Vijaysethupathi Entry in Saturday Episode @jiohotstar
BiggBoss 9

அழுது புலம்பிய அயன் லேடி! #Biggboss 9 - Day 6

’எல்லோரும் எழுந்து நின்னு பேசறப்போ உங்களுக்கு மட்டும் என்ன? இது ஒண்ணும் உங்க வீடில்லை, மருவாதியா எழுந்து நின்னு பதில் சொல்லுங்க’ - கோபமான விஜய் சேதுபதி!

ஆதி தாமிரா

நந்தினி வெளியே போகக்காரணமான கலவரம், கனியிடம் ஆரம்பித்திருக்கிறது போல! ’நான் ஒண்ணுமே பண்ணலையே’ என்று அவரது அதிர்ச்சியை போயும் போயும் பாருவிடம் விளக்கிக் கொண்டிருந்தார் கனி. ‘ஆமாக்கா, அவ ஒரு மெண்டல்..’ என்று வாய் வரை வந்துவிட்ட வார்த்தைகளை மென்று விழுங்கி, ‘ஆமாக்கா, அவ ஒரு மாதிரி..’ என்று மாற்றிச் சொன்னார் பந்தா பாரு

கம்பிகளைப் பிடித்துக்கொண்டு பச்சைக்கிளி வடிவேலு போல காத்திருந்த ஜெனிபாப்பாவையும், வினோத்தையும் சிறையிலிருந்து விடுதலை செய்தார் பிக்பாஸ்!

சாதா ரூம், டீலக்ஸ் ரூம் பிரச்சினையை தல துஷார் முன்னிலையில் மீண்டும் பஞ்சாயத்து வைத்தார்கள். பஞ்சாயத்தைப் பேசமால், ரம்யாவும், ஆதிரையும் கைகலப்பில் இறங்குவதற்கான வேலைகளை ஆரம்பிக்க, ‘சிட்டிக்கு கோவம் வருது வசீ’ என்பது போல துஷார் கோபப்பட்டுப் பார்த்த பின்னும் அதற்குப் பலனில்லை, பஞ்சாயத்தை சந்தைக் கடையாக்கினார்கள். 

Aathirai's Conflicts on Standing

நேற்று ஏதோ சொன்னதற்காக தர்பூசணியிடம் ஸாரி சொல்ல வந்த கம்ருதீனை பூசணியும் மதிக்கவில்லை. பூசணியின் வக்கீல் பாருவும், அவர் பங்குக்கு மதிக்காமல் பேசி அனுப்பினார். ஆதிரை மடியில் படுத்துக் கிடந்த எஃப்ஜேவை, ரம்யாவும், கெமியும் சேர்ந்து கலாய்க்க, இன்னொரு பஞ்சாயத்து ஆரம்பிக்கும் போலிருந்தது. நல்லவேளையாக அதை அங்கேயே முடித்துவைத்தார்கள்.

அடுத்து, முதல் வாரயிறுதி ஆலமரத்தடிப் பஞ்சாயத்தைப் பேச நாட்டாமை விஜய் சேதுபதி வந்தார். ’போன சீசன்லயே மைதா மாவு மாதிரி நடத்திட்டீங்கன்னு, உங்க பேர்லயே பெரிய பஞ்சாயத்து இருக்கு. இந்த வாட்டி ஆரம்பத்துலயே கொஞ்சம் டெரரா நடந்துக்கோங்க’ என்று சொல்லி அனுப்பியிருப்பாங்க போல! வெளியே சிரிச்சிப் பேசினாலும், உள்ளுக்குள் சற்று காண்டாகத்தான் வந்திருப்பார் போலிருக்கிறது.

அது ஆதிரை உட்கார்ந்துகொண்டு பெயர் சொன்னதைப் பிடித்துக்கொண்டு ’எல்லோரும் எழுந்து நின்னு பேசறப்போ உங்களுக்கு மட்டும் என்ன? இது ஒண்ணும் உங்க வீடில்லை, மருவாதியா எழுந்து நின்னு பதில் சொல்லுங்க’ என்று சொன்னதிலேயே தெரிந்தது. வழக்கமாக  சுயமரியாதை பேசுகிற விசேக்கு, இதெல்லாம் ஒரு குற்றம் குறையாகவே தெரிந்திருக்கக்கூடாது. அதற்கு பதில் சொல்ல முயன்ற ஆதிரையை பேச விடாமல் வாயிலேயே குத்தி அமர வைத்தார். இதற்கெல்லாம் காரணம், ஆதிரை பிக்பாஸையே எதிர்த்து உள்ளே சொன்ன ஸ்டேட்மெண்ட்களாக இருக்கலாம். அதிகாரம், யாரைக் கேள்வி கேட்கிறோம் என்பதில் இருக்கிறது!

Diwakar Confessing his contribution towards show

நந்தினி வெளியே போனதற்காக, ‘என்னென்னவோ இண்டர்வ்யூ, சைகாலஜிகல் தேர்வெல்லாம் வைத்துதான் பிக்பாஸுக்கு ஆளெடுக்குறாங்க, அப்படியும் சில சமயம் இப்படி ஆயிடுது’ என்று பிக்பாஸுக்கு வக்காலத்து வாங்கினார். அப்படியெல்லாம் சைக்காலஜி தேர்வு வைத்து ஆள் எடுத்திருந்தால், மீரா மிதுன், கஸ்தூரி, சுசித்ரா, பிரதீப், அஸீம் இவர்களெல்லாம் எப்படி உள்ளே போயிருக்க முடியும்? அஸீம் கப்பெல்லாம் வேறு ஜெயித்திருக்கிறார். சரி போகட்டும்!

பூமர் காந்தி பண்றது, பூமர்த்தனமாக இருக்கிறது என புதிதாகக் கண்டுபிடித்து அதற்கு ஒரு பஞ்சாயத்து வைத்தார். ’பெண்கள்னா பொத்துனாப்பல இருக்கணும். பெண்களுக்கு பொறாமை, பேராசை அதிகம்’ என்று அவர் உதிர்த்த முத்துக்களைப் பற்றி மற்றவர்களைச் சொல்ல வைத்து அதை பூமருக்கே புரியவைக்க முயற்சி பண்ணினார். புரிந்திருக்க வாய்ப்பேயில்லை, ஆனாலும் நன்றி சொல்லிவிட்டு அமர்ந்தார்.

பூசணியின் அட்டகாசங்கள் அடுத்த பஞ்சாயத்து. நேரடியாக பேசினாலே அந்த ஆளுக்கு புரியாது, விசே மறைமுகமாகப் பேசுகிறேன் பேர்வழி என்று, ‘மற்றவங்க பேசறதையும் காது கொடுத்து கேளுங்க திவாகர், திவாகரை கத்துக்க விடுங்க, திவாகர் இன்னும் கத்துகிட்டா நல்லதுதானே’ என்றதற்கு, ‘எந்த திவாகரைச் சொல்லுகிறார்’ என்பது போல திருதிருவென விழித்துக்கொண்டிருந்தார். ‘வெளிய வந்து நடிப்பு ஸ்கூல் ஆரம்பிச்சா என்னையும் சேர்த்துக்குங்க திவாகர்’ என்று விசே சொன்னதற்கு அந்தாளும், ‘யாரா இருந்தாலும் கண்டிப்பா பீஸ் கட்டணும்’ என்று மனதில் நினைத்தபடி நடிப்பு ஸ்கூலை கனவு கண்டவாறே அமர்ந்தார். பூசணி நாயகனுக்கு லைவ் ஆடியன்ஸ் கைதட்டியபோது 'இப்படித்தான் நீங்க கைதட்டி ஏத்தி விடறீங்க!' என்று சொன்ன விசே-வே 'நானும் உங்ககிட்ட கத்துக்கணும்' என்று ஏத்தி விட்டது முரண். வெளியே வந்தால் நூறு பேட்டிகளில் இதை பூசணி நாயகன் சொல்லபோவது உறுதி! 'பிக்பாஸ்ல விஜய் சேதுபதி அண்ணனே என் நடிப்ப பாராடினாரு தங்கம்...'

போகிற போக்கில் பதுங்கு குழி அரோராவுக்கு ஒரு குட்டு, தண்ணீர் பிடிக்கிற பிரச்சினைக்காக கம்ருதீனுக்கு ஒரு குட்டு, எஃப்ஜேவுக்கு ஒரு குட்டு என குட்டுகள் சகட்டு மேனிக்கு விழுந்தன. ஒரே ஒரு நாள் தூங்கிவிட்டு இந்த கமருதீன் படுகிறபாடு இருக்கே, பாவம்! 

இடைவேளை கேப்பில் அரோரா, விசே திட்டியதில் அழுகை பொங்க விசேவுக்கே ஒரு பூசை கொடுத்தார். எதிர்பார்த்தது போலவே அடுத்து வந்த விசே, ‘அதெல்லாம் உங்க நல்லதுக்குதான் சொல்றேன் அரோரா, அது கூட உங்களுக்குதான், இது கூட உங்களை நினைச்சித்தான்’ என்று கார்த்திக் கவுண்டமணியிடம் சொல்வது மாதிரி சமாதானப்படுத்தினார்.

அடுத்து, கடைசி பஞ்சாயத்து! யாரெல்லாம் ஃபேக்காக இருந்தார்கள் என கருத்து சொல்ல வேண்டும். தர்பூசணி ஏனோ தானோவென்று இதை ஆரம்பித்துவைக்க, அடுத்து வந்த அனைவரும் சொல்லி வைத்தாற்போல பந்தா பாருவைப் போட்டு புரட்டி எடுத்து விட்டார்கள். இது நடக்கும் என்று தெரியும், ஆனால், இத்தனைச் சீக்கிரம் நடக்குமென்று நாம் எதிர்பார்க்கவில்லை. அதை எதிர்கொள்ள முடியாமல் கிண்டலாக செய்கைகளை செய்துகொண்டிருந்த பாருவை, விசேவும் ஒரு போடு போட்டார். இது அடுத்துவரும் நாட்களில் அழுகை பூகம்பமாக வெடிக்கும் என்று கருதுகிறோம்.

VJ Paaru Crying in Biggboss 9

இன்றைய ரசனை:

அத்தனை குத்து வாங்கிய பாரு, உண்மையை ரியலைஸ் செய்யமுடியாமல் நாம் நினைத்தது போலவே, கிரிஞ்சுவிடமும், பூசணியிடமும் வந்து, ‘எல்லோரும் என்னை நடிக்கிறான்னு சொல்றாங்க, ஆனா நான் நடிக்கவே இல்லை’ என்று அழுது புலம்பினார். ‘நீ ஒரு அயன் லேடி, அயன் லேடி அழுகலாமா?’ என்று தர்பூசணி சமாதானம் செய்தார். பாரு சொன்னது சரிதான், போட்டியாளர்கள் சொன்னது போல அவர் நடிக்கவில்லை, அவர் குணமே அதுதான். ஆனால், அது அவருக்குத் தெரியப்போவதேயில்லை!

இன்றைய காமெடி:

இந்த நிகழ்ச்சி ஸ்க்ரிப்டட் என்று பூசணிஸ்டார் நினைத்ததுக்கு மாறாக ’கால் பக்கெட் தண்ணீரில் குளிக்கிறோம், ரெண்டு வேளை சாப்பிடுறோம், ஒவ்வொரு நாளும் ஒரு யுகம் மாதிரி இருக்கு, ஒரே டாய்லெட்டை 20 பேர் யூஸ் பண்றோம்,  நினைச்சது மாதிரி 11 மணிக்கெல்லாம் ஜூஸ் ஏதும் வர்றதில்லை சார்’ என்று புலம்பியது.