்கலம், ஒண்ணுமே செய்யாமல் இந்தப் பொண்ணுகளுக்கு சட்டுபுட்டுனு லவ்வும் வந்து, பொசஸிவ்னஸும் வந்துடுது?' என்று நமக்குத் தோன்றியது!

ஆதி தாமிரா

ஒரு மூலையில் ஆதிரை, எஃப்ஜேவுக்கு எதையோ ஊட்டிவிட்டபடியே, ‘இருக்குற எல்லா மாக்கான்கிட்டயும் நல்லா பேசற, என்கிட்ட மட்டும் காண்டான காண்டாமிருகம் மாதிரி பேசறியே, உனக்கு என் மனசு ஏதாச்சும் புரியுதா?’ என்று கண்ணீரும், கம்பலையுமாக நீதி கேட்டதற்கு என்ன பதில் சொல்வது என்று தெரியாமல் விழித்துக் கொண்டிருந்தார் எஃப்ஜே. ஆதிரை என்னவோ காதல் கண்டெண்ட் பண்ணுவது போல தெரியவில்லை. நிஜமகாவே காதலில் விழுந்துவிட்டார் போலிருக்கிறது. ‘நீ முன்ன மாதிரி என்கிட்ட பேசறதில்ல’ என்றார், என்னவோ இவர்கள் பத்து வருசமா லவ் பண்ணிக்கொண்டிருந்த மாதிரியும், இந்த ஒரு வாரமாகத்தான் கேமரா இருப்பதால் இவன் காதலைக் காண்பிக்க மாட்டேன் என்கிறான் என்பது போலவும் இருந்தது அவர் பேச்சு!

’அதெப்படி திமிங்கலம், ஒண்ணுமே செய்யாமல் இந்தப் பொண்ணுகளுக்கு சட்டுபுட்டுனு லவ்வும் வந்து, பொசஸிவ்னஸும் வந்துடுது?’ என்று நமக்குதான் ஆச்சரியமாக இருக்கிறது. அது சரி, வந்த வேகத்திலேயே போய்விடவும் செய்யும் என்பதால் நமக்கென்ன பிரச்சினை? போகட்டும்!

Fj and Aurora discussing about the housemates

இன்னொரு மூலையில், துஷாரும், அரோராவும்! ‘எனக்கு கொசு கடிக்குது, ஈ மொய்க்குது, உன் மூஞ்சியிலயே முழிக்க விருப்பமில்லை, போயிடு துஷார்’ என்று அரோரா சொல்லிக்கொண்டிருந்தார். இன்னொரு பொஸஸிவ்னஸ் கதை போலிருக்கிறது. ‘என்னதான்டி பிரச்சினை? வெளிப்படையா சொல்லித் தொலையேன்’ என்ற துஷாருக்கு மண்டை கிறுக்குப் பிடிக்க வைத்து எதுவுமே சொல்லாமல் அனுப்பிவைத்தார். துஷாரும், ’ஏற்கனவே தலங்கிற பேர்ல இவனுகளை மேய்க்கிறது பெரும் பிரச்சினையா இருக்கு, இதுல இவ வேற!’ என்று எழுந்து போனார்.

அழுதுகொண்டிருந்த அரோராவை, சமாதானப்படுத்த எஃப்ஜே வந்தார். ’ஏண்டா உன் லவ்வு பிரச்சினையே பெருசா இருக்கு, இந்த அழகுல இவரு பெரிய நாட்டாமை, ஊர்ல லவ்வுல பாதிக்கப்பட்ட பொண்ணுங்களுக்கெல்லாம் இவருதான் ஆறுதல் சொல்லுவாரு’ என்று நாம் நினைத்துக் கொண்டிருக்கும் போதே, அரோராவைத் தோளில் சாய்த்து அணைத்து, ‘லவ்வுனா அப்படித்தான் இருக்கும், எனக்கும் அப்படித்தான் இருக்கு’ என்று சொல்வார் என்று நினைத்தால், ‘அங்க பாரு, உன்னைய நட்டாத்துல விட்டுட்டு, கெமிக்கு ரூட் விட்டுகிட்டு இருக்கான்’ என்று ஏற்கனவே எரிந்து கொண்டிருக்கும் தீயில் ஒரு கேன் பெட்ரோலை ஊற்றிவிட்டார். அடப்பாவி!

வேண்டுமென்றே, தன்னை மன்னிப்புக் கேட்க வைத்த கனியை, உப்புக்கஞ்சிக்காக மன்னிப்புக் கேட்க வைக்கவேண்டும் என்ற வெறியில் ஒரு புது பிரச்சினையைக் கிளம்பிப் பார்த்தார் பந்தா பாரு. ‘அடப்போடி உன் சோலியைப் பார்த்துகிட்டு!’ என்று அவரை கனி லெஃப்டில் டீல் செய்து அனுப்பிவிட்டார்.

வெளியே வந்த பாரு, அரோராவுடன் சேர்ந்து உள்ளிருக்கும் ஆண் போட்டியாளர்களுக்கு மார்க் போட்டு விளையாடி, ’எனக்கும் இளமை ஊஞ்சல்தான் ஆடிக்கிட்டிருக்கு’ என்று நிரூபிக்க முயன்றார். பக்கத்தில் கமருதீன்! அவருக்கும் நல்ல மார்க் கொடுத்துவிட்டு, பதிலுக்கு அவரை ‘என்னைப் பற்றி - குறிப்பாக என் அழகைப் பற்றி - சொல்’ என்று கேட்டு வாங்கியதெல்லாம் சகிக்கவில்லை!

Vj Paaru aruging with big boss housemates regarding food

அடுத்தது ஆக்ஷன் காட்சி! மாஸ்க் மாஸ்க் டாஸ்க் தொடர்ந்தது.

பத்து பேர் அடிபுடி என்று ஓடிக்கொண்டிருக்கும் டிராக்குக்குள்தான் வந்து நிற்பேன் என அங்கும் வந்து தன் அழிச்சாட்டியத்தைக் காண்பித்து கனியைக் கடுப்பேற்றிப் பார்த்தார் பாரு.

கெமி, பாருவைத் தொடர்ந்து அடுத்து வினோத், அரோரா வெளியேற்றப்பட்டனர். ஆட்டம் எதிர்பார்த்த அடிதடி இல்லாமல் ஸ்மூத்தாக செல்வதைப் பார்த்து, வெளியேறிய போட்டியாளர்களும் தடுப்பாளர்களாக களத்தில் இறங்கலாம் என்று பிக்பாஸ் ஒரு பெரிய சகுனி வேலை பார்த்துவிட்டார்.  அவர் நினைத்தது நடந்தது. அடுத்த ரவுண்டியே ஜெனிபாப்பா வியன்னாவின் மீது நான்கு பேர் விழுந்து அமுக்கி, கதற வைத்தனர். பாவம்டா டேய்!

பிசிகல் விளையாட்டு என்றால் வினோத்துக்கு ஒரு தனி உற்சாகமே வந்துவிடுகிறது, அழிச்சாட்டியம் பண்ணிக்கொண்டிருந்தார். ஒரு வாக்குவாதம் ஏற்பட்டபோது, தர்பூசணியைப் போட்டு பிதுக்கி எடுத்துவிட்டார். பூசணிக்கு ஏற்ற ஆள் இவர்தான்!

அடுத்தொரு எதிர்பாராத பூகம்பம் கிளம்பியது. இதற்கு ஆதாரக் காரணமும் பாருதான். அவர் அவருக்கென்று தனியே உருளைகிழங்குக் கறி கேட்டதால் ஏற்பட்ட சிக்கலில், டீலக்ஸ் ஆட்கள் வெங்காயம், தக்காளியை எடுத்துக்கொண்டு போய் வைத்துக்கொண்டனர். சமைக்கத் தேவையானவற்றை அனுமதி வாங்கி அவ்வப்போது எடுத்துக்கொள்ளுங்கள் என்று சொல்ல, மொத்த வீடும் கொந்தளித்தது. எப்போதும் தேமே என்று இருக்கும் விக்ரம் கூட இதில் காண்டாகி ஆத்திரமாகி கத்தினார். ஒரு கட்டத்தில், இந்த ஆட்டத்தையே பர்சனலாக எடுத்துக்கொண்டு ’பிச்சை எடுத்து சாப்பிடவா இந்த பிக்பாஸுக்கு வந்தோம்’ என்று அழவே ஆரம்பித்துவிட்டார். இந்தப் பிரச்சினை, எங்கெங்கேயோ திசை திரும்பி, ’நீ பொய் சொன்னியா? நான் பொய் சொன்னேனா’ என்று அரோராவுக்கும், ரம்யாவுக்கு இடையிலான சண்டையாகப் மாறி நின்றது.

A fiery discussion between housemates

அடுத்து ரம்யாவுக்கு சொந்தக் கதை, சோகக்கதை வாய்ப்பு. கோர்வையாக சொல்லத் தெரியாதது மற்றும் அவரே எடிட் செய்தது, போதாததுக்கு பிக்பாஸ் எடிட் என நமக்கு முழுதுமாகப் புரியவில்லை. தனக்கென யாருமே இல்லை, அநாதை ஆஸ்ரமத்தில் வளர்ந்தேன் என்கிறார். ஆனால், அறிமுகத்தில் இரண்டு அக்கா, அக்கா பொண்ணு, மாமா என்று சொன்னதெல்லாம் என்ன கதையென்று தெரியவில்லை.

இன்றைய ரசனை:

டீலக்ஸ் ரூமுக்குள், தன் தாட்டியமான உடலை வைத்துக்கொண்டு படுத்து உருண்டபடி, தரையைத் துடை துடை என்று துடைத்துக்கொண்டிருந்த விக்கல்ஸ் விக்ரம், ‘அஜக்கு இன்னா அஜக்குதான்’ மெட்டில், ‘அழுக்கு இன்னா அழுக்குதான், அதைக் கிளீன் பண்ண வந்தான் விக்ரம்தான்’ என்று புலம்பல் பாட்டு பாடிக்கொண்டே சின்சியராக வேலை செய்தது.