Housemates dancing for the morning song @jiohotstar
BiggBoss 9

கடுப்பான கனியாக மாறிய கனிவான கனி! #Biggboss9 - Day 8

இதற்குள் கிடைத்த இடைவெளியில் வெளியிலிருந்த சாப்பாட்டை எடுத்துக்கொண்டு வினோத் டீலக்ஸ் ரூமுக்குள் ஓடிவிட, இரண்டு புறமும் கத்திக்கொண்டிருந்தார்கள்.

ஆதி தாமிரா

சூப்பர் டீலக்ஸ் வாசிகள் எழுந்த பின்னால்தான், மொத்த குழுவினரும் சாப்பிடவே அனுமதி என்பது இந்த சீசன் விதிகளில் ஒன்று. ஆனால் இந்த டீலக்ஸ்வாசிகள் குப்புறக்கா அடித்துப் படுத்தால் காலையில் எழுந்திருப்பதில் அத்தனை சுணக்கம். சாதா வாசிகள் டீகூட குடிக்க முடியாமல், சாப்பிடவும் முடியாமல் கடுப்பாகி நாங்கள் மட்டும் தக்காளித்தொக்கா, எங்களுக்கும் உங்களை டார்ச்சர் செய்ய முடியும் என்று, எப்படி டார்ச்சர் செய்யலாம் என்று சிந்திக்க ஆரம்பித்தார்கள்.

முதலில் கனிவான கனி, வாசலில் நின்று எழுந்திருக்கச் சொல்லி கூட்டமாகக் கத்தி இரிடேட் செய்யலாம் என்றார். அதைக்கேட்ட சபரி, ‘அக்கா அது வேலைக்காகாது, அவங்க அதை எஞ்சாய் பண்ண ஆரம்பித்துவிட்டால் சொதப்பிவிடும்’ என்று சரியாக சொன்னார். ஆனாலும், கனி அதை முயன்று பார்த்தார். சபரி சொன்னதைப் போலவே சுபி, ரம்யா உள்ளிட்டோர் பெட்டில் ஏறி இவர்களின் கத்தலுக்கு ஏற்ப குத்துடான்ஸே ஆடத்தொடங்கிவிட்டார்கள்.

இதனால் கனிவான கனி, கடுப்பான கனியாக மாறி அவர்களுக்கு ஊற்றுவதற்காக வைத்திருந்த கஞ்சியில் உப்பைக் கொட்டினார். இரண்டு ஸ்பூன் அதிகமாகப் போட்டால்கூட பரவாயில்லை. முழு உப்பு டப்பாவையும் கொட்டிவிட்டார். அவர்கள் உணவு நேரத்தை தாமதம் செய்கிறார்கள் என்ற காரணத்துக்காக அவர்கள் சாப்பிடவே முடியாதபடி செய்தது அநியாயம்தான். கனி போகிற டிராக் சரியில்லை.

Housemates waking up the deluxe members

இந்தக்கூத்துகளுக்கு இடையே எஃப்ஜேவும், ஆதிரையும் ஒரு லவ் டிராக்கை கிரியேட் பண்ணினால் சில பல வாரங்களுக்கு தப்பித்து ஓட்டிவிடலாம் என்ற திட்டத்துடன் அதைத் தொடங்கும் முஸ்தீபுகளின் இருந்தனர். ஏற்கனவே துஷார், அரோரா டிராக் ஒன்று போய்க்கொண்டிருக்கிறது. எது எந்த முட்டுச்சந்தில் போய் முட்டி நிற்கப்போகிறது என்று ஓரிரு வாரங்களில் தெரிந்துவிடும். எப்படியாவது கண்டெண்ட் கிடைத்தால் சரி என்று பிக்பாஸும் இதை ரசிக்க ஆரம்பித்துவிட்டாரோ என்பது விரல்களுக்கெல்லாம் க்ளோசப் வைத்து அவர்கள் நெருக்கத்தைக் காட்டுவதிலிருந்து தெரிந்தது.

உப்புகஞ்சி பிரச்சினையில், டீலக்ஸ்காரர்கள் சற்று நேரம் அழுது முடித்துவிட்டு, சரி மன்னிப்புக் கேட்டால் விட்டுவிடலாம் என்று ஒரு முடிவுக்கு வந்தனர். அவர்களைக் மன்னிப்புக் கேட்கச்சொல்லி அவர்கள் மறுத்தால் Plan B-யை யோசிக்கலாம் என்று நினைக்காமல் கேனைத்தனமாக முன்னதாகவே, அவர்கள் மன்னிப்புக் கேட்காவிட்டால் எல்லோரையும் தோப்புக்கரணம் போடச் சொல்லலாம், அதுவும் முடியாவிட்டால் இரண்டு பேரையாவது தோப்புக்கரணம் போடச்சொல்லலாம், அதுவும் முடியாவிட்டால் பெஞ்சு மேல ஏறச்சொல்லலாம், என்று ஒரு சீரியஸ் பிரச்சினையை நமத்துப் போகச் செய்து கொண்டிருந்தனர். இரண்டு குழுவுகளுக்கும் மத்தியில் அல்லாடிக்கொண்டிருந்தார் தல துஷார்.

அதன் பின், முந்தின நாள் ஆக்கி வைத்த சோறு இருந்திருக்கும் போலத் தெரிகிறது. அதைத்தான் கஞ்சியாக்கி உப்பு போட்டு வைத்திருக்கிறார்கள் என்று நாம் நினைத்திருந்தோம். அது வேறு கஞ்சி போலிருக்கிறது. அதை சாதாவாசிகள் ஆளுக்கொரு கப்பில் போட்டு தண்ணீர் விட்டு சாப்பிட ஆரம்பித்தார்கள். கண்ணாடிக்கு அந்தப் புறமிருந்து அரோரா, இந்தப் பக்கமிருக்கும் ஆதிரைக்கு முத்தம் கொடுக்கவும், தர்பூசணியும் ஓடிவந்து எனக்கு என்று கேட்டார். அரோராவும் கண்ணாடிக்கு அந்தபுறம், வக்கீல் 'வெடிமுத்து' வடிவேலுவுக்கு, 'ஐஸ்' மும்தாஜ் கார் கண்ணாடியில் கொடுத்த முத்தம் போன்று ஒன்றைக் கொடுத்தார். இவ்வளவு ரசனை கெட்டவராக அரோரா இருப்பார் என்பது நாம் எதிர்பாராதது. 

Housemates helped Ramya after she fainted.

இது போதாது என்று ஜக்கூஸியில் குளித்துக்கொண்டிருந்த சுபி, வியானா, அரோராவை ஜொள் விட்டுக்கொண்டு பார்த்துக்கொண்டு வேறு இருந்தார் தர்பூசணி ஸ்டார். கண்டெண்ட் என்ற பெயரில் அநாகரிகமான எல்லாவற்றையும் செய்து கொண்டிருக்கிறார் என்பது தெளிவாகவே தெரிந்தது.

இதற்குள் கிடைத்த இடைவெளியில் வெளியிலிருந்த சாப்பாட்டை எடுத்துக்கொண்டு வினோத் டீலக்ஸ் ரூமுக்குள் ஓடிவிட, இரண்டு புறமும் கத்திக்கொண்டிருந்தார்கள். அதனால் யாருக்கு என்ன பிரச்சினை என்று நாம் விழித்துக்கொண்டிருந்தோம், ஐயா பிக்பாஸ் எடிட்டர்மார்களே, கொஞ்சம் புரிகிற மாதிரி எடிட் பண்ணுங்கப்பா! அதற்குள் சாப்பாடில்லாமல் ரம்யா மயங்கிவிழுந்தாராம், என்ன நேரமாச்சு, அப்படி என்ன கொலைப்பட்டினி அது என்று நமக்கு ஒன்றும் புரியவில்லை.

இரண்டு ஏரியாக்களிலிருந்தும் தலா மூவர் வந்து விஜய்சேதுபதி பட கிளிப்பிங் ஒன்றுக்கு டப்பிங் செய்ய வேண்டும் என்று ஒரு டாஸ்க் கொடுத்தார் பிக்பாஸ். டீலக்ஸ் வாசிகள் ஜெயித்தால், அவர்கள் அங்கேயே இருந்து கொள்ளலாம்; சாதா வாசிகள் ஜெயித்தால் இரண்டு டீலக்ஸ் வாசிகள் வெளியே வந்து, மூன்று சாதா வாசிகளுக்கு டீலக்ஸ் அறைக்குள் அனுமதி கிடைக்கும் என்று கண்டிஷனும் போட்டார் பிக்பாஸ். ரொம்ப நாட்கள் கழித்து ஓர் உருப்படியான டாஸ்க்காக தெரிந்தது. ஒரு முறை காட்சியைப் பார்த்துவிட்டு வந்து இதைச் செய்வது மிகக்கடினம். போட்டியாளர்களும் அவர்களால் முடிந்தவரை சிறப்பாக முயற்சி செய்தார்கள். விக்கல் விக்ரம் முடிந்தவரை வசனங்களைப் பேசி சிறப்பாகவே முயற்சித்தார். இதிலும் மூக்கை நுழைத்து தர்பூசணி, பந்தா பாரு ஜோடி முடிந்தவரை மண்ணள்ளிப் போட்டது.

இந்தப் போட்டியில் டீலக்ஸ் பகுதி தோற்றதால், அடுத்து ஸ்வாப்பிங் நடந்தது. எந்தக் குழப்பமும் இல்லாமல் டீலக்ஸ் குழு அரோராவையும், கமருதீனையும் செலக்ட் செய்ய அவர்கள் சாதா வாசிகள் ஆனார்கள். பெரிய அடிதடி இல்லாமல், சாதா குழுவும் பாரு, தர்பூசணி, ஆதிரையை அனுப்ப முடிவு செய்தனர். இதை ஏதோ சாதனை என்று பாரு வழக்கம்போல குதித்துக் கொண்டாடினார்.

Arguments between Vj Paaru and Ramya regarding Nominations

அடுத்து நாமினேஷன் விலக்குக்கான விவாதம் நடந்தது. வியானா, வினோத், ஆதிரை என மூவர் விலக்கு பெற்றனர். பூசணியும், பாருவும் கடுமையாகப் போராடியும் எந்தப் பலனுமில்லை. அவர்களின் பருப்பு ரம்யாவிடம் வேகவில்லை என்பதை அறிந்து இருவரும் பின்வாங்கினர். 

அடுத்து நாமினேஷன் நடந்தது. பூசணி, கிரிஞ்சு கலையைத் தவிர மற்ற அனைவரின் 15 ஓட்டுகளையும் பெற்று பந்தா பாரு பிக்பாஸ் வரலாற்றிலேயே சாதனை செய்திருப்பார் என நினைக்கிறேன். கடைசியில் அவரோடு சேர்த்து அவரது நண்பர் பூசணியையும், கூடவே, கமருதீன், அரோரா, எஃப்ஜே, அப்சராவையும் தள்ளியது போதாமல் ஒரு ஓட்டு வாங்கிய சபரி, ரம்யா, கெமி ஆகியோரையும் நாமினேஷனில் சேர்த்துத்தள்ளி சதி செய்தார் பிக்பாஸ். 

இன்றைய சுவாரஸ்யம்:

சாதா அறையிலிருந்து டீலக்ஸ் அறைக்குள் யார் யாரை அனுப்பலாம் என்று சாதா வாசிகள் பேசிக்கொண்டிருந்தார்கள். பந்தா பாரு, பூசணி நாயகன் இருவரும் வரும் முன்னரே டிஸ்கஷனை ஆரம்பித்தது சாதா குழு. பாருவை அனுப்பிவிடலாமா என்று சரியான சபரி கேட்டதுமே கனிவான கனி கையெடுத்துக்கும்பிட்டு புண்ணியமாப் போகும் அனுப்பிவிடலாம் என்றது. இருக்கும் இடம் சாதாவாக இருந்தாலும் அங்கே பாரு இல்லாவிட்டாலே அது ஸ்பெஷல்தான் என்று வீட்டு வாசிகள் நினைக்குமளவு பந்தா பாருவின் அலப்பறை உடல்மொழியால் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள் என்பது புரிந்தது!